sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 06, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —



நான், 26 வயது பெண். திருமணமாகி, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை உள்ளது. மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றில், உயர் அதிகாரியாக பணிபுரிகிறார், கணவர். நான், இல்லத்தரசி.

நாங்கள் வசிக்கும் காலனியில் உள்ளவர்கள் அனைவருமே, கணவர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே வேலை பார்க்கின்றனர். கணவரிடமும், என்னிடமும் அன்பாகவும், மரியாதையாகவும் பேசுவர்.

வெளியில் நல்லவர் போல் நடந்து கொள்ளும் கணவரின் மறுபக்கம், மிகவும் அருவருப்பானது. பெண்கள் என்றாலே மட்டமாக நினைத்து பேசுவார், கணவர். உலகத்தில் கெட்டுப் போகாத பெண்ணே இல்லை என, வாதிடுவார். என்னையும், தன் அம்மாவைக் கூட இப்படித் தான் சொல்வார்.

'உங்க ரெண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் நீங்களும் தான் கெட்டுப் போயிருப்பீர்கள்...' என்பார்.

மேலும், அக்கம்பக்கத்து பெண்களிடம் மரியாதையாக பேசிவிட்டு, பிறகு என்னிடம் தனியாக, 'அவளுக்கு ஆண் மோகம் அதிகம். பேசறப்பவே தெரியுது. அவள் கணவனால், இவளை எப்படி சமாளிக்க முடிகிறதோ...' என்பார்.

'இப்படி பேசாதீர்கள்...' என, பலமுறை சொல்லிவிட்டேன். ஆனால், அவர் கேட்பதில்லை. இதெல்லாம் சகித்துக் கொண்டாலும், என் அம்மாவை பற்றி கூட கேவலமாக பேசுவார்.

என் பெற்றோருக்கு, நான்கு பிள்ளைகள். மூத்தவள் நான். இரு தங்கைகள், ஒரு தம்பியும் உள்ளனர்.

நான், பள்ளியில் படித்த போது இறந்துவிட்டார், அப்பா. வங்கியில் பணிபுரிந்ததால், எங்கள் நால்வரையும் நன்கு படிக்க வைத்தார், அம்மா. என் பாட்டியும், தாத்தாவும் எங்களுக்கு துணையாக இருந்தனர்.

என் அம்மாவுக்கு இப்போது, 50 வயதாகிறது. பார்ப்பதற்கு எனக்கு அக்கா போல் தான் இருப்பார். 40 வயதுக்கு மேல் சொல்ல முடியாத உடல்வாகு. அழகாகவும், நல்ல நிறத்துடனும் இருப்பார்.

என் அம்மாவுக்கு, வங்கியில், 'லீவு' கிடைக்கும் போதெல்லாம், என்னையும், திருமணமான பெரிய தங்கையையும் பார்க்க கிளம்பி வந்து விடுவார். கணவரிடமும், மாமியாரிடமும் மரியாதையாக நடந்து கொள்வார்.

என் அம்மா வந்து போன பின், இவர் பேசுவதை கேட்டால், அழுகையாக வரும்.

'பார்க்க இளமையாக, சினிமா நடிகை போல இருக்காங்களே... வங்கியில் நல்ல பதவியில் வேறு இருக்காங்க. இதுவரை எவனும் கைவைத்திருக்க மாட்டானா? ஒரு குழந்தை பெத்த நீ, தளர்ந்து போயிட்டே... நாலு குழந்தை பெற்றும் உன் அம்மா நல்லா இருக்காங்களே...' என, நா கூசாமல் பேசுவார்.

என் அம்மாவிடம், 'சிரமப்பட்டு இங்கு வர வேண்டாம். நானே அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்கிறேன்...' என்றாலும் கேட்க மாட்டார்.

இங்கு வரும் போதெல்லாம் மாப்பிள்ளைக்கு பிடிக்குமே என, முறுக்கு, தட்டை மற்றும் சீடை என, செய்து வருவார். அந்த நன்றி கூட இல்லாமல் பேசுவதை கேட்க, சங்கடமாக இருக்கும்.

வேலை பளு காரணமாக, கொஞ்ச நாட்களுக்கு அம்மா வராவிட்டால், 'ஏன் உன் அம்மா வரவில்லை. நீ, ஏதாவது சொல்லி விட்டாயா? உன்னையே பார்த்து பார்த்து, 'போர்' அடிக்கிறது. உன் அம்மா வந்தா, கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்குமே...' என்பார்.

அம்மாவிடம் இதை எப்படி கூறுவது என்று தெரியவில்லை. அவரை வர வேண்டாம் என்று சொல்வதற்கும் மனம் வரவில்லை. நாளை, என் மகளையும் இப்படி பேச மாட்டார் என்பது, என்ன நிச்சயம். கணவரை திருத்த வழி இருந்தால் கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

இந்த உலகின் எல்லா ஆண், பெண்களுக்குள்ளும், ஒரு விசித்திர ஜந்து ஒளிந்துள்ளது. அது குயுக்தியானது-. எந்த நேரத்திலும் ஆபாசத்தில் நீந்தக் கூடியது-. அருவருப்பான சுயநலம் கூடியது.-

பெண்களுக்குள் வசிக்கும் விசித்திர ஜந்துக்கு கொஞ்சம் இங்கிதமும், சமயோசிதமும் உண்டு. ஆண்களுக்குள் இருக்கும் விசித்திர ஜந்து, அரக்கத்தனம் வாய்ந்தது.

சமூக நியதிகள், கோட்பாடுகள், சட்ட திட்டங்கள் கருதி, மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பெரும்பாலானோர் பேசுவதில்லை. சிலர், பகிரங்கமாக பேசி, வக்கிரவாதிகளாக அவப்பெயர் எடுக்கின்றனர்.

இளம் பிராயத்து குடும்ப பிரச்னைகள் கூட, கணவரின் துர்நடத்தைக்கு காரணமாய் இருக்கலாம்.

உன் கணவர் பேச, பேச நீ அமைதியாக இருப்பது, அவருக்கு வசதியாக இருக்கிறது. ஆபாசங்களை அள்ளி கொட்டுகிறார்.

'இனி எந்த பெண்ணை ஆபாசமாக பேசினாலும், நாக்கில் சூடு போடுவேன்...' என, சூட்டுக்கோலை உயர்த்து. நாக்கில் சூடு போட முடியவில்லை என்றால், கணவரின் கையிலோ, காலிலோ ஒரு இழுப்பு இழு.

ஆங்காரமாக அடிக்க வந்தால், 'அவரின் ஆபாச வசனங்களை மொத்தமாக தொகுத்து புகாராக எழுதி, மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பேன்...' எனக் கூறு.

இந்திய தண்டனை சட்டத்தில், பெண்மையை இழிவுபடுத்துவோரை தண்டிக்க, பல சட்டப் பிரிவுகள் உள்ளன.

உன் கணவரை போன்ற சாக்கடை மனிதர்கள் தான், பாலியல் வன்முறையாளர்களாக குழந்தைகளின் மீது, பாலியல் தாக்குதல் நடத்துபவர்களாக பரிணமிக்கின்றனர்.

கணவரின் அருவருப்பான பேச்சுகளை வீடியோ எடு.

உன் அஸ்திரங்களுக்கு பயந்து, கணவர் கொஞ்சம் இறங்கி வந்தால், மனநல மருத்துவரிடம் அழைத்துப் போ.

உன்னுடைய எந்த நடவடிக்கைக்கும் கணவர் ஒத்துழைக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறு. குழந்தையை அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு, மேலும் படித்து வேலைக்கு போ.



— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us