
காலை, 6:00 மணி -
வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு, சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள் மங்களம். ஆட்டோவில் இருந்து இறங்கும் கடைசி மகள் சியாமளாவைப் பார்த்ததும், சந்தோஷத்துடன் ஓடி வந்தாள், ''வாடா கண்ணு... எப்படி இருக்கே... என்ன இப்படி இளைச்சு போயிட்டே... ஒழுங்கா சாப்பிடறது இல்லயா...'' என்றாள்.
''நான் நல்லா தான் இருக்கேன்; நீ எப்படிம்மா இருக்கே... எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்களா?'' என்று கேட்டாள் சியாமளா.
அவள், 'எல்லாரும்' என்று விசாரித்தது, அவளது அண்ணனையும், அக்காவையும் தான்!
அக்கா இந்திரா, ஏழு மாத கர்ப்பிணி; வளைகாப்புக்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். சியாமளாவும், இந்திராவும் தோழிகள் போல பழகினாலும், அடிக்கடி நாயும், பூனையும் போல் சண்டையிட்டு கொள்வர். இருவரும் குணத்தால் நேர் எதிர் துருவம்.
சியாமளாவின் தந்தை இறந்து ஒரு ஆண்டு ஆகிறது. வீட்டுப் பொறுப்பை, அண்ணன் தான் பார்த்துக் கொள்கிறான்.
சியாமளா, அன்பான பெண் என்றாலும், பிடிவாதம், வறட்டு கவுரவம் கொண்டவள்; யாரையும் வெடுக்கென பேசி விடுவாள். ஆனால், படிப்பில் கெட்டிக்காரி.
எம்.டெக்., பட்டதாரி; தற்சமயம், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில், பேராசிரியையாக பணிபுரிகிறாள்.
குளித்து முடித்து, டைனிங் டேபிள் முன் உட்கார்ந்த சியாமளாவிற்கு, தட்டில் சுடச்சுட இட்லியை பரிமாறிய மங்களம், சாப்பாட்டு அறைக்குள் நுழைந்த இந்திராவை பார்த்து, ''வாடி... நீயும் வந்து சாப்பிடு,'' என்றாள்.
அவள் சியாமளாவை நோக்கி, ''என்னடி லீவா... எத்தனை நாள்?'' என்றாள்.
''லீவெல்லாம் போடல; வேலைய ராஜினாமா செய்துட்டு வந்துட்டேன்...'' என்றாள் பட்டென்று!
இதைக் கேட்டதும், புரியாமல் விழித்தாள் மங்களம்.
''எதுக்கு இந்த திடீர் முடிவு?'' என்றாள் இந்திரா.
''பிஎச்.டி., படிக்கப் போறேன்; எனக்கு கனடாவிலிருந்து, ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு; என் கல்விக் கட்டணத்தை கனடா பல்கலைக்கழகம் கட்டிரும். வீட்டு வாடகை, உணவு போன்ற மற்ற செலவுகளுக்கு ஏதாவது, 'பார்ட் டைம்' வேலை பார்த்து, சமாளிக்கணும்,'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தவள், ''அம்மா... சொல்ல மறந்துட்டேன்... எனக்கு ஷூரிட்டிக்கு, 25 லட்சம் ரூபாய் தேவைப்படுது,'' என்றாள்.
''இதோ பார் சியாமளா... நாமெல்லாம் மிடில் கிளாஸ் குடும்பம்; அது மட்டுமில்லாம, கனடாவுல நமக்கு யாரைத் தெரியும்... கண் காணாத இடத்துக்கு உன்னை தனியா அனுப்ப பயமா இருக்கு,'' என்றாள் அம்மா ஆதங்கத்தோடு!
உடனே, சியாமளாவிற்கு கோபம் வந்து, ''யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு. அதை பாராட்டாம, இப்படி எதிர்மறையா பேசுறயே...'' என அம்மாவை கடிந்து, இட்லி தட்டை தூக்கி எறிந்தாள்.
சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த அண்ணன், ''சியாமளா... உன் கோபத்த ஏன் சாப்பாட்டு மேல காட்டுற...'' என்று கத்தினான்.
உடனே முசுமுசுவென்று அழுதுகொண்டே, ''அப்பா இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா...'' எனக் கூறி, அறைக்குள் சென்று, கதவை முடிக் கொண்டாள்.
செய்வதறியாமல் திகைத்து நின்றாள் மங்களம். கணவரை இழந்த சோகம் மனதை வாட்டிக் கொண்டிருக்கையில், மகளின் சொல், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருந்தது.
