sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உண்மை கசக்கும்!

/

உண்மை கசக்கும்!

உண்மை கசக்கும்!

உண்மை கசக்கும்!


PUBLISHED ON : ஜன 05, 2014

Google News

PUBLISHED ON : ஜன 05, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்மினியின் வரவு, எங்கள் அலுவலகத்திற்கே, ஒரு புதிய ஒளியைக் கொடுத்தது. அவள் இளமையும், அழகும் பார்ப்பவர்களை, இன்னொரு முறை பார்க்க தூண்டும். அத்தனை அழகான முகம். இன்னும் கொஞ்சம் நேரம், நம்முடன் பேச மாட்டாளா என்ற ஏக்கத்தை உண்டு பண்ணும், இனிய குரல்.

பத்மினி, வேலையிலும் நல்ல திறமைசாலி. அழகு, அறிவு நிறைந்த, இருபத்தி ஐந்து வயது இளமங்கையான அவள், என்னிடம் மட்டும், கொஞ்சம், 'விசேஷமாக' நடந்து கொள்வதால், நான், பலரின் பொறாமைக்கு ஆளானேன்.

என் பெயர் சிவா, பத்மினியை விட, ஒரு வயது மூத்தவன். அவள், பெண்களில் அழகி என்றால், நான் ஆண்களில் அழகன். அது தவிர, நானும், பழகுவதற்கு இனியவன்; வேலையிலும் திறமைசாலி.

ஆபீசில் எல்லாரும், நானும், பத்மினியும் கூடிய விரைவில், திருமண பந்தத்தில் இணைந்து விடுவோம் என்று, நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், நான், சற்று வித்தியாசமானவன். என் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் மற்றவர்களிடமிருந்து மாறு படுவதும், என் கருத்துக்களில் பிடிவாதமாக இருப்பதும், ஒரு சிலருக்கே தெரியும்.

ஆனாலும், என்னால், பத்மினி விஷயத்தில் அவ்வளவு கறாராக இருக்க முடியவில்லை. வெளிப்படையாக, என் விருப்பதை சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், மனதின் ஆழத்தில், இருவரும், ஒருவரையொருவர் காதலித்துக் கொண்டிருந்தோம் என்பதில், சந்தேகமில்லை.

ஆண் தான், முதலில், தன் காதலை சொல்ல வேண்டும் என்பது, எழுதப்படாத ஒரு நியதி. அதனால், கிட்டத்தட்ட ஒரு வருஷ காலம் பழகிய பின், ஓரளவு, இருவரும் எங்கள் பின்புலங்களை அறிந்து கொண்ட பின், என் காதலை, அவளிடம் சொன்னேன்.

பத்மினி வசதியான குடும்பத்து பெண். பிறந்து, வளர்ந்து, வேலை கிடைத்தது எல்லாம் மும்பையில் தான். ப்ராஜக்ட் போஸ்டிங்கில் சென்னைக்கு வந்தாள். அவளுக்கு, ஒரு சகோதரி உண்டு. அவளும் மணமாகி, மும்பையில் இருந்தாள். பத்மினியின் அப்பா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதல்நிலை அதிகாரி. கலீனாவில் ஆயிரத்து எண்ணுறு சதுர அடியில், சொந்த ப்ளாட், கார்கள் என்றெல்லாம் வளம் பெற்றவள்.

நானோ, பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தில் நேர் எதிர். எனக்கு அப்பா கிடையாது; அம்மா மட்டுமே. மாமாவின் ஆதரவிலும், அரசு உதவி தொகையிலும் படித்து, இன்று தலைநிமிர்ந்து இருப்பவன். சேலத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமத்தில், அம்மா, மாமாவின் குடும்பத்துடன் வசித்து வருகிறாள். மாமாவுக்கு, கொஞ்சம் நிலங்கள் உண்டு. அதில் வரும் வருமானத்தில் தான், அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அம்மா, சமீபகாலமாக, என்னை திருமணம் செய்யச் சொல்லி, வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அதற்கு, இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.

பத்மினியுடன் ஏற்பட்ட நட்பும், நண்பர்கள் தந்த தைரியமும் பத்மினியிடம் என் காதலை சொல்ல வைத்தது.

இது தான், என் காதல் கதையின் முன்னுரை. கதை இனி மேல் தான்.

கான்டீனில், காபி குடித்துக் கொண்டிருந்த போது, பத்மினியிடம் என் விருப்பத்தை வெளிப்படுத்தினேன். நான் சொன்னதைக் கேட்டதும், அவள் ஒரு வினாடி, என் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

''நாளை மாலை, 5:00 மணிக்கு, நீ, என் வீட்டுக்கு வர முடியுமா?'' என்று கேட்டாள்.

''நீ, உடனே பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை பத்மினி. யோசித்தே பதில் சொல்,'' என்றேன்.

''பரவாயில்லை. நீ, நாளைக்கு என் வீட்டுக்கு வா. நான், உன்னிடம் தனியாக கொஞ்சம் பேச வேண்டும்,'' என்றாள்.

