
'தேர்வு ரிசல்ட் வரும் நேரத்தில, பெயில் ஆகிப்போன பல பிள்ளைக, வீட்டை விட்டு ஓடிப் போயிருவாங்க...' என்றேன் குப்பண்ணாவிடம்!
'ஓடிப் போறது தான் போறாங்க; துரைசாமியைப் போல, ஏதாவது ஒரு லட்சியத்துக்காக ஓடிப்போய் வந்தால் தேவல...' என்றார்.
'குப்பண்ணா... உங்க புதிர் நெடி தாங்கல; புரிகிற மாதிரி சொல்லுங்க...' என்றேன்.
'கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே கலங்கல்ன்னு ஒரு கிராமம். அங்கே வீட்டுக்கு அடங்காத பிள்ளை தான் துரைசாமி. அந்த ஊருக்கு முதன் முதலா ஒரு மோட்டார் சைக்கிள் வந்துச்சு; மத்தவங்கெல்லாம் அந்த வண்டியில் வந்த வெள்ளைக்காரரைத் தான் பாத்தாங்க. அவர் ஒரு சர்வேயர்...
'ஆனா, சிறுவன் துரைசாமிக்கோ, அந்த மோட்டார் சைக்கிளின் மேல் கவனம். அது எப்படி ஓடுதுன்னு ஆச்சரியம். எப்படியாவது அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பாத்துடணும்ன்னு கொள்ளை ஆசை.
'ஒரு கிராமத்துப் பள்ளிக்கூட பையன், வெள்ளைக்கார ஆபீசரிடம் போய், எப்படி தன் ஆசையை சொல்வான்... மனசுக்குள்ளேயே நினைச்சு புழுங்கியபடி இருந்தான். கடைசியில ஊரை விட்டே புறப்பட்டுட்டான்...'
'எங்கே?'
'கோயம்புத்தூருக்குத் தான்; அங்கு தான் அந்த வெள்ளைக்கார சர்வேயர் இருந்தார். அவர் எங்க இருக்கார்ன்னு சிறுவனுக்குத் தெரியல; கையில காசுமில்ல. வயிற்று பாட்டுக்கு வழி? கடைசியில ஒரு ஓட்டல்ல டேபிள் கிளீனராக சேர்ந்து கொண்டான்...'
'சவுகரியமா போக்சு; பலகாரங்கள் மிச்ச மீதியெல்லாம் கிடைக்கும்...' என்றேன்.
'மூன்று ஆண்டுகள் அதே இடத்தில் வேலை செய்து, அவன் சேர்த்து வைத்த மூலதனம், 400 ரூபாய். அந்தச் சமயத்துல அந்த வெள்ளைக்கார சர்வேயரின் முகவரி, அவனுக்கு தெரிய வந்தது. பணத்தை எடுத்துட்டு போய், அவர் காலடியில் வைச்சு, தன் விருப்பத்தை சொன்னான். இளைஞனின் விடா முயற்சியைப் பாராட்டி, அவனுக்கு மோட்டார் சைக்கிளைக் கொடுத்து விட்டார் அந்த வெள்ளைக்கார துரை.
'உலகத்தையே விலைக்கு வாங்கிவிட்ட பெருமையோடு, மோட்டார் சைக்கிளுடன் வெளியேறினான் துரைசாமி. நம்மைப் போன்றவங்கன்னா, அத்துடன் திருப்தி அடைஞ்சுடுவாங்க. ஆனா, துரைசாமி திருப்தி அடையல...
'மோட்டார் சைக்கிளை அக்கு வேறு, ஆணி வேறாக பிரிப்பதும், பூட்டுவதுமாக இருந்தான். பின், அதன் நுணுக்கங்களையெல்லாம் தெரிஞ்சுகிட்டவன், மெக்கானிக்காக ஆகிட்டான். அந்த துரைசாமி தான், பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான இன்ஜினியர்களை தயார் செய்த, ஜி.டி.நாயுடு...' என்றார்.
'ஏன் குப்பண்ணா சார்... ஆணி என்றால் தெரிகிறது; அக்கு என்றால்?'
'மறை என்று ஒரு அர்த்தம் இருக்கு; போல்ட் வேறு, நட்டு வேறாக ஆக்கி விடுவார்ன்னு சொல்வது தான் அது...' என்றார் குப்ஸ்!
'நான் அஞ்சாம் வகுப்பு படிக்கிற போது, சமூகவியல் பாடத்தை நடத்த, ஒரு ஆசிரியர் வந்திருந்தார். அவர் கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை மாணவர்கள் சொல்லாவிட்டால், 'இந்த குடிசைத் தொழில்கள் எல்லாம் இங்கே வேணாம்...' என்பார்.
'அவரது பேச்சு, எங்களுக்கு வெகு நாட்களாக விளங்காமலே இருந்தது. ஒருநாள், ஒரு மாணவன், சம்பந்தா சம்பந்தமில்லாமல், வளர்த்து எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துக் காட்டி, 'இது மாதிரி கயிறு விடுதல், சரடு பின்னுதல், கூடை முடைதல் எல்லாம், கட்டுரை நோட்டில் காட்டக்கூடாது; ஏனென்றால், இதெல்லாம் குடிசைத் தொழில்கள்...' என்று சொல்லி சிரிச்சார்...' என்று கூறிய குப்பண்ணா மேலும் தொடர்ந்தார்...
