
''வேகமாக கண்களில் மை தீட்டி, கூந்தலுக்கு சின்ன கொண்டையும், கிளிப்பும் பொருத்திக் கொண்டு, குர்தியை சரியாக இழுத்து நீவி நிமிர்ந்த போது, நளினியின் காதுகளில் மாமியாரின் குரல் வந்து விழுந்தது.
சட்டென அலுப்பு தோன்றியது. முகம் மாறி விட்டது.
கவனித்து விட்டான், நவீன்.
''என்னடா, என்ன ஆச்சு? ஆபிஸ் கவலையா? டெல் மீ...'' என, அருகில் வந்தான், நவீன்.
''அதெல்லாம் இல்லே, நவீன். உங்கம்மா குரல் வந்து காதில் விழுந்தது. அதான்.''
''அதுக்கு என்ன?''
''எப்பப் பாத்தாலும் சினிமா கதை தான் ஓடுது, நவீன். கவனிச்சீங்களா?''
''ஆமாம். அம்மா பயங்கர சினிமா ரசிகை. ஒரு படம் விட மாட்டாங்க. எங்க தஞ்சாவூர் தியேட்டர்கள் எல்லாம், அம்மாவுக்கு பிறந்த வீடு மாதிரி,'' எனக் கூறி சிரித்தான், நவீன்.
''அது இருக்கட்டும், நவீன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆர்வம். பாவம், 'ஹவுஸ் ஒய்ப்' அவங்க. பொழுதுபோக்கு வேண்டாமா? என் கவலை அது இல்லே. பசங்க எப்ப பாத்தாலும் இந்த சினிமா கதைகளுக்கு அடிமையாகி கிடக்கிற மாதிரி இருக்கு.
''எதுக்காக அம்மாவை கிராமத்தில் இருந்து அழைச்சுகிட்டு வந்தோமோ, அந்த நோக்கம் இப்போ மோசமாக மாறிடுமோன்னு கவலையா இருக்கு, நவீன்,'' என்றாள்.
''என்ன, நளினி சொல்றே, புரியலே.''
பொறுமையாக அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவள், ''சுஜன், சுஜின்னு நமக்கு, 'ட்வின்ஸ்' பிறந்தபோது, நாம என்ன நினைச்சு சந்தோஷப்பட்டோம், நவீன்? ரெண்டு குழந்தைகளையும் நல்ல குடிமக்களா, உயர்ந்த மனிதர்களா, மேன்மையானவர்களா வளர்க்கறது தான், நம்ம கடமைன்னு நினைச்சோமா இல்லையா?
''ஆனா, ரெண்டு பேரும் வேலைக்குப் போகிறோம். பொறுப்பான பதவிகளில் இருக்கிறோம். குழந்தைகளோட உட்கார்ந்து நேரம் செலவழிக்க முடியலே.
''ஆறாம் வகுப்பு வந்த பிறகும், ரெண்டு பேருக்கும் எதுலேயும் அக்கறை வரலே. படிப்பு, பண்பு, நடத்தைன்னு, எல்லாத்துலேயும் பின் தங்கி இருக்காங்க.
''எப்படி இதை சரி செய்யப் போகிறோம்ன்னு அச்சப்பட்ட போது தான், ஊரில் இருந்து அம்மாவைக் கூட்டிகிட்டு வரலாம். ஆறு மாசம் இங்கே நம்ம கூட இருக்கட்டும். குழந்தைகளும் ஸ்கூல் விட்டு காப்பகம், 'டே கேர்'ன்னு போகாமல் வீட்டுக்கு வந்து பாட்டியோட இருக்கட்டும்ன்னு சொன்னீங்க. எனக்கும் சரியான யோசனைன்னு பட்டுது.''
''ஆமாம்டா. இப்போ அதுக்கு என்ன குறை வந்துட்டது? குழந்தைகள் பாட்டியோட நிறைய நேரம் செலவழிக்கிறாங்க. அம்மாவுக்கும் மகிழ்ச்சி.''
''அது ஒருபக்கம் தான், நவீன். மறுபக்கத்தில் பெரிய பிரச்னை இருக்கு. பசங்க எப்ப பாத்தாலும் சினிமா கதை கேட்டுகிட்டே இருக்காங்க. சினிமா என்பது, ஒரு விதமான போதை தானே, நவீன்?
