
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 24 வயது பெண். எம்.ஏ., படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு தம்பி, கல்லுாரியில் சேர்ந்திருக்கிறான். ஒரு தங்கை, பள்ளியில் படிக்கிறாள். தம்பி, தங்கையை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வேலைக்கு சென்று அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என, நினைப்பேன்.
மளிகைக்கடை வைத்திருக்கிறார், அப்பா; அம்மா, இல்லத்தரசி. மத்திய தர குடும்பம் தான்.
நாங்கள், முதலில் கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தோம். இரண்டு சித்தப்பாக்கள் மற்றும் அத்தை - மாமா என, அனைவரும் ஒன்றாக இருந்தோம். சொத்து பிரச்னை காரணமாக, நாங்கள் தனியாக வந்து விட்டோம். எங்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார், அப்பா. எங்களுக்கு எந்த குறையும் இதுவரை வைத்ததில்லை.
எனக்கு பிரச்னையே, தம்பி தான். நான் குளிக்கும் போது, டிரஸ் செய்கிற போது, திடீரென எட்டிப் பார்க்கிறான். சுதாரித்துக் கொண்டு கேட்டால், 'தெரியாமல் நடந்துவிட்டது...' என, 'கூலாக' சொல்கிறான்.
பெற்றோரிடம் சொன்னால், தம்பியை அடித்து துவைத்து விடுவர். நான் பொய் சொல்வதாக, என் மீதே பழி சொல்வான் என்றும் தயங்குகிறேன்.
ஒருநாள், இரண்டு நாள் என்றால் தெரியாமல் நடந்திருக்கலாம். ஆனால், அடிக்கடி இதுபோல் நடக்க, தம்பியை திட்டி, அடித்து விட்டேன். விஷயம் புரியாமல், 'தம்பியை ஏன் அடித்தாய்?' என, என்னையே திட்டுகிறார், அம்மா.
சில நாட்கள் சரியாக இருந்தான். இதே போல் என் தங்கைக்கு நடக்க, அவள் கத்தி கூப்பாடு போட, நான் தான் சமாதானப்படுத்தினேன்.
பாத்ரூம் கதவை மாற்ற சொல்லியும், 'பணம் வரட்டும் செய்கிறேன்...' என்கிறார், அப்பா.
வீட்டிலேயே இப்படி செய்கிறவன், வெளியே செய்ய மாட்டான் என்பது, என்ன நிச்சயம். இதனால், அவனுக்கு கெட்டப் பெயர் வந்து விடுமே என, பயப்படுகிறேன். அவன் திருந்துவது எப்படி? இதுபோல செய்யாமல் இருக்க, அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். எனக்கு வழி காட்டுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன் தம்பிக்கு ஒரு விதமான மனநோய் இருக்கிறது. இந்த நோயை தமிழில், 'பார்வை மோகம்' என்பர். 18 வயது ஆண், பெண்ணை இந்நோய் தாக்கும். இந்திய ஜனத்தொகையில், 12 சதவீத ஆண்களுக்கும்,4 சதவீத பெண்களுக்கும், இப்பிரச்னை இருக்கிறது. சிலர் எவ்வித சிகிச்சையும் இன்றி காலப்போக்கில், இந்த மனநோயை விட்டொழிப்பர்.
இந்த மனநோய்க்கு ஆளானவர்கள், சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்டிருக்கலாம். போதை பொருள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பர். அதிக பாலியல் லோபத்தால் பீடிக்கப் பட்டிருப்பர்.
நீயும், தங்கையும் பெற்றோரிடம், 'நாங்கள் சொல்லும் விஷயத்தை கேட்டு, தாம்துாம் என, குதிக்காதீர்கள். தம்பிக்கு ஏதோ மனநோய் இருப்பது போல் தெரிகிறது. பிறர் குளிப்பதை ஒளிந்திருந்து பார்க்கிறான்.
'அவன், எந்த உறவு பெண்ணாக இருந்தாலும் பார்ப்பான். அவனுக்கு மனநல சிகிச்சை தேவை. தம்பியை பெரியளவில் பயமுறுத்தி விடாமல், ஆதரவாய் மருத்துவரிடம் அழைத்து போவோம்...' என கூறுங்கள்.
'மருத்துவரை பார்க்க வரமாட்டேன்...' என, அடம் பிடிப்பான், தம்பி.
'நீ, பெரும் குற்றவாளியாக மாறி, சிறைச்சாலைக்கு போக விரும்புகிறாயா அல்லது திருந்தி வாழ விரும்புகிறாயா? யாரிடமும் இதை கூறாமல், ரகசியம் பாதுகாப்போம். ஒட்டியிருக்கும் மனநோய் அட்டைப்பூச்சியை பிய்த்தெறிவோம்...' என, ஆறுதல் படுத்து.
மனநல மருத்துவர், உங்கள் தம்பியின் பிரச்னைகளை விசாரித்து, சிகிச்சை அளிப்பார்.
இப்போது, செலவு கணக்கு பார்க்காமல் குளியலறைக்கு பாதுகாப்பான, 'லாக்' பொருத்தி விடுவர், உன் பெற்றோர்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.