
அன்பு சகோதரிக்கு —
நான், 52 வயது ஆண். உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தேன். மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி, பேரக்குழந்தையும் உண்டு. அவன் அமெரிக்காவில், குடும்பத்துடன் வசிக்கிறான்.
இரண்டாவது மகனுக்கு திருமணமாகி, வெளி மாநிலத்தில் வசிக்கிறான். கடைசி மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
எனக்கு திருமணமானதில் இருந்தே, மனைவிக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்து, படுத்த படுக்கையாகி விடுவாள். கடந்த, 27 ஆண்டுகளாக, அவளுக்கு அடிமை போலத்தான் வாழ்ந்து வருகிறேன்.
மனைவியின் நடத்தையே வித்தியாசமாக இருக்கும். திடீரென ஆவேசம் வந்தவள் போல், சத்தமாகவும், அசிங்கமாகவும் திட்டுவாள். நகத்தால் என் உடலை கீறுவாள். இது அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.
என் அப்பா, அவள் குடும்பத்துக்கு கடமைப்பட்டிருந்ததால், என்னை பொறுமையாக இருக்க சொல்லி அறிவுறுத்தி இருந்தார். அவரது காலத்துக்கு பின்னும் நான், அவர் பேச்சை மீறியதில்லை.
சொந்தமாக கம்பெனி வைத்து நடத்தி வருகிறேன். எங்களுடையது கவுரவமான குடும்பம். கம்பெனியில் வேலை செய்பவர்கள், என் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், மனைவியின் உடல்நிலை மிகவும் பாதித்ததால், வேறொரு உறவுக்கார பெண்ணை காட்டி, 'அவளை திருமணம் செய்து கொள்ளுங்கள்...' என்றாள். நான் சம்மதிக்கவில்லை.
அடுத்த தெருவில் வசிக்கும் அந்த பெண் சமைக்கவும், மனைவியை கவனித்துக் கொள்ளவும் வந்து செல்வாள். அப்பெண் வீட்டில் இருக்கும் போது, நான் வீட்டிற்கு வரவே மாட்டேன். கம்பெனியிலேயே தான் இருப்பேன். இரண்டொரு முறை தான், அப்பெண்ணிடம் நேரில் பேசியுள்ளேன்.
இச்சமயத்தில், அமெரிக்காவில் இருந்து வந்தான், மூத்த மகன். அவனிடம் எனக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக, யாரோ கூறியுள்ளனர்.
மனைவியே சொல்லி இருப்பாள் என்பது, என் சந்தேகம். ஆனால், இல்லை என, சாதிக்கிறாள். சொத்துக்களை பிரித்து தர சொல்லி வற்புறுத்துகிறான், மூத்த மகன். கடைசி மகனிடம் கம்பெனி பொறுப்பை கொடுத்துவிட சொல்லி, தகராறு செய்கிறாள், மனைவி.
இரண்டாவது மகன் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும், எதிலும் பட்டுக் கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பான்.
இவர்களை நம்பி, நானோ, மனைவியோ ஒருநாள் கூட வாழ முடியாது என்பது, என் எண்ணம்.
அவர்களுக்காக, கம்பெனியை இளைய மகனிடம் ஒப்படைத்தேன்.
'ஆறு மாதம் நடத்து, பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' எனக் கூறி, அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்து, தீர்த்த யாத்திரை சென்று விட்டேன்.
மூத்த மகனும் அமெரிக்கா திரும்பி விட்டான்.
சில நாட்களுக்கு பின், மனைவி, போன் செய்து, கம்பெனி நஷ்டத்தில் ஓடுகிறது. திரும்பி வந்து பொறுப்பை ஏற்க சொன்னாள்.
சரியென்று திரும்பி வந்து, கம்பெனி பொறுப்பை ஏற்று, மகனுக்கு சொல்லி கொடுக்க, துவங்கினேன். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டது. மனைவி மீண்டும் என்னுடன் தகராறு செய்ய ஆரம்பித்து விட்டாள்.
