
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 30 வயது ஆண். சுயதொழில் செய்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணன். பி.எச்.டி., படித்து, கல்லுாரி ஒன்றில், பேராசிரியராக இருக்கிறான்.
என் மாமா பெண்ணை, அண்ணனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து, எல்லா ஏற்பாடுகளும் செய்தனர், பெற்றோர். திருமணத்துக்கு முந்தைய நாள், படிக்காத, கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என, கடிதம் எழுதி வைத்துவிட்டு, எங்கோ சென்று விட்டான், அண்ணன்.
திருமணம் நின்றுவிட்டால், அவமானமாகி விடுமே என, என்னை திடீர் மாப்பிள்ளையாக்கி, மாமா பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டனர்.
ஆரம்பத்தில் எல்லாம் சரியாகவே போனது. எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். வீட்டு வேலைகள் செய்வதிலோ, குழந்தைகளை கவனித்து கொள்வதிலோ எந்த குறையும் வைக்க மாட்டாள், மனைவி. ஆனால், என்னை கண்டாலே அவளுக்கு பிடிப்பதில்லை. என்னோடு பேச மாட்டாள். வெளியே எங்காவது அழைத்தால் வரமாட்டாள்.
இதற்கிடையில், என் அண்ணன், வெளியூரில் கல்லுாரி ஒன்றில் பணியில் சேர்ந்திருப்பதும், அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதும் தெரிந்தது. என் பெற்றோர் நேரில் சென்று அழைத்தும், 'வீட்டுக்கு வர விருப்பமில்லை. வேண்டுமானால், நீங்கள் அனைவரும் இங்கு வாருங்கள்...' என, சொல்லி விட்டான், அண்ணன்.
என்னை விட்டு செல்ல பெற்றோருக்கும் விருப்பமில்லை. என்னாலும் என் தொழிலை விட்டு செல்ல முடியாத நிலை. என் மனைவியோ, 'கொஞ்ச நாட்களுக்கு அண்ணன் வீட்டுக்கு சென்று தங்கி வரலாம்...' என்கிறாள். இதில், எனக்கு உடன்பாடில்லாததால், மறுத்து விட்டேன்.
அதிலிருந்து, என்னையும், பெற்றோரையும் மதிப்பதே இல்லை. எது சொன்னாலும், ஏறுக்கு மாறாக நடந்து கொள்கிறாள். அடிக்கடி அவள் அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறாள். அவளது போக்கை புரிந்து கொள்ளவே முடியவில்லை. நான் என்ன செய்தால், அவள் என்னுடன் சந்தோஷமாக வாழ்வாள். நல்ல யோசனை சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
மதியாதோர் தலைவாசல் மிதிக்க வேண்டாம்- என, அவ்வை பாட்டி கூறியிருக்கிறார்.
'படிக்காத கிராமத்து பெண்ணை மணந்து கொள்ள மாட்டேன்...' என, தற்போதைய உன் மனைவியை புறக்கணித்து விட்டு, ஓடி ஒளிந்தான், அண்ணன். நடந்த சம்பவத்தின் முழு அவமானமும் உன் மனைவிக்கு தான்.
உண்மையில், உன் மனைவி சுயமரியாதை உள்ளவள் என்றால், அண்ணன் இருக்கும் திசைக்கு கூட போக கூடாது. அவனுக்கு சமமாக உன்னையும் உயர்த்தி காட்டுவதாக சவாலிட்டு, உன்னை சிகரம் தொட வைக்க, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஆனால் அவளோ, அவலை நினைத்து உரலை இடிக்கிறாள்.
ஒரு லட்ச ரூபாய் சம்பளம், சொந்த வீடு, கார், வேலையாட்கள் வசதியுடன், அண்ணனுடன் கற்பனை குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறாள், உன் மனைவி. எதற்கு கொஞ்ச நாட்களுக்கு அண்ணன் வீட்டுக்கு சென்று தங்கி வரவேண்டும் என்கிறாள், உன் மனைவி? அண்ணனை அருகிலிருந்து ரசிக்க விரும்புகிறாளோ!
மனைவிக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடு.
மனைவியின் விருப்பப்படி அவளை, அண்ணன் வீட்டுக்கு ஒரு மாதம் அனுப்பி வை. நீங்கள் யாரும் போக வேண்டாம். போன உன் மனைவியை, அண்ணனும், அண்ணன் மனைவியும் சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் நடத்துவர்.
அண்ணன், உன் மனைவியை பார்க்கும் பார்வையாலேயே, 'ஏ கிராமத்து சனியனே! என் கல்வி தகுதிக்கு ஏற்றபடி ஒரு மகாராணியை திருமணம் செய்துள்ளேன் பார்த்தாயா?' என, கெக்கலிப்பான். ஒரு மாதம் இருக்கப் போனவள், ஒரு வாரத்தில் திரும்பி வந்து விடுவாள்.
அறியாமை, படித்த பெண்களிடமும், படிக்காத பெண்களிடமும் மண்டி போய் கிடக்கிறது. வீண் ஆடம்பரம், பகட்டுக்கு ஆசைப்படுகின்றனர். பிறருடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து பொறாமைப்படுதல், அவர்களின் கல்யாண குணம்.
பணக்காரன், ஏழையை இழிவுபடுத்தினால், அந்த ஏழை ஓடோடி போய், சக ஏழையை தான் தேளாய் கொட்டுவான்.
மனைவியிடம் தனிமையில் அன்பாக பேசு.
'உன் திருமணம் நின்று விட்டால், நீ ஏடாகூட முடிவு எடுத்து விடக் கூடாது என்பதற்காக தான், நான், திடீர் மாப்பிள்ளை ஆனேன். உன்னை குறைவாக மதிப்பிட்டு, இதுநாள் வரை எதாவது பேசி இருக்கிறேனா?
'நம் திருமண வாழ்வில் ஒரு குறையும் இல்லை. நமக்கு அழகான இரட்டைக் குழந்தைகள். வியாபாரம் சூடுபிடித்துக் கொண்டால், அண்ணனை விட அதிகம் சம்பாதிப்பேன். என்னாலும் தபால் மூலம் படிக்க முடியும்.
'அண்ணன் என்ன பெர்சனாலிட்டியோ, அதே பெர்சனாலிட்டி தான் நானும். நான் குடும்பத்தை மதிக்கிறேன். அவன் குடும்பத்தை கால்துாசாக மிதிக்கிறான். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளக் கூடாது. வீட்டுக்கு ராஜா, பூனை தான். சுயமாய் சிந்தி...' எனக் கூறு.
ஆறுமாதம், உன் மனைவியின் போக்குக்கு அவளை விடு.
'அரசனை நம்பி புருஷனை கைவிட்டாளாம்; அரசனும், புருஷனும் ஆத்தோடு போனாங்களாம்-...' என, ஒட்டடை படிந்த உன் மனைவியின் மனம் தெளிவு பெற, இறைவனை வேண்டுகிறேன்.
— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.