PUBLISHED ON : ஜன 08, 2017

மார்கழி மாதத்தில் வரும், வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்போர், இறை சிந்தனையுடன், ஒரு பொழுது மட்டும் சிறிது உண்டு, மறுநாள், உபவாசம் இருப்பதன் மூலம், திருமால் உலகம் சென்று, விஷ்ணுவில் நிலை பெறுகின்றனர் என்று மகாவிஷ்ணுவே கூறியதாக, 'தத்துவ சாகரம்' என்ற நூல் கூறுகிறது.
* ஏகாதசி என்ற சொல்லுக்கு, 11ம் நாள் என்று பொருள். ஒரு ஆண்டில், 24 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில், மார்கழியில் வரும் ஏகாதசியே, வைகுண்ட ஏகாதசி என்றும், இப்புனித நாளில் விரதமிருந்து, பெருமாளை வழிபட்டால், ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து, மனம் ஒன்று ஆகிய, பதினொன்றுடன், பெருமாளோடு ஒன்றுபட்டு, நலம் காணலாம்.
* வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்போர் இரவில் கண் விழிப்பதற்காக, திரைப்படங்களை பார்க்க கூடாது. அத்துடன், கோபம், கலகம், தாம்பூலம், பெண்ணுடன் சங்கமம் மற்றும் பிறரை நிந்தித்தல் போன்ற செயல்களும் கூடாது.
* ஒரு பொழுது சாப்பிட்டு, முழுமையாக விரதம் இருக்க இயலாத பெண்கள், தாமிரப் பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில், துளசி இலைகளை இட்டு, பசி வரும் போது அருந்தலாம்.
* மார்கழி மாத ஏகாதசியை மட்டும் சிறப்பாக கூறுவதற்கு காரணம், தேவர்களுக்கு, ஓராண்டு என்பது, ஒருநாள். மார்கழி மாதம், அதில், அதிகாலை நேரமாக வருவதால், அப்போது, விழித்தெழுந்து வழிபடுவோர் வீட்டிற்கு, தீபத்தின் வழியே, திருமகளை நிலைபெற செய்கிறார் திருமால் என்பது ஐதீகம்.