நானும், அதற்கு மேல் பேச்சை தொடரவில்லை. அவள் எதைப் பற்றி பேச வீட்டிற்கு வரச் சொல்கிறாள் என்பது, எனக்கு புரியவில்லை. சரி, ஒருநாள் தானே, பார்த்துக் கொளளலாம் என்று விட்டுவிட்டேன்.

மறுநாள் மாலை, 5:00 மணிக்கு, திருவான்மியூரிலிருந்த அவள் வீட்டுக்கு சென்றேன். அங்கு, அவள் ஒரு ப்ளாட் எடுத்து தங்கியிருந்தாள். நான், காலிங்பெல்லை அழுத்தியதும், கதவை திறந்த பத்மினி, ''ஹாய் வா,'' என்றாள், சிரித்த முகத்துடன். ஓரளவுக்கு பெரிதாகவே இருந்த அந்த ஹாலில் சிறியதாக, ஒரு சோபா செட், ஷெல்ப், புத்தகங்கள், 'டிவி' என்று, எல்லா வீடுகளிலும் இருக்கும் பொருட்கள் இருந்தன.

பத்மினி, எந்த விதமான ஒப்பனைகளும் இன்றி, நைட்டியில் தேவதை போல், இருந்தாள்.

'இந்த அழகு, பிளஸ் அறிவு தேவதை, என் மனைவியானால், நான், எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவன்...' என்ற எண்ணம், என் மனதில் ஓடியது.

''உட்கார். காபி, டீ ஆர் சம்திங்க் கோல்ட்?''

''காபி''

''ஒரு நிமிஷம்,'' என்று உள்ளே சென்றாள். நான், மேஜையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்து, புரட்ட ஆரம்பித்தேன்.

''மம்மீ,'' என்று கூவியபடி, பெட்ரூமிலிருந்து, தூங்கி எழுந்த முகத்துடன், அழகான மூன்று வயது ஆண் குழந்தை, ஹாலுக்குள் ஓடி வந்தது. நான் திடுக்கிட்டேன்.

என் கையிலிருந்த பத்திரிகை கீழே நழுவியது.

'டிரே'யில் காபியுடன் நுழைந்த பத்மினி, ''ஹாய் குட்டி தூங்கி எழுந்தாச்சா,'' என்றதும், குழந்தை ஓடி, அவள் கால்களை பற்றிக் கொண்டது. அதன் கைகளை பற்றிக் கொண்டே, காபி டிரேயை, டீபாயில் என் எதிரே வைத்த பத்மினி, குழந்தையை தூக்கி, மடியில் வைத்துக் கொண்டு, என் எதிரே அமர்ந்து, ''அங்கிளுக்கு ஹலோ சொல்,'' என்றாள். அது, உறக்கம் கலையாத கண்களுடன், என்னை புதிதாகப் பார்த்தது.

''பத்மினி, இந்தக் குழந்தை,'' என்று இழுத்தேன்.

முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல், ''என் பையன் ஆகாஷ்; மூன்று வயதாகிறது,'' என்றாள்.

எனக்கு இதயம், வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

''அப்படியானால் உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?''

பத்மினி வெற்று பார்வை பார்தது, ''இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன், மும்பையில் இருந்த போது, என்னுடன் படித்த ஒருவனுடன் ஏற்பட்ட தொடர்பால் வந்த, குழந்தை இது,'' என்றாள்.

''அவன் என்ன ஆனான்?''

''அவன் ஒரு அயோக்கியன்; நான் ஏமாற்றப்பட்டேன்.''

''என்னது?''

பத்மினி சிரித்தாள். ''ஆச்சர்யமாக இருக்கிறதா... இத்தனை அழகும், திறமையும் உள்ள இவள் எப்படி, ஒருத்தனிடம் ஏமாந்தாள் என்று. உனக்கு மட்டுமல்ல, என் பெற்றோருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவனும் என்னைப்போலப் படித்தவன்; அழகன்; புத்திசாலி. ஆனால், நல்லவன் இல்லை. பெண்கள் அவனுக்கு விளையாட்டு பொருள். பெண்களை பேசி மயக்கி, வீழ்த்துவதை தன் ஆண்மைக்குக் கிடைத்த வெற்றியாக கருதுபவன். அதில், நான் சிக்கிக் கொண்டது, என் துரதிர்ஷ்டம்.

''ஆனால், அப்போது எனக்கு என் அழகு, இளமை பிரதானமாகக் தெரிந்தது. என் பார்வைக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு ஆணும், என் கர்வத்தை ஏற்றினர். கடைசியில் இவன் காலடியில் விழுந்தேன். கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்து, என்னிடம் உறவு கொண்டான். என் கர்ப்பம் தெரிந்ததும், அலட்சியமாக, 'அபார்ஷன் செய்து கொள்' என்று கூறி, விலகினான். என் பெற்றோர் குழந்தையை, கருவிலேயே அழித்து விடுபடி கூறினர். என்னால், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான், சுமந்து பெற்றெடுத்தேன்.

''எனக்கும், உன்னைப் பிடித்திருக்கிறது சிவா. ஆனால், என்னைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால், நீ, இந்தக் குழந்தையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத் சொல்லத்தான், உன்னை, என் வீட்டிற்கு வரச் சொன்னே.''