''நல்லா கவனிச்சு பாருங்க. மூணு பேரும் உக்காந்தாலே சினிமா கதை தான். பசங்க புது சுழல்ல மாட்டிக்கிறாங்களோன்னு, பயமா இருக்கு எனக்கு.''
மனைவியை அணைத்தபடி, ''எந்த பயமும் வேண்டாம், நளினி உனக்கு. எல்லாம் சரியாத் தான் நடக்கும். கற்பனை கவலைகள் தான் நம்ம பிரச்னையே. விடு, ஜாலியா இரு,'' என்றான், நவீன்.
அவளுக்கு பெருமூச்சு தான் வந்தது
ஒ ருபக்கம் அலுவலக வேலைகளில் நளினியின் மனம் ஈடுபட்டிருந்தாலும், ஆழத்தில் கவலை, நீரோட்டம் போல ஓடிக்கொண்டு தான் இருந்தது.
வாழ்க்கை நம்மை சரியாகத்தான் நகர்த்தி போகிறதா என, அதே கேள்வி இப்போதும் கேட்டது. நல்ல வீடு, வசதியான வாகனம், அருமையான பள்ளிக்கூடம், சேமிப்பு எதிர்கால திட்டங்கள் என, இரண்டு பேர் வருமானங்களுக்கும் சரியான செலவுகள் தான் செய்யப்படுகின்றன.
அன்பும், பிரியமும் சேர்ந்த இல்லம் தான். ஆனால், எங்கோ ஒரு பிழை இருந்தது; இருக்கிறது. சுஜியும், சுஜனும் எப்போதும் பள்ளியின் புகார் பட்டியலில் தான் இருந்தனர். தினம் ஒரு சண்டை. வாரம் ஒரு அக்கப்போர். ஏதாவது, ஒரு மாணவனின் அம்மாவோ, அப்பாவோ போன் செய்து குறை சொல்லாத நாளே கிடையாது.
'அப்படி என்னடா அராஜகம் செய்கிறீர்கள்?' எனக் கேட்டால், இருவரும் அவ்வளவு அலட்சியமாக பதில் சொல்வர்.
'ஆமாம்மா... அப்படித்தான் செய்வேன். அவன் என் பென்சிலை எடுத்தா, பாத்துகிட்டு சும்மா இருப்பேனா? கையை பிடிச்சு முறுக்கத்தான் செய்வேன். என் கையெழுத்தை அவள் கிண்டல் பண்ணா, அவள் நோட்டை கிழிக்கத்தான் கிழிப்பேன்...' என, உறுமுவாள், சுஜி.
'எனக்கு மட்டும் வேணும்ன்னே, 'அவுட்' கொடுக்கிறான், கேப்டன். 'வார்ம் அப்' செய்ய விடாம வேலை கொடுக்கறான். 'போலிங் சான்ஸ்' கொடுக்கறதே இல்லே. என், 'ஹேர்கட்' பத்தி, கிண்டல் வேறே. அதான், ரெண்டு அறை விட்டேன்...' என, அழுத்தமான குரலில் அலட்சியமாக சொல்வான், சுஜன்.
நளினியும் எல்லா விதமாகவும் சொல்லிப் பார்த்து விட்டாள்.
'கண்ணுகளா, இவ்வளவு கோபம் கூடாது, வாழ்க்கைக்கு; அதுவும் இந்த சின்ன வயசுல... கிளாஸ் டீச்சர் கிட்ட சொல்லலாம். வீட்டுக்கு வந்து சொல்லலாம். ஏன், 'கிளாஸ் லீடர், ஸ்கூல் பீப்பிள் லீடர்'ன்னு, புகார் தரலாம்.
'நீங்களே நேரடியா அடிதடில இறங்கறது, கண்டபடி திட்டறது, எல்லாரையும் பகைத்து கொள்வதுன்னு இருந்தால், எப்படி கண்ணுகளா?' என்பாள்.
'உனக்கு ஒண்ணும் தெரியாதும்மா. நாங்க எல்லாம் பண்ணிப் பாத்தும், ஒண்ணும் பிரயோசனம் இல்லே...'
ஒவ்வொரு முறையும் இப்படித்தான். நவீனுக்கும் தெரியும். 'போகப் போக மாறி விடும்...' என்பான். சரியான நம்பிக்கையா, குருட்டு நம்பிக்கையா என, தெரியவில்லை.
