
பா - கே
எழுத்தாளர் நண்பர், ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு, என் எதிரில் வந்து அமர்ந்தார்.
எழுத்தாளரிடம், 'சார்... உங்களை ஆசிரியர் இரண்டு முறை கேட்டு விட்டார். இவ்வளவு, 'லேட்'டாக வருகிறீர்களே. சாயந்திரம் பார்ப்பதாக கூறி, வெளியே சென்று விட்டார்...' என்றார், உ.ஆசிரியை.
'நம் அலுவலகத்துக்கு வர தான், 'லிப்ட்'டில் ஏறினேன். ரொம்ப, 'டயர்டா' இருந்ததால், நான்காவது மாடியில் இருக்கும் கேன்டீனில் காபி குடித்துவிட்டு வர சென்று விட்டேன். 'லிப்ட்'டில், என்னோடு, மூன்றாவது மாடி அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர்களும், இளைஞிகளும் ஏறினர்.
'அவர்கள், 'லிப்ட்'டுக்குள் ஏறியதுமே, அதிலிருந்த கண்ணாடியை பார்த்து, தலைமுடியை சரி செய்து கொண்டும், உடையை சரிபடுத்தியபடியும் வந்தனர். மூன்றாவது மாடி வந்தது கூட தெரியாமல் இருந்ததால், நான் தான் அவர்களை, 'அலர்ட்' செய்து இறங்க சொன்னேன். 'லிப்ட்'டுக்குள் கண்ணாடி எதற்கோ?' என்று அலுத்துக் கொண்டார்.
'ஓய்... புரியாமல் பேசாதீர். உமக்கு தெரியலை அவ்வளவு தான். 'லிப்ட்'டுக்குள் கண்ணாடி பொருத்துவது ஏன் தெரியுமா?' என்று கேட்டார், லென்ஸ் மாமா.
'ஓ... தெரியுமே. மூன்று காரணங்கள் இருக்கு. ஒன்று, அவசர அவசரமா வீட்டிலிருந்து கிளம்பி வருபவர்கள், 'லிப்ட்'டில் இருக்கும் கண்ணாடியை பார்த்து, தங்களை சீர்செய்து கொள்வதற்கு.
'அடுத்து, பாதுகாப்பு கருதி. ஒரு பெண், 'லிப்ட்'டில் இருக்க, தன்னிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால், கண்ணாடியில் பார்த்து, உஷாராகி விடுவதற்கு.
'மூன்றாவது, தங்கள் பிம்பத்தை பார்க்க விரும்புவது. மனுஷங்களுக்கு உள்ள இயல்பான குணம்...' என்றார், உ.ஆசிரியை.
'சரியா சொல்லிட்ட... உனக்கு, மதியம் ஐஸ்க்ரீம் வாங்கி தருகிறேன். சரி... 'லிப்ட்'டுக்குள் கண்ணாடி பொருத்தும் வழக்கம் எப்படி, யாரால் வந்தது தெரியுமா?' என்றார், மாமா.
எல்லாரும் அமைதியாக இருக்க, 'நானே சொல்கிறேன்...' என்று கூற ஆரம்பித்தார், லென்ஸ் மாமா:
தங்கும் விடுதி ஒன்றில், அரத பழசான, 'லிப்ட்' ஒன்று இருந்தது. அந்த, 'லிப்ட்' ரொம்ப மெதுவாகத்தான் பயணம் செய்யும்.
அந்த, லாட்ஜில் தங்க வரும் பல பேர், புகார் புத்தகத்தில், 'உங்க லாட்ஜில் உள்ள இந்த, 'லிப்ட்' ரொம்ப மெதுவாக இயங்குகிறது. அதை மாற்றுங்கள்...' என்று எழுதி வைத்து சென்றனர். அதை, உடனே மாற்றும் அளவுக்கு, லாட்ஜ் உரிமையாளருக்கு, பண வசதி இல்லை. சுமாரான வருமானம் தான். 'லிப்ட்'டை புதிதாக மாற்ற வேண்டுமென்றால், ஏகப்பட்ட செலவு ஆகும். என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தனர்.
லாட்ஜில் தங்க வரும் மேல் மட்ட அதிகாரி முதல், கீழ் மட்ட ஊழியர்கள் வரை, இது எல்லாருக்கும் ஒரு பிரச்னையாகவே இருந்தது.
'இதை மாற்றி விடலாம். பழைய கடையிலே போட்டுவிட்டு, புதிய, 'லிப்ட்'டை மாற்றலாம்...' என்றனர், ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினரோ, 'இதையே வேகப்படுத்துவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம்...' என்று ஆலோசனை கூறினர்.
அப்போது, அந்த, லாட்ஜ் பாய் வந்தான். அவன், மேனேஜரிடம், 'ஐயா, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அது மாதிரி செய்யலாமா?' என்றான்.
'என்ன யோசனை, சொல்...' என்றார், மேனேஜர்.
'ஐயா, இதை பழைய கடையிலே போட வேண்டாம். புது, 'லிப்ட்'டையும் வாங்க வேண்டாம். இதையே கொஞ்சம் லேசாக வேறு மாதிரி மாற்றி அமைத்தால், எல்லாரும் இந்த, 'லிப்ட்'டில் போவதை, இன்ப அனுபவமாக கருத ஆரம்பித்து விடுவர்...' என்றான்.
'எப்படி?' என்று ஆச்சரியமாக கேட்டார், மேனேஜர்.
'ஒன்றும் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தன்னுடைய முகத்தையும், உருவத்தையும் அடிக்கடி கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இதை நிறைவேற்றும் வகையில், நம்முடைய, 'லிப்ட்'டுக்குள் ஆள் உயரக் கண்ணாடியை வைத்து விடலாம்.
'அப்படி கண்ணாடியை வைத்து விட்டால், 'லிப்டில்' நுழைந்தவுடன், கண்ணாடியை பார்த்து, தங்களுடைய அழகை சரிபடுத்திக் கொள்ளும் எண்ணம் தான், அதில் வருபவர்களுக்கு இருக்கும். அந்த சமயத்தில், 'லிப்ட்' மெதுவாக போவது அவர்களுக்கு மறந்தே போய்விடும்...' என்றான்.
சாதாரண பையன் தானே என்று நினைக்காமல், அவன் கூறிய ஆலோசனையை முதலாளியிடம் கூறினார், மேனேஜர்.
அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். ஆள் உயரத்திற்கு, விலை உயர்ந்த கண்ணாடி வாங்கி, 'லிப்ட்' உள்ளே பதித்தனர். கொஞ்ச நாட்களில், அந்த யோசனை, 'ஒர்க் அவுட்' ஆக ஆரம்பித்தது. அதில், ஆச்சரியம் என்னவென்றால், புகார்கள் வருவதும் குறைந்து விட்டது.
தன்னை கண்ணாடியில் அடிக்கடி பார்த்துக் கொள்வது என்பது, மனிதனுக்கு விருப்பமான செயல். இதை செய்ய வைத்துவிட்டனர். அதனால், இந்த, 'லிப்ட்' மெதுவாகப் போவது, தங்கள் உருவத்தை பார்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு எந்த நிலையிலிருந்து ஆலோசனை வரும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது. சாதாரண ஊழியர் கூட, ஒரு நல்ல ஆலோசனையை சொல்லக்கூடும்.
- என்று முடித்தார், லென்ஸ் மாமா.
தேவை தான் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் ஆதாரம் என்ற ஆங்கில பழமொழி ஒன்று, ஞாபகம் வந்தது எனக்கு!
ப
திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.
திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.