sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 16, 2025

Google News

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

கண் டெஸ்ட் செய்து கொள்ள, கண் டாக்டரிடம் சென்றார், லென்ஸ் மாமா. துணைக்கு என்னையும் அழைத்து சென்றிருந்தார்.

லென்ஸ் மாமா கண்ணில் மருந்து விட்டு, சிறிது நேரம் கண்ணை மூடி அமர்ந்திருக்க சொன்னார், டாக்டர்.

இடைப்பட்ட நேரத்தில் என்னுடன் பேச ஆரம்பித்தார், டாக்டர். அவரிடம், 'டாக்டர், மாலைக்கண் நோய் என்றால் தெரியும். பகலில் கண் நன்றாக தெரியும்; இரவில் தெரியாது. இது ஒரு வகை கண் கோளாறு. 'கலர் பிளைண்ட்' - நிறக்குருடு என்று சொல்கின்றனரே... அது என்ன?' என்றேன்.

'அதுவும் ஒரு வகையான கண் கோளாறு தான்...' என, கூற ஆரம்பித்தார், டாக்டர்:

சிலருக்கு, ஒரு பொருளின் நிறம் சிவப்பா, பச்சையா, மஞ்சளா என்று பிரித்தறிய முடியாது. எல்லாம் ஒரே நிறம் போல் தெரியும். அப்படிப்பட்ட குறைப்பாட்டுக்கு தான், 'கலர் பிளைண்ட்' என்பர்.

அது மட்டுமல்ல, காரோட நிறத்துக்கும், கார் விபத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்க.

இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில், இதை பற்றி ஒரு ஆராய்ச்சி நடந்திருக்கு.

சிவப்பு மற்றும் கிரே நிறத்துல உள்ள கார்கள் தான், அடிக்கடி விபத்துல சிக்குகிறதாம். மஞ்சள் நிற கார், பகல் நேரத்துலே அதிகமா விபத்துல மாட்டிக்கிறது இல்லையாம். ஆனா, மாலை மற்றும் இரவு நேரத்துலே அதிகமா விபத்துக்கு உள்ளாகிறதாம்.

சரி... எந்த நிறத்துல உள்ள கார் விபத்துல மாட்டிக்காம இருக்கு என்றால், பிரவுன் நிறத்துல உள்ள, கார் பரவாயில்லையாம்.

இதுக்காக கார் வெச்சிருக்கிறவங்கள்லாம் பெயின்ட்டை சுரண்ட ஆரம்பிச்சுட போறாங்க. நிறத்தை மாத்தலாம்ன்னு, இப்ப நான் சொன்னது, இங்கிலாந்துல எடுத்த புள்ளி விபரம். இங்கே எப்படின்னு அனுபவத்துலே தான் பார்க்கணும்.

நிறம் தான் விபத்துக்கு காரணம்ன்னு நினைச்சு, அதையெல்லாம் வெறுக்க ஆரம்பிச்சுடக் கூடாது. ஏன்னா, நிறங்கள் நம் உடம்புல உள்ள பல வியாதிகளை தீர்க்கறதுக்கு உபயோகப்படுது.

சூரியக்கதிர்ல, ஏழு நிறம் இருக்குன்னு படிச்சிருக்கோம். நம்ம உடம்புக்கும், இந்த ஏழு நிறம் அவசியம். அது கூடினாலும், குறைஞ்சாலும் உடம்புல கோளாறு வந்துடும். இதை சரிப்படுத்தற சிகிச்சை முறைக்கு தான் இங்கிலீஷ்லே, 'குரோமோ தெரபி'ன்னு பேரு.

வெள்ளைக்காரங்க சில பேரு, சுகமா வெயில்ல படுத்துக் கிடப்பாங்க. என்னன்னு கேட்டா, 'சன் பாத் எடுக்கறேன்'னு, சொல்வாங்க. வெயில்ல குளிக்கிறாங்களாம். இயற்கை வைத்தியம் இது.

சரி... ஏழு நிறத்துக்கும் என்னென்ன குணம் இருக்கு தெரியுமா?

சிவப்பு: இது, உடம்புக்கு வெப்பத்தை கொடுக்கும். எலும்புருக்கி, நீரிழிவு, மஞ்சள் காமாலை, சொறி - சிரங்கு நோயை போக்கும்.

நீலம்: இது, இருமல், இளைப்பு, வாதம், மூட்டுப்பிடிப்பு நோயை கட்டுப்படுத்தும்.

ஊதா: ரத்தத்தில உள்ள சிவப்பு அணுக்களை பெருக்கும். நரம்புகளுக்கு அமைதியை கொடுக்கும்.

கருநீலம் - இண்டிகோ: இது, சுவாச சம்பந்தமான கோளாறுகளை போக்கும். மலச்சிக்கலை நீக்கும்.