சற்று நேரம் கழித்து, சியாமளாவின் அறைக்குச் சென்ற மங்களம், அழுது கொண்டிருந்தவளின் தலையை கோதியபடி, ''சியாமளா என் தங்கமே... நீ படிச்சவ, புத்திசாலி; உலகத்துல எத்தனையோ பேர் பசி, பட்டினின்னு அவஸ்தைப்படுறத பாக்குறே... அப்படி இருக்க, ஒரு சின்ன விஷயத்திற்கு சாப்பாட்ட தூக்கி எறியலாமா... இவ்வளவு கோபம் பொம்பளப் பிள்ளைக்கு ஆகாதும்மா...'' என்றாள்.
''எனக்கு உன் உபதேசம் தேவையில்ல... முதல்ல வெளியே போ,'' என்றாள் சியாமளா. பனித்த கண்களோடு, அறையை விட்டு வெளியே வந்த மங்களம், வேலைக்காரி, தன் ஆறு வயது மகளுடன் வருவதை பார்த்து, கண்களை துடைத்துக் கொண்டாள்.
''அங்கம்மா... காய்கறி எல்லாம் தீர்ந்து போச்சு; முதல்ல மார்க்கெட்டுக்குப் போய் காய்கறிகளை வாங்கிட்டு வந்திடு ,'' என்றாள் மங்களம்.
''சரிம்மா...'' என்று கூறி புறப்பட தயாரானவளை, ''இரு அங்கம்மா... முதல்ல டிபன் சாப்பிட்டு, அப்பறம் போ,'' என்று கூறியவாறு, தட்டு நிறைய இட்லியையும், ஒரு சொம்பு காபியையும் அவளிடம் கொடுத்தாள்.
அவளும், அவள் மகளும் வயிறார சாப்பிட்ட பின், மார்க்கெட்டுக்கு புறப்பட்டுச் சென்றாள்.
இதை எல்லாம் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்த சியாமளா, ''ஆமா... இன்னும் வேலையே ஆரம்பிக்கல; அதுக்குள்ள என்னவோ ராஜ பரம்பரை மாதிரி, வேலைக்காரிய உபசரிக்கிற... பிச்சைக்காரர்களுக்கு நோட்டு நோட்டா தானம் செய்யுற; எங்கப்பா என்ன நோட்டா அச்சடிச்சு வைச்சுட்டுப் போயிருக்காரு,'' என்று ஈவு இரக்கம் இல்லாமல், அம்மாவை ஏசினாள்.
''இங்க பாரு... வயிறார உணவு கொடுத்து, அதுக்கப்பறம் வேலை செய்யச் சொல்றது என் பழக்கம். நீ கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போனதும், உன் வீட்டு வேலைக்காரிய உன் இஷ்டம் போல நடத்து; இப்ப எனக்கு உபதேசம் செய்யாதே. பசிச்ச வயித்துக்கு சாப்பாடு போடுறதோட அருமை, இப்ப உனக்கு புரியாது. உங்க அப்பாவே, இந்த மாதிரி கேள்விகள, என்னை கேட்டது இல்ல. உனக்கு என்ன ஷூரிட்டி தானே வேணும்; இந்த வீட்டை அடமானம் வைச்சு தரேன் போதுமா,'' என்றாள் வேதனையுடன்!
தங்கையின் பிடிவாத குணத்தைக் கண்டு, சியாமளாவின் அண்ணனும், அக்காவும் வேதனைப்பட்டனர்.
கனடா போவதற்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. நாளை புறப்பட வேண்டும்; மனதில் ஏதோ தோன்ற அம்மா வழக்கமாக அமரும் நாற்காலியில் அமர்ந்தாள் சியாமளா. சிங்கப்பூர் போக வேண்டும் என்பது அம்மாவின் நீண்ட நாள் ஆசை. 'படிச்சு முடிச்சு, நல்ல வேலையில் அமர்ந்ததும், அம்மாவை சிங்கப்பூர், 'ட்ரிப்' அழைச்சுட்டு போகணும்...' என்று நினைத்துக் கொண்டாள்.
மறுநாள் மதியம், விமான நிலையத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சியாமளா. மங்களத்திற்கு, தன் செல்ல மகளை இரு ஆண்டுகள் பிரிந்திருக்க வேண்டுமே என்ற வேதனையில், 'பிரஷர்' அதிகமாகி, மயக்கம் வருவது போல் இருந்தது. சியாமளாவுக்கும், தன் அம்மாவை பிரிவது வருத்தம் தான் என்றாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், ''சும்மா சீன் காட்டாதேம்மா... நீ மயக்கமே போட்டாலும், நான், கனடா செல்லும், 'ட்ரிப்' கேன்சல் ஆகாது,'' என்றாள் சீரியசாக!