ஊரிலிருந்து மாமியாரை வரவழைத்து பார்க்கலாம் என்பது, ஒரு வாய்ப்பு தான். ஆனால், அடுப்பிலிருந்து தப்பித்து, கொதிக்கிற எண்ணெயில் விழுந்த கதையாக ஆகிக் கொண்டிருக்கிறதா?
ந ளினி கண்களை மூடி, அச்சத்தை விழுங்க முற்பட்டபோது, மொபைல்போன் அழைத்தது.
திடுக்கென்றது. அது பள்ளிக்கூடத்தின் அழைப்பு!
'அய்யோ... இது என்ன ஏழரையைக் கூட்டி வந்திருக்கிறதோ? மகனா, மகளா? யார் இன்று போர்க்களத்தில் வாள் சுழற்றி இருக்கின்றனர்! எந்த பெற்றோரிடம் போய் கைகட்டி நிற்க வேண்டும் இந்த முறை?' என, நினைத்தபடி, மெல்ல, ''ஹலோ, நளினி ஹியர்...'' என்றாள்.
''ஹாய் மேம். நான், ஜாஸ்மின் பேசறேன். ஸ்கூல் பிரின்சிபல். எப்படி இருக்கீங்க?''
''நல்லா இருக்கேன். தாங்க் யூ. நீங்க?''
''சூப்பரா இருக்கோம், நாங்க எல்லாரும். சுஜன், சுஜி மாதிரி, ரெண்டு வைரங்கள் இருக்கும்போது என்ன வரம் வேணும் எங்களுக்கு?'' என, எதிர்ப்பக்கம் உற்சாகக் குரல் ஒலித்தது.
''மேடம்.''
''ஆமாம், மிசஸ் நளினி. வரும் வெள்ளிக்கிழமை, ஆண்டு விழா நடக்குது. அதுல, 'பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ் ஆப் தி இயர் அவார்ட்ஸ்' கொடுக்கிறோம். உங்க குழந்தைகள், ரெண்டு பேருக்கும் தான். கண்டிப்பா நீங்களும், சாரும் வந்துடுங்க. அழைப்பிதழ் அனுப்புறோம். கங்கிராட்ஸ் நளினி மேடம். சீ யூ. பை பை.''
'என்ன, என்ன சொன்னார்கள்? 'பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ் அவார்டா?' அவள் குழந்தைகளுக்கா? காதில் விழுந்தது உண்மையான செய்தியா? இது எப்படி சாத்தியம்?' என, யோசித்தபடி, நவீனை அழைத்து சொன்ன போது, அவனும் வியந்து தான் போனான்.
ப ள்ளிக்கூட வைபவம் அருமையாக நடந்து முடிந்தது. ஆசிரியர் - பெற்றோர் சங்க அழைப்பு என்பதால், நல்ல கூட்டம். சுஜன், சுஜி இருவரையும் தேடி வந்து, பாராட்டி விட்டுப் போயினர்.
நட்பு பேணுவது, பெற்றோரை மதிப்பது, எளிமையாக இருப்பது, சமத்துவ மனதுடன் பழகுவது என, நிறைய தலைப்புகள் வைத்து, இருவரையும் தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறினர்.
மனம் முழுவதும் மகிழ்ச்சியில் மிதக்க, விழிகளில் ஆனந்தமாக நீர் சுரக்க, இனிய உணர்வுகளுடன் வீடு வந்து சேர்ந்தனர்.
குழந்தைகளை இழுத்து பக்கத்தில் வைத்து, ''வாழ்த்துகள் கண்ணுகளா. உங்கள் நடத்தை இப்படி அருமையா மாறியிருக்கே. நானும், அப்பாவும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இந்த அதிசயம் நடக்கலையே. இப்போ மட்டும் எப்படி நடந்தது கண்ணுகளா?'' என்றாள், நளினி.
புன்னகையுடன், ''பாட்டி சொன்ன கதைகள்தாம்மா. சினிமா கதைகள்ன்னு தானே, நீ கவலைப்பட்டே? சினிமா கதைகள் தான். ஆனால், பாட்டி வெறும் கதையா சொல்லாமல், அதில் இருக்கும் நீதி, உண்மை, தத்துவம் மற்றும் வாழ்க்கை நெறின்னு எடுத்து சொல்வாங்க.
