
பிச்சாவரம்!: சிதம்பரத்தில் இருந்து, 16 கி.மீ., தூரத்தில் உள்ளது, பிச்சாவரம். உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகளை கொண்டது. இங்கு, சுனாமியையே எதிர்த்து நிற்கும் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக மேற்கொள்ளும் படகு சவாரி தனிச்சிறப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பராமரிப்பு விடுதியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
லே!: ஜம்மு - காஷ்மீரில் உள்ள, 'லடாக்' மாவட்டத்தின் தலைநகரம் லே! 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்நகரில், லே அரண்மனை, உயரமான சாந்தி ஸ்தூபி, யுத்த அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்கிறது. இங்கு ட்ரெக்கிங் பாதைகளும் நிறைய உண்டு. மேலும், சீக்கியர்களுக்கான குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம் மற்றும் முஸ்லிம்களுக்கு ஜும்மா மசூதி என்று அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களும் உள்ளன.
தவாங்!: அருணாசலப் பிரதேசத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது, தவாங். இங்கு, உலகின் மிகப் பெரிய புத்த மடாலயம் உள்ளது. ஆறாம் தலாய்லாமா பிறந்த இடம் என்பதால், இது, புத்த மதத்தினருக்கு புனிதத் தலமும் கூட! தேஜ்பூரிலிருந்து, 16 மணி நேரம் சாலை வழி பயணமாக இங்கு செல்லலாம். மாநில அரசு, கவுகாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதி செய்து தருகிறது.
தேக்கடி!: முல்லை - பெரியாறு அணையின் நீர்பரப்பு தான் தேக்கடி! இங்கு, படகுப் பயணம் மற்றும் யானை சவாரி போன்றவை சிறப்பு. தமிழகம் மற்றும் கேரளா மக்கள் வணங்கும் மங்கலதேவி (கண்ணகி) கோவில், தேக்கடியில் இருந்து, 15 கி.மீ., தூரத்தில் உள்ளது.
நந்தி ஹில்ஸ்!: கர்நாடகாவிலுள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில், பெங்களூரிலிருந்து, 50 கி.மீ., தூரத்தில் இருக்கிறது நந்தி ஹில்ஸ்! மரங்கள் சூழ்ந்தும், பார்ப்பதற்கு எருது போன்றும் காட்சியளிக்கும் இக்குன்றில் தான், பென்னாறு, பாலாறு, பொன்னையாறுகள் உற்பத்தியாகின்றன. மலைப்பாதைகளில் அதிக வளைவுகள் இல்லாமலும், மேகங்கள் நம்மை தொட்டு செல்லும் அழகையும் ரசிக்கலாம். குன்றுக்கு கீழே போதி நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
மோர்னி குன்றுகள்!: ஹரியானா மாநிலத்தில், மோர்னி என்ற கிராமம் உள்ளது. இமயமலையின் சிவாலக் தொடரின் ஒரு பகுதியான இது, 4,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில், இப்பகுதியை ஆண்ட ராணியின் பெயரால் அழைக்கப்படும் இக்கிராமத்தில், இமயமலையின் பல அற்புதமான இயற்கை காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். சின்ன சின்ன ஏரிகள் அமைந்துள்ள இப்பகுதியில், ஹரியானா அரசு, சுற்றுலாப் பயணிகளுக்காக, பெரிய பயணியர் விடுதியை அமைத்துள்ளது.
பவானி - கூடுதுறை!: ஈரோட்டிலிருந்து, 12 கி.மீ., தூரத்தில் உள்ளது, பவானி. கங்கை கரையில் காசியும், வங்கக் கடலோரத்தில் ராமேஸ்வரமும் இருப்பது போல், காவிரி மற்றும் பவானி ஆறுகளுடன், கண்ணுக்கு புலப்படாத அமிர்த நதியும் கலக்கும் இடத்தில் உள்ளது பவானி கூடுதுறை. இதை, 'முக்கூடல்' என்றும் சொல்வர். இந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில், ஒரு தீவுப் போல் காட்சி அளிக்கிறது, சங்கமேஸ்வரர் கோவில். பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நதிக்கரையோரம் சிவலிங்கம் அமைந்திருப்பதால், இதை, 'ருத்ரபூமி' என்பர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், கூடுதுறையில் குளித்து, ஈரத் துணியோடு சங்கமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அமிர்தலிங்கேஸ்வரர் லிங்கத்தை, தங்கள் கையால் எடுத்து, கர்ப்பக்கிரகத்தை மூன்று முறை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
ஆம்பிவேலி!: நமக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்று, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வர்களுக்கு லோனாவாலா! குளிர், நீர்நிலைகள், பரப்பளவு, பசுமை மற்றும் விவசாயம் என்று எல்லா விஷயங்களிலும் ஊட்டியை விட, லோனாவாலா பல படிகள் கீழே இருந்தாலும். இதன் உச்சியில் இருக்கும், 'ஆம்பிவேலி' எனும் பள்ளத்தாக்கு அருமை! மும்பை விமான நிலையத்திலிருந்து, 122 கி.மீ., தூரத்தில் இருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தில், சிறிய அளவிலான விமான நிலையம் கூட உண்டு.