'வெகு காலத்திற்குப் பின், அவரை ஒரு முறை சந்திச்சபோது, நான் தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திய பின், 'அடடே நீதானா... சரி... இப்போ என்ன வேலை செய்றே?' என்று கேட்டார்.
'பத்திரிகைகளில் எழுதிக்கிட்டு இருக்கேன்...' என்றேன். 'இப்போதும் குடிசைத் தொழில் தானா...' என்று சிரிக்காமல் கேட்டார் என்று சொல்லி சிரித்தார் குப்பண்ணா!
லென்ஸ் மாமாவின் மனைவி, பிறந்த வீடு சென்று விட்டார். மாமி இருக்கும்போது வெகு ஆச்சாரமாக நடந்து கொள்ளும் மாமா, அவர் இல்லாத போது, வீட்டிலேயே அசைவம் சமைத்து விடுவார்.
மாமி வந்தபின் அசைவ வாசனை, பாத்திரங்களில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கிச்சன் பரணில் மண்சட்டி பாத்திரங்கள் ஒரு செட், மாமிக்குத் தெரியாமல் தனியே மறைத்து வைத்திருப்பார். மாமி ஊருக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், அப்பாத்திரங்கள், மீண்டும் பரணில் வாசம் செய்யச் சென்று விடும்!
அன்று அப்படித்தான்... 'மணி... வா... மீன் வாங்கி வரலாம்...' என அழைத்தார். தயக்கத்துடன் அவர் கூட சென்றேன்.
சென்னை மெரீனாவில், ராணி மேரி பெண்கள் கல்லூரியை ஒட்டி உள்ள சாலையில், அனைத்து வகை மீன்களும் பிளாட்பார கடைகளில் கிடைக்கும். அங்கு மீன் வாங்க, பென்ஸ் காரில் வரும் பார்ட்டிகளும் உண்டு.
மாமா, தனக்குப் பழக்கமான மீன்காரியின் பிளாட்பாரக் கடை முன் குந்தி, 'மீன் எப்படி செலக்ட் பண்ணுறதுன்னு தெரியுமா?' எனக் கேட்டார் என்னிடம்!
நான், 'திரு திரு'வென விழிக்க, அவர் சொன்னார்...
'மீன்களோட கண்கள் நம்மையே முறைச்சுப் பாப்பது போல் தெளிவாக இருக்கணும்; மங்கலாகவோ, இயல்புக்கு மாறாகவோ இருந்தா அவை கெட்டுப் போச்சுன்னு அர்த்தம்.
'நல்ல பதமான மீனின் மாமிசம், அழுத்திப் பாத்தா கெட்டியாக, உறுதியாக இருக்கும். கெட்டுப் போன மீனோ, கொழ கொழன்னு இருக்கும்.
'மீனின் முதுகெலும்பை ஒட்டிய மாமிசம் வெளிறித்தான் இருக்கணும்; சிவப்பாக இருக்கக் கூடாது. சிவப்பாக இருந்தால், அது கெட்டுப் போன மீன். துண்டு துண்டாக வெட்டிய மீனில் இதைக் காணலாம்.
'நல்ல மீனின் உடல் மேல், நாம் கை வச்சு அழுத்தி எடுத்தோம்ன்னா அதன் மேல் ரேகைகள் பதியாமல் இருக்கும். அதோட நல்ல மீனின் அடிவயிறு பாகம் உறுதியா இருக்கும்.
'மீனின் செவுள்கள், செந்நிறமாக இருக்கணும்; நிறம் மாறியிருந்தா மீன் கெட்டு போச்சுன்னு அர்த்தம்...' என்று கூறியபடி, ஒரு கிலோ மீன் வாங்கினார்.
அதன்பின், அவர் வீட்டுப் பக்கம் இரண்டு நாட்கள் போகவே இல்லை!
என்சைக்ளோபீடியா (தகவல் களஞ்சியம் அடங்கிய நூல்) பிரிட்டானிகாவில் பணியாற்றி வந்த ஒரு துணையாசிரியரை வேலை நீக்கம் செய்து விட்டனர். பழி வாங்கத் தீர்மானித்த அவர், வெகு சுலபமாக அதைச் செய்து விட்டார். எப்படி?
கம்ப்யூட்டரிடம் போனார். என்சைக்ளோபீடியாவில், 'அல்லா என்று இருக்கும் இடத்தை எல்லாம் ஜீஸஸ் என்று மாற்று...' என்று, ஓர் உத்தரவை பதிவு செய்து விட்டுப் போய் விட்டார்.
அவ்வளவு தான்! இந்தத் தவறுடனேயே கலைக் களஞ்சியம் அச்சாக ஆரம்பித்து விட்டது.
சில ஆயிரம் பிரதிகள் அச்சாகி விட்டன. யாரோ யதேச்சையாகக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்ய, இயந்திரம் நிறுத்தப்பட்டது; ஆய்வில் விபரீதம் தெரிய வந்தது!
— எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.