எனக்கும், அந்த உறவுக்கார பெண்ணுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக, அனைவரிடம் கூறி வருகிறாள். வெறுத்து போய் விட்டேன். நிஜமாகவே அப்பெண்ணை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் என்ன என்ற எண்ணமும் வருகிறது. ஆனாலும், குடும்ப கவுரவமும், உற்றார், உறவினர்களிடையே மதிப்பும் போய்விடும் என, பயப்படுகிறேன்.
இதிலிருந்து மீள்வது எப்படி சகோதரி.
— இப்படிக்கு,
அன்பு சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
திருமணமானதில் இருந்தே நோய்வாய்பட்ட மனைவியிடம் தாம்பத்யம் பண்ணி, மூன்று மகன்களை பெற்றுள்ளீர்கள். நோயாளி மனைவியிடம் ஏன், 27 ஆண்டுகளாக அடிமையாக நடந்து கொண்டீர்கள்?
நிறுவனம் ஆரம்பிக்க மனைவியின் பணம், நகைகளை பயன்படுத்தினீர்களா? உங்கள் பலவீன புள்ளிகளை உங்கள் மனைவி கண்டுபிடித்து, உங்களை தொடர்ந்து தாக்கினாரா? உங்கள் அப்பா, மனைவியின் குடும்பத்துக்கு என்ன விதத்தில் கடமைப்பட்டிருந்தார்?
மனைவியின், 'ஹிஸ்டீரியா'வை மனநல மருத்துவரிடம் காட்டி, நீங்கள் ஏன் குணப்படுத்த முயலவில்லை?
மனைவி மற்றும் மகன்களிடம் கேட்டால், வேறொரு கதை சொல்வர்.
நீங்கள், குடி நோயாளியாக,- சபல சித்தராக, ஓட்டைக்கை செலவாளியாக-, பிறரை சதா பழி சொல்பவராக இருக்கிறீர்களா?
உங்கள் மனைவி, உறவுக்கார பெண்ணை காட்டி திருமணம் செய்து கொள்ளுங்கள் என, எப்படி கூறுவார்?
தொடர்ந்து உங்கள் பார்வை, அந்த பெண்ணின் மீது இருப்பது கண்டு, உங்களை ஆழம் பார்த்திருப்பார், மனைவி. இது ஒருவகை போட்டு வாங்குதல்.
உறவுக்கார பெண் விஷயத்தில், நீங்கள் இயல்பாகவே இல்லை. அவள், உங்கள் வீட்டில் இருக்கும் போது, நீங்கள் ஏன் வராமல் தவிர்க்க வேண்டும்?
உறவுக்கார பெண்ணின் கணவர், இறந்து விட்டாரா அல்லது கணவருக்கும், அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா அல்லது விவாகரத்து பெறாமல் கணவரிடமிருந்து பிரிந்து வாழும் பெண்ணா...
திருமணம் ஆகாத முதிர்கன்னியா; அவரின் வயதென்ன; மனைவி வழி சொந்தம் என்றால், மனைவிக்கும், அவருக்கும் இடையே ஆன உறவுமுறை என்ன என, ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
இனி, நீங்கள் செய்ய வேண்டியது-...
மனைவியிடம் சமாதானம் பேசுங்கள். ஒத்துவராவிட்டால், விவாகரத்துக்கு சம்மதிக்கிறாரா என, கேளுங்கள்.
உங்கள் கம்பெனியை நல்ல விலைக்கு விற்று விடுங்கள். வரும் பணத்தை ஐந்து பங்குகளாக பிரியுங்கள். மூன்று பங்குகள் மூன்று மகன்களுக்கு. நாலாவது பங்கு, உங்கள் மனைவிக்கு. ஐந்தாவது பங்கு, உங்களுக்கு. உங்கள் பங்கை வங்கியில், 'டெபாசிட்' செய்யுங்கள். மாத வட்டியில் நீங்கள் வாழ்க்கையை நடத்துங்கள்.
மனைவி விவாகரத்து தர மறுத்தால், அவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுங்கள்.
மகன்களுடன் நல்லுறவை மேம்படுத்த பாருங்கள்.
— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.