sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 26, 2025

Google News

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 26 வயது பெண். படிப்பு: பி.இ., திருமணமாகி விட்டது. கணவர் வயது: 30. ஐ.டி., நிறுவனம் ஒன்றில், 'டீம் லீடர்' ஆக பணிபுரிகிறார். எப்போதும் வேலை வேலை என்றே இருப்பார்; உயர் பதவிக்கு வரவேண்டும், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர்.

நானும், ஐ.டி, நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், எனக்கு குழந்தை பிறந்ததால், வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருந்தேன்.

கணவருக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் உள்ளனர். மாமனார் - மாமியார் மூத்த மகனுடன் உள்ளனர். எனக்கு ஒரு அண்ணன். ஹைதராபாத்தில் குடும்பத்துடன் இருக்கிறான். அவனுடன் தங்கியுள்ளனர், என் பெற்றோர்.

குழந்தைக்கு இப்போது, மூன்று வயதாகி விட்டதால், வேலைக்கு செல்லலாம் என்று நினைக்கிறேன். என் பெற்றோரும் என்னுடன் வந்து தங்குவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால், கணவருக்குத் தான் இதில் விருப்பமில்லை.

'வெளிநாட்டுக்கு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போலுள்ளது. அப்படி போவதாக இருந்தால், நீயும் என்னுடன் வந்துவிடுவாய். இப்போது வேலைக்கு சேர்ந்து விட்டால், உனக்கு, விடுமுறை கிடைக்காமல் போகலாம். நீ சேரும் ஆபிசில் உடனடியாக நான் போகும் வெளிநாட்டுக்கு உன்னையும் பணிமாறுதல் கொடுத்து அனுப்புவர் என்று நிச்சயமில்லை...' என்கிறார்.

'என் பெற்றோர் எனக்கு துணையாய் இருப்பர். முதலில் நீங்கள் மட்டும் வெளிநாட்டுக்கு போங்கள்...' என்றால் கேட்க மறுக்கிறார்.

ஒருநாள், அவருக்கு தெரியாமல், அவரது, 'லேப்-டாப்'பில் இருந்து, கம்பெனி ஒன்றுக்கு, வேலைக்கு விண்ணப்பித்தேன்.

கணவர் சில நாட்கள், வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கம். முக்கியமான, 'மீட்டிங்'குகளையும் வீட்டிலிருந்தபடியே கலந்து கொள்வார்.

நான் வேலைக்கு விண்ணப்பித்த தகவலை, கணவர் அலுவலகத்தில் பார்த்துள்ளனர். கணவர் தான், இந்த நிறுவனத்தை விட்டு, வேறு வேலைக்கு முயற்சிப்பதாக, அவருக்கு வேண்டாத சிலர், மேலதிகாரிகளிடம் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை நம்பிய அந்த அதிகாரியோ, உண்மையை ஆராயாமல் கணவரை கூப்பிட்டு கண்டித்துள்ளார். வெளிநாட்டுக்கு போவதையும் தடை செய்து விட்டார்.

வீட்டுக்கு வந்தவர், 'லேப்-டாப்'பில் இருந்ததை பார்த்து, என் மீது கோபப்பட்டு சண்டை போட்டார்.

'உன்னால் தான் என், 'பிரமோஷன்' மற்றும் வெளிநாட்டுக் கனவும் போய்விட்டது. இனி, என் கண் முன்னே இருக்காதே. எங்காவது போய்விடு...' என, கோபமாக பேசுகிறார்.

குழந்தையிடமும் வெறுப்பை காட்டுகிறார். நான் பலமுறை மன்னிப்பு கேட்டும், சமாதானம் ஆகவில்லை. என் அவசர புத்தியால், வாழ்வே கேள்விக்குறியாகி விட்டது. நான் என்ன செய்யட்டும், அம்மா.

— இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

குழந்தையைப் பார்த்துக் கொள்ள பொறுப்பான ஆள் யாரும் இல்லாததால், நீ வேலையை விட்டுள்ளாய். மீண்டும் வேலைக்கு செல்ல நினைப்பது, நியாயமானது தான்.

நீ என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?

* உன் கணவருக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால், அவருடன் போயிருக்கலாம். அங்கு சென்ற பின் கூட வேலையை தேடிக் கொண்டிருக்கலாம்

* கணவரிடம் பேசி, வெளிநாட்டில் அவரும், உள்நாட்டில் நீயும் வேலை செய்ய ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். உன் மீதும், குழந்தை மீதும் உண்மையான பாசம் இருந்தால் இதற்கு சம்மதித்திருப்பார், கணவர்

* சரி, கணவருக்கு தெரியாமல் வேலைக்கு விண்ணப்பிக்கிறாய். திருடப் போனவன் தலையாரி வீட்டில் ஒளிந்து கொண்டது போல, கணவரின் கணினியில் உன் வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி இருக்கிறாய். தெருவுக்கு தெரு, 'ப்ரவுஸிங் சென்டர்'கள் உள்ளன. அதில், எதாவது ஒன்றில், உன் வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி இருக்கலாம்

* கணவரின் கணினியில் அனுப்பி இருந்தாலும், தகைமைத்திரட்டில் உன் பெயர் மற்றும் கல்வித்தகுதி தானே போட்டிருக்கும்? நீ என்ன, கணவர் பணிபுரியும் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரது பதவியையா கேட்டாய்? வேறு யாருக்கோ அனுப்பப்பட்ட உன்னுடைய மின்னஞ்சலை வைத்து, கணவரின் நிறுவனம் எப்படி அவரை தண்டிக்க முடியும். வெளிநாட்டுக்கு கணவர் போவது அந்த அதிகாரிக்கு பிடிக்கவில்லையோ என்னவோ!

கணவரின் தற்காலிக பழிவாங்கல் தான் இது. ஓரிரு மாதங்களில் சரியாகி விடுவார், கணவர்.

கணவர் பணிபுரியும் நிறுவனத்துக்கு நேரில் சென்று விளக்கம் தர முயற்சிக்காதே.

கணவருக்கு மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நீயும் உடன் சென்று, வெளிநாட்டில் ஒரு வேலையை தேடிக் கொள்.

உனக்கென தனியாக, ஒரு மடிகணினி வாங்கு. உனக்கான மின்னஞ்சல் முகவரியை வடிவமை.

சிறுசிறு ஊடலில் எதற்கு அவசரபுத்தி. நில், கவனி, செயல்படு.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us