PUBLISHED ON : மார் 27, 2011

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து, மூணாறு போகும் மலைப் பாதையில், 30 கி.மீ., தூரத்தில் உள்ளது கோடந்தூர் மலைவாழ் கிராமம். இங்கு, 60 குடியிருப்புகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
பெரும்பாலும் விவசாய பணிகளை செய்து வரும் இவர்களது வாழ்க்கை, இயற்கையை ஒட்டி அமைந்துள்ளது.
மிக முக்கியமான வேலையோ, தேவையோ இருந்தால் ஒழிய, மலைப்பகுதியை விட்டு இவர்கள் கீழே இறங்குவது இல்லை. மிக எளிமையாகவும், ஒற்றுமையாகவும் வாழும் இவர்களது சில பழக்கவழக்கங்கள் பழமையானவை; பாரம்பரியமானவை. தங்களது வீடுகளை சுற்றி பல விலங்குகள் இருந்தாலும், இவர்கள், அவைகளை ஒன்றும் செய்வது இல்லை; அவைகளும், இவர்களை எதுவும் செய்வதில்லை. பல சமயங்களில், இங்குள்ள காட்டு யானைகளுடன்தான் இவர்களது விளையாட்டு. அந்த அளவிற்கு இயற்கையை இனிமையாக நேசிக்கின்றனர்.
இவர்கள் வீட்டு பெண் பிள்ளைகள் பூப்படைந்ததும், வீட்டு வாசலில் ஈச்சநாரினால் குடில் கட்டி, அந்த குடிலுக்குள், சம்பந்தபட்ட பெண்ணை விட்டு விடுகின்றனர். குடிலின் மீது சோளக்கொல்லை பொம்மை ஒன்றை வைத்து விடுகின்றனர். குடிலின் உள்ளே விடப்பட்ட பெண்ணிற்கு சாப்பாடு, மற்ற தேவைகளை குறைவின்றி கொடுக்கின்றனர்.
குடிலின் அருகிலிலேயே கட்டிலைப் போட்டு, குடும்பத்தினரும் படுத்துக் கொள்கின்றனர்.
கிராமத்தில் இருக்கும் உறவுக்காரர்கள் எல்லாரும் சம்பந்தபட்ட பெண்ணிற்கு சீர் செய்வர். இதற்கு, ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை ஆகும். சீர் தயாரானதும், மேள தாளத்துடன் அனைவரும் மொத்தமாய் கிளம்பி வந்து, குடிலில் இருக்கும் பெண்னை அழைத்து போய் வீட்டினுள் விடுவர்.
இதன் மூலம், சம்பந்தபட்ட பெண்ணிற்கு, 'நாங்கள் இருக்கிறோம், எல்லாமே இயற்கையான விஷயம்தான், எதற்கும் பயப்படாதே, நன்றாக ஓய்வு எடுத்து உடம்பை தேற்று...' என்ற நோக்கத்தில் செய்கின்றனர். அதே போல, உறவினர்கள் உடனே சீர் செய்ய சிரமப்படுவர் என்பதால், கால அவகாசம் கொடுக்கின்றனர். இதன் மூலம், நிஜமான வாழ்த்து பெண்ணிற்கு கிடைக்கும். அதே போல கோவில் திருவிழா, திருமணம் என்று எந்த நிகழ்ச்சியானாலும், அதை, புதன்கிழமைதான் செய்வர்; வேறு எந்த கிழமையையும் யோசிக்கக் கூட மாட்டார்கள். பெண் கொடுப்பது, எடுப்பது எல்லாம் இந்த கிராமத்திற்குள்தான்.
பல திருமணங்கள், காதல் திருமணங்கள்தான். கிராமத்திற்கு பக்கத்தில் இருக்கும், 'பாண்டியன் வீடு' என்ற பழமையான கருங்கல் கட்டடத்திற்குள் தஞ்சம் புகுந்து விடுவர் காதலர்கள். இது தெரிந்ததும், பெற்றவர்கள், பிள்ளைகள் மனசை புரிந்து, சின்னஞ்சிறுசுகளின் வாழ்க்கைதான் முக்கியம் என்பதை உணர்ந்து, தாங்களே முன்னின்று அவர்களது திருமணத்தை நடத்தி விடுவர். இப்படி, பல பாரம்பரியமான பழக்கவழக்கங்களுடன் வாழ்கின்றனர் கோடந்தூர் மக்கள்.
***
- எல். முருகராஜ்
