
அன்புள்ள சகோதரிக்கு —
நான், 48 வயது பெண். பிளஸ் 2 வரை, கான்வென்ட்டில் படித்தவள். என் பெற்றோரும் நன்கு படித்தவர்கள். வீட்டில் நான் ஒரே பெண். என், 18வது வயதில், குடும்பத்து பெரியவர் ஒருவர் கூறினார் என, படிப்பறிவு இல்லாத ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர், பெற்றோர்.
அன்று முதல் என் வாழ்க்கை நரகமாகி விட்டது. குடிகார முரடனான கணவரிடம், அதிக துன்பத்தை அனுபவித்து வருகிறேன். குடும்ப செலவுக்கு என் பெற்றோர் தான் பணம் தருகின்றனர்.
திருமணமாகி, 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், பாதி நாட்கள் கணவர் வீட்டிலும், மீதி நாட்கள் என் அம்மா வீட்டிலும்தான் இருந்து வருகிறேன்.
என் இரு மகன்களையும் கல்லுாரியில் சேர்த்துள்ளேன். வீட்டு பிரச்னையால், அவர்களும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
என் கணவர் வீட்டினரும் வசதியானவர்கள் தான். ஆனால், எதையும் அனுபவிக்க விட மாட்டார்கள்.
ஊதாரித்தனமாக செலவழிக்கும் கணவரை, அவர் வீட்டினர் யாரும் நம்ப மாட்டார்கள். அவருக்கு சேர வேண்டிய சொத்தைக் கூட, தர மறுக்கின்றனர். என் மகன்களின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.
நான் என்ன செய்யட்டும், சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
வரன் பார்ப்பதில் உறவினர்களின் சிபாரிசுகளை அறவே நம்ப கூடாது. நம்மை மனதளவிலும், உடலளவிலும் கவிழ்க்க, 'சென்டிமென்ட்' சதி செய்வர். தகரத்தை தங்கம் என்பர்; கண்ணாடிக் கல்லை வைரம் என்பர்.
உறவினர் சொல்லும் வரனை திருமணம் முடித்தால், உறவினரின் முழு கட்டுபாட்டுக்குள் நம் குடும்பம் வந்துவிடும் என்பது, அவரது கணக்கு. இது மாதிரியான சர்க்கரை கோட்டிங் விஷ - வில்லன்கள் பலரை, என் வாழ்நாளில் சந்தித்து இருக்கிறேன். பொதுவாக ஒரு அறிவுரை கூறுகிறேன்.
மகன், மகள் திருமண விஷயங்களில், முழுமையாக உறவினர்களை சார்ந்து நிற்காதீர்கள். அதிக செலவை இழுத்து விடுவர் அல்லது உறவினர்களுக்குள் கோள் மூட்டி, 'ஈகோ' சண்டை மூட்டி விடுவர்.
உறவினர்களை, உங்கள் குழந்தைகள் திருமணத்துக்கு அழையுங்கள். மொய் வைக்கா விட்டாலும் பரவாயில்லை, திருப்தியாக சாப்பிட்டு விட்டு போகட்டும்.
ஒரு படிப்பறிவு இல்லாத மாப்பிள்ளையை, உறவினர் சிபாரிசு பண்ணுகிறார் என்றால், அதை ஆராயாமல் அப்படியே உன் பெற்றோர் ஏன் எற்றுக் கொண்டனர்? தவறு இரண்டு பக்கமும் உள்ளது. பலி ஆடு ஆனது நீ.
அடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* குடிகார முரட்டு கணவனிடம் சமாதானம் பேசி, துளியும் பிரயோஜனமில்லை. பார்வை திறனற்ற மாற்றுதிறனாளியை, ராஜபார்வை பார்க்கச் சொன்னால் எப்படி பார்ப்பான்? வெகு சீக்கிரம் அவனுக்கு முடிவு வந்து விடும். இவனை மாதிரியான குடிநோயாளிகளால் தான் நாட்டில் ஆயிரக்கணக்கான இளம்விதவைகள் உருவாகின்றனர்
* காடாறு மாதம், நாடாறு மாதம் போல, நீ ஏன் மாறி மாறி, கணவன் வீட்டிலும், பெற்றோர் வீட்டிலும் இருக்கிறாய். ஜாகையை முழுமையாக பெற்றோர் வீட்டுக்கு மாற்றி விடு. உன் இரு மகன்கள், தாத்தா - பாட்டி வீட்டிலிருந்து கல்லுாரிக்கு போய் வரட்டும்
* இந்த குடிநோயாளியை சிபாரிசு செய்த குடும்பத்து பெரியவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? போனிலோ, நேரிலோ அவரை சபித்து தீர்
* வழக்கறிஞரை சந்தித்து, உன்னிரு மகன்களுக்கு தந்தைவழி சொத்து கிடைக்கும் சாத்தியங்களை அலசி ஆராய். உனக்கு சாதகமான அம்சங்கள் இருந்தால், மகன்களுக்கு சொத்து கேட்டு வழக்கு போடு
* தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் தொடர்ந்து படி
* தந்தை குணம் மற்றும் தந்தைவழி குடும்பத்தினர் எதிர்மறை குணம் பற்றி, மகன்களிடம் தெளிவாக விவரி. கண்ணால் பார்த்த உண்மையை, காதால் கேட்டும் உறுதி செய்து கொள்வர், உன்னிரு மகன்களும்
* முப்பது ஆண்டுகளாக, குடிநோயாளியை எப்படி தான் சகித்து குடும்பத்தை நடத்தி கொண்டிருந்தாயோ, அர்த்தமற்ற பொறுமை, உன் இளமையை காவு வாங்கி விட்டது
* மகன்களுக்கு, பெண்மையை கண்ணியபடுத்தும் குணத்தையும், குடியிலிருந்து விலகி நிற்கும் மன உறுதியையும், குடும்ப பொறுப்பை நிர்வகிக்கும் தலைமைப் பண்பையும் கொஞ்ச கொஞ்சமாய் ஊட்டி விடு.
உன் மீதி வாழ்நாள், உன்னிரு மகன்களால் சுகப்படட்டும்.
— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.