சியாமளாவை தனியாக அழைத்துச் சென்ற இந்திரா, ''இங்க பாரு சியாமளா... உனக்கு அன்பா பேச தெரியலன்னாலும் பரவாயில்ல; மனசு வேதனைப்படும்படி பேசி, வீணா எங்களோட சாபத்தை வாங்கிக்காதே...'' என்று கடிந்தாள்.
''அக்கா... உங்கள எல்லாம் பிரியறதுல எனக்கு மட்டும் சந்தோஷமாவா இருக்கு... ஆனா, நான் அழுதா, அம்மாவுக்கு இன்னும் கவலையாகிடும். அதனால் தான் அப்படிச் சொன்னேன்,'' என்றாள் சியாமளா.
தங்கை கூறியதைக் கேட்டதும் இந்திராவுக்கு நெஞ்சம் கனத்தது.
கனடா சென்ற சில மாதங்களில், தமிழர் ஒருவர் வீட்டில், வார வாடகை, 15,000 ரூபாயில் தங்கும் வசதி கிடைத்தது. ஆனால், சாப்பாடு கிடையாது. அந்தப் பணத்தை கட்டவே அவள் மிகவும் சிரமப்பட்டாள். இதனால், மூன்று வேளையும் ரொட்டியும், வெண்ணெயும் மட்டுமே அவளது உணவாகிப் போனது.
அன்று இரவு, இட்லி - சாம்பார் செய்து கொண்டிருந்தாள் வீட்டுக்காரம்மாள். சாம்பார் வாசனை மூக்கை துளைத்து, பசியைத் தூண்ட, மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள் சியாமளா.
அவளைப் பார்த்ததும் ஏதோ தோன்ற, ''ஏண்டீ சியாமளா... ரெண்டு இட்லி சாப்பிடுறியா...'' என்று கேட்டாள் வீட்டுக்காரம்மாள்.
'சரி' என்று அவள் பதில் சொல்லும் முன், அந்த அம்மாளின் கணவர் அறைக்குள் இருந்தவாறே, ''இம்மாதிரி சாப்பாடு கொடுக்கற பழக்கத்த ஏற்படுத்தாதே... அப்புறம், தினமும் நம்மகிட்ட எதிர்பார்ப்பாங்க. உங்க அப்பன் என்ன நோட்டா அச்சடிச்சு என்கிட்ட தந்துருக்கார்,'' என்று கத்தினார்.
இதைக் கேட்ட சியாமளாவுக்கு, யாரோ தன் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருந்தது.
மறுநாள் காலை, 8:00 மணிக்கு வேலைக்கு புறப்பட்டாள் சியாமளா. அந்த வாரம் முழுவதும் தோட்ட வேலைகளே கிடைத்ததால், காலையில் எழுந்ததும், பசியில் மயக்கம் வருவது போலிருந்தது. ஆனாலும், மேஜையில் காய்ந்து கிடந்த பிரட்டை சாப்பிட மனமின்றி, வேலைக்கு கிளம்பினாள்.
அவள் வேலை செய்யும் இடத்திற்கு, பஸ்சில் ஒரு மணி நேரம் பயணித்ததில், மிகவும் களைப்பாக இருந்தது. கையோடு எடுத்து வந்திருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து, தாகம் தணித்து, முகம் கழுவியவள், அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள்.
கதவை திறந்தார் முதியவர் ஒருவர். அவ்வீட்டில் அவரும், அவர் மனைவி மட்டுமே வசித்து வந்தனர். அவர்கள் அவளை அன்பாக வரவேற்று, சிறிது நேரம் உரையாடிய பின், தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். அவள் வேலை செய்ய தயாராகிக் கொண்டிருந்தாள். வேகமாக வீட்டிற்குள் சென்ற மூதாட்டி, ஒரு கப் ஆரஞ்சு ஜூசையும், சாண்ட்விட்ச்சையும் எடுத்து வந்து அவளிடம் கொடுத்து, ''நீ படிக்கற பொண்ணு... காலையில சாப்பிட்டியோ என்னவோ... முதல்ல இதை சாப்பிடு; அப்பறம் வேலைய ஆரம்பி,'' என்று கூறியவள், ''நாங்க அவசரமா வெளியே போக வேண்டியிருக்கு; அடுத்த வாரம் பணத்தை மொத்தமா சேர்த்து வாங்கிக்க...'' என்றாள்.
'அம்மாவின் தர்மம் தான், தன்னை இப்போது காக்கிறது...' என நினைத்தவளுக்கு, வாய் விட்டு அழ வேண்டும் போல இருந்தது. 'அன்று அம்மா வேலைக்கார பெண்ணிற்கு உணவு கொடுத்ததை கண்டித்த தனக்கு, இன்று, கடவுள் பாடம் புகட்டி, பசியின் கொடுமையை உணர்த்தி விட்டார்...' என தனக்குள் புலம்பினாள்.
