
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 36 வயது பெண். எனக்கு ஒரு அக்கா. அக்காவுக்கு திருமணமாகி வெளியூரில் இருந்தபோது, நான் கல்லுாரியில் சேர இருந்தேன். என் அக்கா இருக்கும் ஊரில் உள்ள கல்லுாரியில் சேர்த்தனர்.
'ஹாஸ்டலில் தங்க வேண்டாம். என்னுடனே தங்கி, கல்லுாரிக்கு போய் வா...' என, அக்கா வற்புறுத்தியதால், அவர்களுடன் தங்கி, கல்லுாரிக்கு செல்ல ஆரம்பித்தேன்.
இதில் என் பெற்றோருக்கு விருப்பமில்லா விட்டாலும், அக்காவும், மாப்பிள்ளையும் கூறியதால், அதை மனதார ஏற்றுக் கொண்டனர்.
அப்போது, எனக்கும் சிறு வயதாக இருந்ததால், சுயமாக முடிவெடுக்க தெரியவில்லை. அங்கிருந்த கொஞ்ச நாட்களுக்கு பின், அக்காவின் கணவர், என்னிடம் பாசமாக பழகுவது போல், என்னை தன் வசப்படுத்தி கொண்டார். எனக்கும் விபரம் புரியாததால், பின் விளைவுகள் பற்றி கவலைப்படாமல், அவருடன் நெருக்கமாக பழகினேன்.
இதில், நான் கர்ப்பமானதை அறிந்து, அக்கா மிகவும் வருத்தப்பட்டு, தற்கொலைக்கு முயன்றாள். அப்போது அக்காவுக்கு இரு குழந்தைகள் வேறு இருந்தனர். எப்படியோ அக்காவை காப்பாற்றினர்.
என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர், பெற்றோர். அக்கா கணவரோ, என்னை விடுவதாக இல்லை. எப்படியோ அக்காவின் சம்மதத்தை வாங்கி, என் பெற்றோரிடம் வற்புறுத்தி, என்னை கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.
முதலில் தனியாக வீடு எடுத்து, என்னை தங்க வைத்தார். எனக்கு பெண் குழந்தை பிறந்ததும், 'தனியாக இருக்க வேண்டாம். உன் அக்காவுடன் நீயும் வந்து தங்கிவிடு...' எனக் கூறி, அழைத்து வந்துவிட்டார்.
இந்த திருமணத்தில், அக்காவுக்கு சம்மதமில்லை என்பதும், கணவரின் வற்புறுத்தலால் தான் சம்மதித்தார் என்ற உண்மை தெரிய, நொறுங்கி போனேன். என்னையும், குழந்தையையும் நன்றாக கவனித்துக் கொண்டாலும், என்னுடன் சரியாக பேச மாட்டாள், அக்கா. பெற்றோரின் ஆதரவும் கிடைக்கவில்லை.
இப்போதெல்லாம், கணவர் கூட என்னை கண்டு கொள்வதில்லை. சின்ன சின்ன பிரச்னைகளை பெரிதாக எடுத்து, என்னை வார்த்தைகளால் கொல்கிறாள், அக்கா.
வளர்ந்த அக்கா பிள்ளைகளாலும், எனக்கு பிரச்னை தான். என் குழந்தையை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
'தனியாக போய் விடுகிறேன்...' எனக் கூறினால், 'எந்த தைரியத்தில் தனியாக போகிறாய்? குழந்தைகள் நலனுக்காவது அனுசரித்து போ...' என, அறிவுரை கூறுகிறாள், அக்கா.
வெளியே எங்கு போவதாக இருந்தாலும், அக்கா, கணவர் மற்றும் அக்கா குழந்தைகள் மட்டுமே சென்று வருவர். விசேஷ நாட்களில், என்னை எதிலும் கலந்து கொள்ள விடுவதில்லை.
இதையெல்லாம் நினைத்து, தினமும் அழுது கொண்டிருக்கிறேன். என் மகளது எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.
எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
ஒரு குடும்பத்தில், நான்கு சகோதரிகள் இருப்பதாக வைத்து கொள்வோம். நான்கு மலர்களுமே ஒரு கொடியில் பூத்தவை. நான்கு மலர்களும் ஒரேவிதமான வர்ணம் மற்றும் வாசனையுடன் தான் காணப்படும்.
நான்கு சகோதரிகளில் ஒருத்தியை மணந்து கொண்ட, ஆண் ஜென்மத்துக்கு சதா ஒரு குறுகுறுப்பு நிமிண்டும். மற்ற மூன்று பூக்களின் வாசனையும், வர்ணமும் எப்படி இருக்கும் என, நுகர்ந்து பார்த்து விட வேண்டும் என்ற காமப்பூரான், உடல் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும்.
ஆண்கள் என்ன தான் பெண்ணுடல் வேட்டை நடத்தினாலும், முதல் அதிகாரப்பூர்வ மனைவிக்கு ராஜமரியாதை தருவர். அக்கா-, தங்கை என இருவரை மணந்தாலும், அக்காவுக்கு தான் சீனியாரிட்டி அதிகம். அந்த சீனியாரிட்டி மரியாதையை, முதல் மனைவி வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்வதும் உண்டு.
அக்காவும், அக்கா குழந்தைகளும் உன்னை மதிக்காமல் இருப்பது, பெரிய ஆச்சரியமில்லை. அக்காவின் வாழ்க்கையை கூறுபோட்ட உனக்கு, இந்த தண்டனை நியாயமானது தான்.
நான் சொல்வது போல செய்.
அக்கா தனியாக இருக்கும் போது, அவளது காலில் விழுந்து மன்னிப்பு கேள். நீ, கல்லுாரி படிப்பை முடித்தாயா? எதாவது வேலைக்கு போகிறாயா?
அக்காவிடமும், மாமாவிடமும் மனம் விட்டு பேசு.
'நடந்த குற்றத்தில், நம் மூவருக்கும் சமபங்கு இருக்கிறது. அழகான தங்கையை தன் வீட்டில் தங்கி படிக்க வைத்தது, நீ. மச்சினியை நரித்தனமாய் பெண்டாண்டது, நீங்கள். சிறு சபலத்தால் அக்கா குடும்பத்தை சீரழித்தது, நான்.
'உங்களை இரண்டாவது திருமணமும் செய்து, குழந்தையை பெற்றுக் கொண்டேன். என்னை உங்கள் குடும்பத்துடன் முழுமையாக இணைத்து கொள்ளாமல், ஒதுக்கி விரட்டுகிறீர்கள். இந்த அவமதிப்பை தொடர்ந்து தாங்க இயலாது.
'நானும், மகளும் தனியாக போகிறோம். அக்காவுடன் இருந்து கொள்ளுங்கள், மாமா. நீங்கள் எனக்கு வேண்டாம். என்றாவது ஒருநாள் நடந்ததை மறந்து அனைவரும் இணையும் சூழ்நிலை வந்தால் இணைவோம். அதுவரை அவரவர் வழி அவரவருக்கு...' எனக்கூறி கிளம்பு.
ஆதரித்தால், அம்மா வீட்டில் இரு. வாடகைக்கு வீடு பிடித்து வேலைக்கு போ. காலம் கடந்தாவது சுயமரியாதை மிஞ்சட்டும்.
— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.