
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 23 வயது பெண். கல்லுாரியில் படித்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணன். கார் ஷோரூம் ஒன்றில், மேலாளராக பணிபுரிகிறான். என் அப்பா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நான், அம்மா செல்லம். நாங்கள் இருவரும் தோழிகள் போல் தான் பழகுவோம்.
என் அண்ணனுடன் பணிபுரியும் நண்பன் ஒருவன், அவ்வப்போது வீட்டுக்கு வருவான். அவன், என் பக்கத்து வீட்டு அக்காவுடன் படித்தவன். அவனது நல்ல குணங்களை பற்றி உயர்வாக பேசுவார், அந்த அக்கா.
அவனது நடவடிக்கைகள், 'டீசன்ட்' ஆக இருக்கும். என்னுடன் அளவோடு தான் பேசுவான். அவனை, எனக்கு மிகவும் பிடிக்கும். அவனை பற்றி என் அம்மாவிடமும் கூறுவேன்.
'அவனும் உனக்கு ஒரு அண்ணன் தான்...' என்று கூறி சென்று விடுவார். ஆனால், மனதிற்குள் அவனை காதலிக்கிறேனோ என, சந்தேகம் அடிக்கடி வரும்.
அவன், என்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று அறிய பலமுறை முயன்றாலும், நழுவி சென்று விடுவான் அல்லது பேச்சை மாற்றி வேறு விஷயம் பேசுவான்.
ஒருமுறை, அவன் வீட்டுக்கு வந்தபோது, அவனது மொபைல் போனை எடுத்துப் பார்த்தேன். என் பெயருக்கு முன், ஒரு அழகான செல்லப் பெயரையும், இதயம் படமும் போட்டு வைத்திருந்தான்.
அவனும், என்னை விரும்புகிறானோ என்று தோன்றுகிறது. ஆனால், அவன் வெளிப்படையாக எதுவும் கூறாததால், அவனின் எண்ணத்தை எப்படி அறிவது? அவனை காதலிக்கலாமா, வேண்டாமா?
நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு,உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
இருபத்தி மூன்று வயதாகும் நீ, முதுகலை பட்டப்படிப்பு படிப்பாய் என, நம்புகிறேன். உன் தந்தை மற்றும் அண்ணன் போல, நீயும் படித்து முடித்து, வேலைக்கு சென்று சொந்தக்காலில் நிற்க வேண்டாமா?
மிக மிக நல்லதாய் தெரியும் ஒன்று, உண்மையில் மிக மிக கெட்டதாய் இருக்கும் என்பர். அப்படித்தான், உன் அண்ணன் நண்பனும் இருப்பான். யதார்த்த ஆண்கள், செம்பு கலந்த தங்கம் போன்றவர்கள். அழகிய டிசைனில் நகை செய்யலாம்.
சீட்டுக்கட்டு மாளிகை போல், தங்கள் ஆளுமையை மிகைபடுத்தி காட்டுவோர், ஒரு சீட்டு உருவலில் நொறுங்கி காணாமல் போவர். அவனை பற்றி ஏதோ தெரிந்து கொண்டு தான், 'உன் அண்ணன் போல' எனக்கூறி, காதல் ஆசையை முடக்குகிறார், உன் அம்மா.
அவனது மொபைல் போனில், உன் பெயருக்கு முன் செல்லப் பெயரும், இதயம் படமும் போட்டிருக்கிறான் என்கிறாய். அவனது மொபைல் போனை முழுவதுமாக துழாவி பார். ஏழெட்டு பெண்களுக்கு அல்வா, ஜிலேபி, லட்டு, பாதுஷா என, செல்லப்பெயர் சூட்டியிருப்பான்.
அடுத்து, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்:
* உன் அண்ணனுக்கு நான்கைந்து நண்பர்கள் இருந்து, அவர்களும் மிக நல்லவர்கள் என பேசப்பட்டால், அவர்களை காதலிப்பாயா? உன் வயது பெண்கள், கட்டாயம் காதலித்தே ஆகவேண்டும் என, சட்டம் ஏதாவது இருக்கிறதா?
* எக்காரணத்தை முன்னிட்டும், அண்ணனின் நண்பனிடம், 'உன்னை காதலிக்கிறேன்...' என, கூறி விடாதே. நீயும், அம்மாவும் தனிமையில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவரிடம் மனம் விட்டு பேசு.
'என் படிப்பு முடிய ஒரு ஆண்டு பாக்கி இருக்கிறது. படிப்பு முடித்த பின், வேலை தேடி அமர்வேன். அதன்பின், என் கல்யாணம் எப்படியும் இரண்டு ஆண்டு ஆகலாம். நம் வீட்டுக்கு வரும் அண்ணனின் நண்பனை திருமணம் செய்து கொண்டால், என் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என, நம்புகிறேன்.
'இது பற்றி நீ, அப்பாவிடமும், அண்ணனிடமும் பேசு. தன் நண்பன் பற்றி முழுமையாக விசாரிக்கட்டும், அண்ணன். அவன் தகுதியான மாப்பிள்ளையாக இருந்து, இரண்டு ஆண்டுகள் காத்திருக்கிறான் என்றால், அவனையே எனக்கு மணமுடித்து வையுங்கள். விசாரிப்பில் எதுவும் திருப்திகரமாய் இல்லாவிட்டால், இந்த விஷயத்தை கைவிட்டு விடுவோம்...' எனக் கூறு.
அவசரப்படாதே, சொந்தக்காலில் நிற்க வாய்ப்பு அமைந்த பின், உனக்கு சம வயது அல்லது உன்னை விட ஓரிரு வயது கூட உள்ள வரனை பார்த்து, மணந்து கொள்.
* பிரச்னையை வேறொரு கோணத்திலும் பார்ப்போம். உன் அண்ணனின் நண்பன் நல்ல வேலையில் இருக்கிறான். உன்னுடைய முன்னெடுப்பு ஏதுமின்றி அவனே, அவனது பெற்றோரிடம் கூறி, அவர்கள் மூலமாக உன்னை பெண் கேட்கிறான் என, வைத்துக்கொள்.
படிப்பு முடிந்து, வேலைக்கு நீ சென்றவுடன் திருமணம் என்ற நிபந்தனையுடன், அவனை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.