நான், பதில் பேசாமல் மவுனமாக, அமர்ந்திருந்தேன். பின் பேசினேன்...

''நன்றி, பத்மினி. உன் நேர்மையை பாராட்டுகிறேன். இதுபோல், முறை தவறி பெற்ற குழந்தைகளை அனாதை விடுதி வாசல்களிலும், குப்பை தொட்டிகளிலும் வீசிவிட்டுச் செல்லும் பெண்களுக்கு மத்தியில், நீ, வித்தியாசமாகத் தோன்றுகிறாய். உன் தைரியம் பாராட்டப்பட வேண்டியதுதான். இருந்தாலும்,'' என்று நிறுத்தி னேன்.

''சொல்லு சிவா, நீ எதைச் சொன்னாலும், நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்,'' என்றாள் பத்மினி.

''நீ, என்னை ஆணாதிக்கக்காரன் என்று நினைத்தாலும், பரவாயில்லை. நீ செய்திருப்பது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய தவறு. நல்லவனோ, கெட்டவனோ திருமண பந்தத்திற்கு முன், அவன் வார்த்தைகளை நம்பி, அவனுடன் உறவு கொண்டது மிகப்பெரிய தவறு. நீ உலகம் தெரிந்த படித்த பெண். ஏன் உனக்கு, அந்தக் குறைந்தபட்ச தற்காப்பு உணர்வு கூட இல்லை... உருவான ஒரு உயிரை அழிக்க, உன் மனம் இடம் தரவில்லை என்றாய். கருணை என்ற நோக்கில், நீ செய்தது சரியாக இருக்கலாம். ஆனால், நீ சுமந்து பெற்றிருப்பது, ஒரு ஏமாற்றுக்காரனின் வாரிசை. தாய், தந்தையின் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் தானே அவர்கள் குழந்தைக்கும் வருகிறது. உன்னை பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றியவன், விதைத்த விதையில், முளைத்த உயிர் இது. நாளை, இவனும் வளர்ந்து, பெரியவனாகையில், அவன் குணங்களைப் பெற்றிருக்க மாட்டான் என்பதற்கு, என்ன உத்திரவாதம்... உன் குணத்தைக் கொண்டாலும், உனக்கிருக்கும் மிகப்பெரிய குறை; கர்வம், அலட்சியபோக்கு, பிடிவாத குணம். நீ, இன்று இருக்கும் இந்த நிலைக்கு, இவை எல்லாம் காரணமல்ல என்று, உன்னால் உறுதியாகச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டேன்.

பதில் பேசாமல் அமர்ந் திருந்தாள் பத்மினி.

''நல்ல இல்லறத்திற்க்கு அழகும், பணமும் மட்டும் போதாது. யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம், மன ஒழுக்கம், அடக்கமும் தேவை. உன் தவறுக்கான தண்டனையாகவோ, பிராயச்சித்தமாகவோ நீ இந்தக் குழந்தை என்னும் சிலுவையைச் சுமக்கிறாய். ஆனால், உன்னை காதலித்தேன் என்பதற்காக, உன்னையும், நீ செய்த தவறையும், நான் ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர, உன்னை ஏமாற்றிக் கைவிட்டவனின், குழந்தையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கில்லை.

''காதலுக்காக எத்தனையோ தியாகங்கள் இன்றும், நடந்து கொண்டுதான் இருக்கிறது. என் காதல் அப்படியல்ல. இதே போன்றதொரு தவறுடன், நான் உன்னிடம் வந்திருந்தால், நீ, என்னை ஏற்றுக் கொள்வாயா என்றெல்லாம் நான் கேட்கத் தயாரில்லை. அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்னிடமில்லை. நாம் திருமணம் செய்து கொண்டால், மனதில், நீ செய்த பிழையும், அதனால், பிறந்த இந்தக் குழந்தையும் உறுத்தலாகவே இருக்கும். நான் பேசுவது உனக்கு குரூரமாக இருக்கலாம். நீ செய்த தவறை, நீதான் அனுபவிக்க வேண்டும். அதைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் உள்ள ஆண் வந்தால், அவனை மணந்து கொள். ஆனாலும் கூட, அது எந்தக்காலத்திலுமே பெண்கள் செய்யும் விஷப்பரீட்சைதான். நாம் சாதாரண ஆபீஸ் நண்பர்களாகவே இருப்போம்.''

பேச்சை முடித்து, ''பை... ஆல் த பெஸ்ட், '' என்று கூறி, விடைபெற்றேன்.

அந்தக் குழந்தையை தூக்கிக் கொஞ்ச கூட எனக்கு விருப்பமில்லை.

இவனை மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம், 'காதல்' என்பதன், அர்த்தம் தெரியவில்லையே...

'மன்னிக்கத் தெரியாத இவன் என்ன மனிதன்' என்ற நினைப்பும், கசப்பும் உங்களுக்கு ஏற்படுகிறதா...

பரவாயில்லை. உண்மை என்றும் கசக்கத் தான் செய்யும்!

தேவ விரதன்






      Dinamalar
      Follow us