ஆரஞ்சு: ரத்த அபிவிருத்தி செய்யும். நரம்புகளுக்கு வலுவைக் கொடுக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.

பச்சை: கண் ஒளியை பெருக்கும். கருப்பை கோளாறுகளை போக்கும். தாது பலத்தை உண்டாக்கும்.

மஞ்சள்: மலச்சிக்கலை நீக்கும், தொழுநோயை குணமாக்கும்.

சூரிய ஒளியிலே இருக்கும் ஏழு நிறத்தை எடுத்து உபயோகப்படுத்துறதுக்கும் வழி இருக்கு.

சூரிய ஒளியிலேயிருந்து கிடைக்கிற நிறங்களை தண்ணீரில் இறக்கி, அந்த நீரை மருந்தாக கொடுக்கலாம். எண்ணெய் மூலமாகவும் இந்த நிறங்களை எண்ணெய்ல ஏத்தி, அதை உடம்புல பூசலாம். நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் ஆளி விதை எண்ணெய்களில் மட்டும் இந்த நிறங்களை பக்குவமா இறக்கலாம்.

சூரியக்கதிர்களை எண்ணெயில் எப்படி வடிச்சு எடுக்கறது தெரியுமா?

எந்த நிறம் வேணுமோ, அந்த நிறமுள்ள கண்ணாடி பாட்டிலில் கிணற்று நீரையோ, மழை நீரையோ, கழுத்து வரைக்கும் நிரப்பணும். அதே போல் எண்ணெயையும் நிரப்பணும்.

ஒரு வாரம் வெயில்ல வைக்க வேண்டும். வெயில் இல்லாத நேரம் என்றால், 40 வாட்ஸ் பல்பில், கலர் பேப்பர் அல்லது கலர் துணியைக் கட்டி, அந்த வெளிச்சம் பாட்டில் மீது படுவது போல செஞ்சுட்டா போதும். எண்ணெய் அல்லது தண்ணீரில் அந்தந்த நிறங்கள் இறங்கிவிடும். அதை பயன்படுத்தி குளிக்கலாம்.

இன்னொரு முறையும் இருக்கு. அதாவது, பெரிய பெட்டி செஞ்சு, ஒளி ஊடுருவி உள்ளே போறது மாதிரி அதுல கலர் கண்ணாடியை பதிக்கலாம். பல நிறங்களால் ஆன பட்டுத் துணிகளையும் கட்டி வைக்கலாம். பேசாம அந்த பெட்டிக்குள்ளே போயி, ஒரு ஐந்து அல்லது 10 நிமிடம் உட்கார்ந்தால் போதும். உடல் தேவையான நிறத்தை கிரகிச்சுக்கும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

- என்று கூறி முடித்த, டாக்டர், லென்ஸ் மாமாவை கண் பரிசோதனைக்கு அழைத்து சென்றார்.

உடல் ஆரோக்கியத்துக்கு தேவையானவை எல்லாம், இயற்கையே நமக்கு கொடுத்து விடுகிறதே என்று வியந்தேன், நான்.





டாக்டரிடம், 'என் மனைவிக்கு காது கேட்கவில்லை. ஆனால், மருத்துவமனைக்கு போகலாம் வா என அழைத்தால், வர மறுக்கிறாள். நீங்கள் தான் ஏதாவது மருந்து கொடுத்து அவளைக் குணப்படுத்த வேண்டும்...' என கேட்டார், ஒரு நபர்.

'எந்த அளவுக்கு அவருக்கு பாதிப்பு உள்ளது என்பது தெரியாமல் எப்படி மருந்து கொடுக்க முடியும்?' என்றார், டாக்டர்.

மேலும், 'உங்கள் மனைவிக்கு எந்தளவுக்கு கேட்கும் தன்மை குறைந்திருக்கிறது என்பதைப் பரிசோதித்துக் கொண்டு வாருங்கள். அதற்கேற்றபடி மருந்து தருகிறேன்...' எனக் கூறினார்.

நேராக வீட்டுக்கு சென்றார், கணவர்.

அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தாள், மனைவி.

வரவேற்பறையில் நின்றபடி, 'என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்?' எனக் கேட்டார், அந்த நபர்.

மனைவியிடம் இருந்து பதில் வரவில்லை.

ஹாலுக்கு வந்து அதே கேள்வியை கேட்டார். அப்போதும் பதில் வரவில்லை. அடுப்படி சென்று, 10 அடி துாரத்தில் நின்று, அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் பதில் வரவில்லை. அவள் அருகில் சென்று, 2 அடி துார இடைவெளியில் மீண்டும், 'என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்?' எனக் கேட்டார்.

'சிக்கன்... சிக்கன்... சிக்கன்... இதோடு, நாலு தடவை சொல்லிட்டேன்...' என்றார், மனைவி.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us