
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 32 வயது பெண். படிப்பு: பி.எஸ்சி., எனக்கு ஒரு அண்ணனும், தங்கையும் உண்டு. ஆறு ஆண்டுகளுக்கு முன், எனக்கு திருமணமானது. இதுவரை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள மறுத்து வருகிறார், கணவர்.
நான் நல்ல நிறமாக, அழகாக இருப்பேன். கணவர் நிறம் குறைவு, கரடுமுரடாக இருப்பார்.
முதல் இரவு அன்று, 'நீ யாரையாவது காதலித்து இருக்கிறாயா? உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நீ ஏற்கனவே கெட்டுப் போய் விட்டாய் என, தோன்றுகிறது. எனவே, உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. உன் வீட்டுக்கு சென்று விடு...' என்றார்.
அவருக்கு ஏதோ மன பிரச்னை இருக்கிறது. நாளடைவில் சரியாகி விடும் என, நினைத்தேன். எங்களது கூட்டு குடும்பம். அவரது திருமணமான அண்ணனும், அவர் மனைவி, ஒரு குழந்தை அனைவரும் ஒன்றாக வசிக்கிறோம்.
நான் சமைத்து வைப்பதை சாப்பிட்டு, பெற்றோருடன் பேசிவிட்டு, அலுவலகம் சென்று விடுவார், கணவர்.
மாலை வீட்டுக்கு வந்ததும், அண்ணன் குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு, சாப்பிட்டு, துாங்க சென்று விடுவார்.
நான் வேலையெல்லாம் முடித்து படுக்கை அறைக்குள் சென்று, படுத்தால், அவர் உடனே எழுந்து இருவருக்கும் நடுவில், தலையணையை வைத்து, தடுப்பு ஏற்படுத்தி, துாங்கி விடுவார். எனக்கு என்ன செய்வது என, தெரியாது. வேறு எங்கும் இடம் இல்லாததால், அந்த அறையிலேயே படுக்க வேண்டிய கட்டாயம்.
தன் ஆபிசில் பணிபுரியும் பெண்களுடன், போனில் சிரித்து சிரித்து பேசுவார். பக்கத்துவீட்டு, எதிர்வீட்டு பெண்களிடமும், 'ஜோக்' அடித்து, ஜாலியாக பேசுவார். என்னிடம் மட்டும் பேச மாட்டார். அவரது பெற்றோர் எதிரில் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வார்.
என் பெற்றோரிடம் கூற, 'முதலில், மனோவியல் மருத்துவரை சந்தித்து, பிரச்னையை கூறுவோம். அவர் வழிகாட்டுதல்படி பிறகு பார்ப்போம்...' எனக் கூறி, மனோவியல் மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
'உன்னிடம் ஏதும் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. உன் கணவரை அழைத்து வா. 'கவுன்சிலிங்' கொடுக்கலாம்...' என்கிறார், மருத்துவர்.
இதுகுறித்து, கணவரிடம் கூற, 'எனக்கு ஒன்றுமில்லை. உனக்கு தான் பைத்தியம். உன்னை அனாதையாக்கி அழ வைக்க வேண்டும் என்பது தான், என் எண்ணம். அதற்கு முன், நீயே எங்காவது ஓடிவிடு...' என்கிறார்.
என் தங்கைக்கு, வரன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நான் பிறந்த வீட்டுக்கு சென்றால், அவளது திருமணத்துக்கு தடங்கல் வந்துவிடுமே என, பயப்படுகிறேன்.
வேலைக்கு செல்லலாம் என்றாலும், 'நீ வீட்டை விட்டு போனால், அப்படியே போய் விடு. திரும்ப வராதே...' என்கிறார்.
இப்படிப்பட்ட மனநோயாளி கணவருடன் வாழ வேண்டுமா என்று அடிக்கடி நினைத்து கொள்கிறேன். தானும் வாழாமல், அடுத்தவரையும் வாழ விடாத இந்த மனிதரிடமிருந்து, விடுதலை பெறுவது எப்படி?
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கணவரின் துர்நடத்தைக்கு காரணம் இருப்பதாக யூகிக்கிறேன்...
திருமணம் முடிந்த கையோடு, கணவருக்கு யாரோ, உன்னை பற்றி களங்கம் கற்பித்து, மொட்டை கடிதமோ, குறுஞ்செய்தியோ அனுப்பியிருக்கலாம். அதை உடும்புப்பிடியாய் பிடித்து தொங்குகிறார், கணவர்.
அத்துடன், கணவருக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். 'ஏதோ குறை இருப்பதால் தான், கரடுமுரடான என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருப்பாள் இவள்...' என்ற, வீண் சந்தேகத்துடன் இருக்கிறாரோ என்னவோ!
ஒருவேளை, உன் கணவருக்கு ஆண்மை குறைபாடு இருந்து, அதை மறைக்க, வெறுப்பு நாடகம் அரங்கேற்றுகிறாரோ என்னவோ!
நான் சொல்லும் இரு உபாயங்களை செய்து பார்.
* இரவில் உங்களிருவருக்கும் இடையே உள்ள தலையணையை அகற்று. சிறுசிறு சில்மிஷங்களை செய்து வசப்படுத்து. ஜாடை மாடையாக பேசி, அவரை செல்லமாக வம்புக்கு இழு
* அவருக்கு காதல் கடிதம் எழுது...
'அன்பு கணவருக்கு, உலகில் அவலட்சணமானவர்கள் என, யாருமில்லை. இயற்கை எல்லாருக்கும் தனித்துவமான அழகை கொடுத்துள்ளது. உங்களை நான் விரும்பி தான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு முன்னோ, பின்னோ எந்த ஆணிடமும் தவறான எண்ணத்துடன் நான் பழகியதில்லை.
'உங்கள் சந்தேகத்தை நேரடியாக கேட்டால், தகுந்த விளக்கம் தருவேன். யாருடைய பழிவாங்கலுக்கோ, நம் ஆறாண்டு தாம்பத்யம் பாழாகி இருக்கிறது. வேறு எதாவது பிரச்னை இருந்தால், மறைக்காமல் கூறுங்கள் சரிசெய்து விடலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இரு குழந்தைகள் பெற்று, வாழ்க்கையில் செட்டிலாவோம்...' என எழுதி, அவரிடம் கொடு.
இந்த இரு உபாயங்களும் பலிக்காவிட்டால், தங்கையின் திருமணம் முடிந்த பின், கணவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பு.
'நான் உங்களுக்காக பல படிகள் இறங்கி வந்திருக்கிறேன். நீங்கள் எதற்குமே ஒத்து வராவிட்டால், ஒரே வழி- நாமிருவரும் விவாகரத்து செய்து கொள்வது தான். எனக்கு ஒரு புதுவாழ்க்கை அமையட்டும். நீங்களும் ஒரு புதுவாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள்.
'நான் வேலைக்கு செல்வதை தடுக்க, உங்களுக்கு உரிமை இல்லை. இனி நாம் வாழ்க்கையில் ஒரு போதும் சந்திக்காதிருப்போம்...' என, தகவல் அனுப்பு.
அம்மா வீட்டுக்கு போ. படிப்பை தபாலில் தொடர். விவாகரத்து கிடைத்த, ஆறு மாதங்களில் பொருத்தமான நபர் பார்த்து, மறுமணம் செய்து கொள்.
பிரச்னை இல்லாத வாழ்க்கை, பத்திய சாப்பாடு போன்றது. பிரச்னைகளுடன் சமயோசிதமாய் போரிட்டு, சாதனையாளர் ஆவோம் கண்ணம்மா வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.