''திருவிளையாடல் படத்தில், முருகனும், பிள்ளையாரும் மாம்பழத்துக்கு சண்டை போடுவாங்க இல்லையா? அப்பா, அம்மாவை சுத்தி வந்து, 'அம்மையப்பன் தான் உலகம், உலகம் தான் அம்மையப்பன்'னு சொல்லி பழத்தை ஜெயிச்சுடுவார், பிள்ளையார். தாய் - தந்தை என்ற உறவு எவ்வளவு முக்கியம்ன்னு புரிஞ்சது எங்களுக்கு.
''அதே படத்துல பார்வதிக்கும், சிவனுக்கும் சண்டை வரும். பிறந்த வீட்டை விட்டுக் கொடுக்க முடியாமல், பார்வதி கிளம்பிப் போயிடுவாங்க. அப்புறம் சிவன் போய் பேசி, சமாதானம் செஞ்சு கூட்டிகிட்டு வருவார்.
''சிவனும், சக்தியும் சேர்ந்தால் தான், அது முழுமைன்னு சிவசக்தின்னு சொல்வார். அப்போ தான் எனக்கு புரிஞ்சுது. கேர்ள்ஸ் கிட்டேயும் பரிவா, அன்பா நடந்துக்கணும்,'' எனக் கூறினாள், சுஜி.
''நாங்க கோவளம், 'பீச் பிக்னிக்' போன போது, என் வகுப்பு லிசி, உபாசனா ரெண்டு பேரும் அலைகள்ல விழுந்தபோது, சட்டுன்னு கைபிடிச்சு இழுத்து கரைக்கு இழுத்துட்டு வந்தேம்மா,'' என, அதே புன்னகையுடன் தொடர்ந்தான், சுஜன்...
''பாட்டி, கர்ணன் படம் பத்தி சொன்னாங்கம்மா. துரியோதனனும், கர்ணனும் அவ்வளவு நட்போட இருந்தாங்களாம். தன்னை ராஜாவாக்கி புகழோடும், பெயரோடும் வாழ வெச்ச துரியோதனனுக்கு கடைசி வரை நன்றியுடன் இருந்தானாம், கர்ணன். நட்புக்கு முக்கியமானது நேர்மைன்னு சொன்னாங்க, பாட்டி.
''ஆதிபராசக்தி என்று ஒரு படம். நம்பியார் பணக்கார பக்தர். ஆயிரக்கணக்கில் செலவழிச்சு பூஜை, ஹோமம்ன்னு செஞ்சு, அம்மன் வருகைக்காக காத்திருப்பார். ஆனால், பராசக்தி வரலையாம்.
''பக்கத்தில் குடிசை வீட்டில் ஏழ்மையான நிலையில், சோறு செஞ்சு வச்சு ஆசையா அழைக்கிற, மீனவர் வீட்டுக்கு போயிடுவாங்களாம், அம்மன். பக்திக்கு முக்கியம் மனசு தான், ஆடம்பரம் இல்லேன்னு புரிஞ்சுகிட்டோம்மா.
''திருவிளையாடல் படத்தில், தருமி கொண்டு வந்த பாட்டை ஏத்துக்காம, நக்கீரன் எதிர்ப்பார். சிவனே வந்து, அந்த கருத்து பத்தி சொல்வார். ஆனால், நக்கீரன் ஏற்றுக் கொள்ளாமல், இயற்கையில் கூந்தலுக்கு நறுமணம் கிடையாதுன்னு வாதம் செய்வார்.
''நான் கடவுள், என்கிட்டயே வாக்குவாதம் செய்வாயான்னு சிவன் கோபமாக கேட்டாலும், கொஞ்சமும் பயப்படாமல் உண்மை உண்மைதான்னு அதே தெளிவோட நிற்பார், நக்கீரர். வாழ்க்கையில் தெளிவான சிந்தனையும், நேர்மையான தைரியமும் எப்பவும் இருக்கணும்ன்னு, பாட்டி இதை வெச்சு சொன்னாங்கம்மா,'' எனக் கூறி முடித்தான், சுஜன்.
அவர்கள் சொல்லிக் கொண்டே போக, மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் கேட்டுக் கொண்டு இருந்தாள், நளினி.
வி. உஷா