
ஆடிப்பால்!
தேவையானவை: தேங்காய் - ஒன்று, துருவிய வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, பச்சரிசி அல்லது பாசிப்பருப்பு - ஒரு மேஜை கரண்டி.
செய்முறை: தேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பு அல்லது பச்சரிசி சேர்த்து நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும். அந்த சக்கையை சிறிதளவு நீர்விட்டு மீண்டும் அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும். மீண்டும் ஒரு முறை இதேபோல் செய்யவும்.
மொத்தம் மூன்று முறை எடுத்த பாலையும், ஒன்றாக சேர்த்து கலந்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, சிறிதளவு நீர்விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். வெல்லம் கரைந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி ஏலக்காய்த்துாள் சேர்த்து நுரைத்து வரும்போதே இறக்கி விடவும்.
குறிப்பு: புதிதாக திருமணமான மணப்பெண் - மாப்பிள்ளையை அழைத்து, ஆடி மாதம் 1ம் தேதியன்று இந்த ஆடிப்பாலை கொடுப்பது வழக்கம்.
******
மாவிளக்கு!
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், நெய் - ஆறு மேஜைக்கரண்டி.
செய்முறை: பச்சரிசியை நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் வடிகட்டி நிழலில் உலர்த்தவும். ஓரளவு உலர்ந்ததும், மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போடவும். பிறகு, வெல்லத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி மாவில் சேர்க்கவும். நான்கு மேஜைக்கரண்டி நெய்யையும் சேர்க்கவும்.
மூன்றையும் நன்றாக கலந்து உருண்டையாக உருட்டி, நடுவில் குழி செய்து, நெய் விட்டு திரி போட்டு மாவிளக்காக ஏற்றவும்.
குறிப்பு: ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். குலதெய்வத்துக்கு வழிபடும் போதும், ஆடி மாதம் கோவில்களிலும் இந்த மாவிளக்கை ஏற்றுவர்.
*******
ஆடிக்கூழ்!
தேவையானவை: அரிசி நொய் - ஒரு கைப்பிடி அளவு, கேழ்வரகு மாவு - இரண்டு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 10, தயிர் - ஒரு கப், உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை: ஒரு கைப்பிடி அளவு நொய்யை ஒரு டம்ளர் நீர்விட்டு வேகவிட்டு, கேழ்வரகு மாவை, இரண்டு டம்ளர் நீர்விட்டு கரைத்து அதில் சேர்த்து வேகவிடவும். பிறகு உப்பு சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் தயிரை கடைந்து அதில் சேர்க்கவும்.
குறிப்பு: சின்ன வெங்காயம் தொட்டு இதை சாப்பிடலாம். ஆடி மாதம் அம்மனுக்கு இந்த கூழை செய்து படைத்து, பின் வினியோகிப்பது வழக்கம்.