தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாமா அர்ச்சகர், மருமகன் சுவாமி!

மாமா அர்ச்சகர், மருமகன் சுவாமி!

மாமா அர்ச்சகர், மருமகன் சுவாமி!


PUBLISHED ON : டிச 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்பாளை, தன் மகளாக பாவிக்கும் கோவில் அர்ச்சகர், சிவனை, தன் மருமகனாகக் கருதி, திருமணம் செய்து வைத்து, சீர் வழங்கும் வழக்கம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள, எதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ளது. திருமணத் தலமான திருமணஞ்சேரி அருகில் இருப்பதால், இந்த ஊரை, மேலத்திருமணஞ்சேரி என்பர்.

பரத்வாஜ மகரிஷி, தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க, 'புத்திர காமேஷ்டி' யாகம் நடத்தினார். அவருக்கு, பார்வதி தேவி, மகளாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார், மகரிஷி.

சிவனும், அம்பிகையை மணக்க, பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை, வெளியே வந்து வரவேற்பது கலாசாரம். மாப்பிள்ளையாக வந்த சிவனை, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றார், பரத்வாஜர். அவரின் மரியாதையை ஏற்ற சிவன், பரத்வாஜரின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.

பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால், இந்த தலத்திற்கு, 'எதிர்கொள்பாடி' என்றும், சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும், பெயர் ஏற்பட்டது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை, இந்த சிவனை வழிபட்டதால், ஐராவதேஸ்வரர் என்ற பெயர், பிற்காலத்தில் சூட்டப்பட்டது.

இந்தக் கோவிலில், பிரம்மோற்சவம் கிடையாது. இங்கிருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள திருமணத் தலமான, திருமணஞ்சேரியில் அருள்பாலிக்கும் கல்யாண சுந்தரருக்கு, சித்திரை மாதம், திருக்கல்யாணம் நடக்கும்.

மாப்பிள்ளை கோலத்தில், அவர் எதிர்கொள்பாடி கோவிலுக்கு எழுந்தருள்வார். அந்தக் கோவில் அர்ச்சகர், தன்னை அம்பாளின் தந்தையாகப் பாவித்து, பூர்ண கும்ப மரியாதை கொடுத்து, வரவேற்பார்; மருமகனுக்குரிய சீர் தருவார். இந்த உபசரிப்பை ஏற்ற பின், திருமணஞ்சேரிக்கு சென்று, அம்பிகையை மணந்து கொள்வார், சுவாமி.

பெரும்பாலான கோவில்கள், கிழக்கு நோக்கி இருப்பதே வழக்கம். இங்கு சிவன், மேற்கு நோக்கி காட்சி தருவது விசேஷம். இத்தலத்து அம்பாள், மலர்க்குழல்நாயகிக்கு, 'பெருங்கருணை பிராட்டியார்' என்ற பெயருண்டு. நீண்ட நாட்களாக வரன் அமையாமல் இருப்பவர்களுக்கு, தடை நீக்கி அருளுபவள் என்பதால், இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

பெண்ணை பெற்றவர்கள், வரன் பார்க்கும் முன், நல்ல மாப்பிள்ளை அமைய, மகளை இங்கு அழைத்து வருகின்றனர். சிவனுக்கு அபிஷேகம் செய்து, பூஜை செய்கின்றனர். மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும், இங்கு பூஜை நடத்தி, தீர்வு கேட்கின்றனர்.

பரத்வாஜ முனிவர் வழிபட்ட பரதலிங்கம், பிரகாரத்தில் இருக்கிறது. தாமரை பீடத்தின் மீது, துர்க்கை காட்சி தருகிறாள். விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர் மற்றும் துணை வந்த விநாயகர் சன்னிதிகளும் உள்ளன.

கும்பகோணம்- - மயிலாடுதுறை வழியில், 27 கி.மீ., துாரத்தில் திருமணஞ்சேரி உள்ளது. இங்கிருந்து, 2 கி.மீ., துாரத்தில் எதிர்கொள்பாடி இருக்கிறது.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us