sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எட்ட முடியாதவர்!

/

எட்ட முடியாதவர்!

எட்ட முடியாதவர்!

எட்ட முடியாதவர்!


PUBLISHED ON : டிச 27, 2020

Google News

PUBLISHED ON : டிச 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நாங்களும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம். தவமிருக்கிறோம், யாகம் செய்கிறோம், படையல் இடுகிறோம்... அந்த சிவனை எங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை...' என்று மகான்களெல்லாம் திண்டாடுகின்றனர்.

மாணிக்கவாசகர் சிவனைப் பற்றி, 'முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே...' - என, பாடுகிறார்.

எல்லாவற்றுக்கும் பழமையானதைத் தேடிப் போனாலும், அவர் சிக்குவதில்லை. இக்கால புதுமை வழிகளைக் கையாண்டு ஆய்வு செய்யலாம் என்றாலும் முடியவில்லை.

இப்படி, எட்ட முடியாத எங்கோ இருக்கும் உலகத்தில், நம் அறிவையெல்லாம் தாண்டி மறைந்திருப்பவர், சிவன். அதனால் தான், அந்த சிவனுக்கு எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக தந்துள்ளோம். அவருக்குரிய விழாவை, 'ஆருத்ரா தரிசனம்' என்கிறோம்.

'ஆர்த்ரா' என்ற வடமொழிச் சொல்லையே நாம், 'ஆருத்ரா' என்கிறோம். இதற்கு, 'எட்ட முடியாதது' என்று பொருள். திருவாதிரை நட்சத்திரம் மிகப்பெரியது. வான்வெளியிலுள்ள நட்சத்திர கூட்டத்தின் ஒளி வரிசையில் இது, 10வது இடத்தை பிடித்திருக்கிறது.

இதை எளிதில் எட்ட முடியாது என்பதை, இதன் துாரத்தை வைத்தே அறிய முடியும். வான சாஸ்திரத்தில் நட்சத்திரங்களின் துாரத்தை, ஒளியாண்டு என்ற அளவில் அளப்பர்.

விநாடிக்கு 3 லட்சம் கி.மீ., துாரத்தில் பயணிக்கும், ஒளி. அப்படியானால் ஒரு நாளுக்கு, 86 ஆயிரத்து 400 விநாடிகள். இதை, 3 லட்சத்தால் பெருக்கினால், ஒரு நாளுக்குரிய துாரம் வரும்.

பூமிக்கும், திருவாதிரைக்கும் உள்ள துாரம், 724 ஒளி ஆண்டுகள். தலையே சுற்றுகிறதல்லவா?

இந்த கணக்கிற்கு விடை காண கால்குலேட்டரே இல்லை. இவ்வாறு திருவாதிரை நட்சத்திரம், எப்படி எட்ட முடியாத தொலைவில் உள்ளதோ, அதைப் போல சிவனும் எட்ட முடியாதவர். அதனால் தான், திருவாதிரை நட்சத்திரம் அவருக்கு தரப்பட்டுள்ளது.

ஆனால், எட்ட முடியாத அந்த சிவனையும் ஆட்டி வைத்து பார்த்தனர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் என்ற முனிவர்கள். எட்ட முடியாத இடத்திலுள்ள சிவனை, தங்கள் பக்தியால் அவர்கள் கட்டி இழுத்து வந்தனர்.

பூமியின் மையப்புள்ளி எனப்படும் தில்லையம்பலத்தில், அவரை நடனமாடச் செய்தனர். நடனமாடியதால், நடராஜர் என, பெயர் வைத்தனர். புனிதமான மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று, அவர் நடனமாடினார்.

அந்த நிகழ்வையே, 'ஆருத்ரா தரிசனம்' என, கொண்டாடுகிறோம்.

சிதம்பரத்தில், பொன்னம்பலம்; திருவாலங்காட்டில், (திருவள்ளூர்) ரத்தின சபை; மதுரையில், வெள்ளியம்பலம்; திருநெல்வேலியில், தாமிரசபை; குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய நடன சபைகளை, நடராஜருக்காக அமைத்தனர், மன்னர்கள்.

ஆருத்ரா தரிசனத்தன்று, இந்த சபைகளைத் தரிசித்து, எட்ட முடியாத சிவனை எட்டிப் பிடிப்போம்.

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us