வேலை முடிந்து கிளம்பும் போது, மணி, 6:00; அந்த பகுதியில், பஸ் வசதி, 6:00 மணியோடு முடிந்து விடும் என்பது சியாமளாவுக்கு தெரியாது. அத்துடன், அது குளிர்காலம் என்பதால், சீக்கிரமாகவே இருட்டி விட்டது. புது இடம், இருட்டு, பஸ் வராதது என, சியாமளாவின் மனதில் நடுக்கம், பயம், கலவரம் என ஒருசேர தொற்றிக் கொண்டது. தன்னிடம் மொபைல்போன் இல்லாததால், அவளால் யாரையும் அழைக்கவும் முடியவில்லை. கையில் இருந்ததோ, ஐந்து டாலர் மட்டும் தான்!
செய்வதறியாது, திகைத்து நின்றிருந்த போது, அதிர்ஷ்டவசமாக காலியாக ஒரு பஸ் வந்தது; தனியாக ஒரு பெண் நிற்பதைக் கண்டு, பஸ்சை நிறுத்தினார் ஓட்டுனர்.
தன் நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறினாள் சியாமளா. ''உன் நல்ல நேரம்; பழுது பார்ப்பதற்காக, இந்த பஸ், 'டவுன்டன்' வரை போகும். வா உன்னை இறக்கி விடுறேன்,'' என்று கூறியவர், காசு வாங்காமலேயே அவளை பஸ்சில் ஏற்றிக் கொண்டார்.
'அம்மாவின் இரக்க குணம் தான், தன்னை காப்பாற்றுகிறது...' என, மனதுக்குள் தோன்றியது.
ஒரு வழியாக படிப்பு முடிந்து இந்தியா திரும்பினாள், சியாமளா. விமான நிலையத்தில் இறங்கியவுடன், அம்மாவை காணப் போகிறோம் என, அவள் மனம் குதூகலம் அடைந்தது.
வீட்டிற்குள் ஆவலுடன் நுழைந்தவளை, தன் குழந்தையுடன் வரவேற்றாள் இந்திரா.
''வாடி என் கண்ணு; சித்தி வந்திருக்கேன் பாரு...'' என, குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்ட சியாமளா, ''அம்மா... அம்மா...'' என அழைத்தபடி, ஒவ்வொரு அறையாக சென்றவள், பூஜை அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே, சிரித்த முகத்துடன் இருந்த அம்மாவின் படத்திற்கு, மாலை போடப்பட்டு இருந்தது.
ஒன்றும் புரியாமல் திக்பிரமை பிடித்து நின்றிருந்த சியாமளாவின் அருகில் வந்த இந்திரா, ''அம்மாவிற்கு ரத்த புற்றுநோய்; உன் படிப்பு கெட்டுடும்ன்னு, இந்த விஷயத்த சொல்லக் கூடாதுன்னு சொல்லி, எங்ககிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டாங்க. அம்மா இறந்து ரெண்டு வாரம் ஆச்சு; இறக்கும் தருவாயிலும் அம்மா உன்னையே நினைச்சுகிட்டு இருந்தாங்க,'' என்று இந்திரா கூறியதும், சியாமளாவிற்கு உலகமே இருண்டு விட்டது போல் தோன்றியது.
'இப்ப, கையில் பணம் உள்ளது; மனதில், அன்பு பொங்கி வழிகிறது. ஆனால், அம்மா உயிரோடு இல்லயே...' என நினைக்கும் போது, அவளுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.
'என் சுயநலத்திற்காக, அம்மாவிடம் எனக்கிருந்த அன்பை கூட வெளிக்காட்டாமல் இருந்து விட்டேனே...' என நினைத்து, கண்ணீருடன் புகைப் படத்தைப் பார்த்தவளுக்கு, 'எல்லாம் எனக்குத் தெரியும், கண்ணு...' என்று, அம்மா சொல்வது போல இருந்தது.
ஜெ.ஷர்மிளா
நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில், சிற்ப இயல் மற்றும் சிட்டி பிளானிங் படித்து, முனைவர் பட்டம் பெற்றவர். தற்சமயம், சென்னை சிற்பவியல் கல்லூரியில், விரிவுரையாளராக பணிபுரிகிறார். இவரது சிறுகதைக்கு ஆறுதல் பரிசும், அங்கீகாரமும் கிடைத்திருப்பது, அவருள் இருக்கும் எழுத்தார்வத்தை தூண்டி விட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

