
பா - கே
ஆசிரியரை சந்திக்க வந்திருந்தார், கல்லுாரி பேராசிரியர் ஒருவர். ஆசிரியரை சந்தித்தபின், என்னிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
'சமீபத்தில், தமிழகத்தில், பருவம் தவறி, பெரிய மழை பெய்து, தென் மாவட்டங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டதே... நினைவிருக்கா. திருவண்ணாமலையில் பெய்த கன மழையால், வீடு ஒன்றின் மீது, பாறை உருண்டு விழுந்து, ஐந்து பேர் உயிரிழந்த சோக கதையும் அறிந்தது தான்.
'மழை பற்றி தினமும் அபாய அறிவிப்பு வெளியிட்டனர், வானியியல் துறையினர். ஆனால், அவை பொய்த்து போனது. இது சம்பந்தமாக, சென்னை வானியல் துறை இயக்குனர், பாலசந்தர், 'சாட்டிலைட்' முதல் நவீன சாதனங்கள் இருந்தும், புயல் மற்றும் மழை வருவதை சரியாக கணிக்க இயலவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையும், 'டிவி'யில் பார்த்திருப்பீர்கள்.
'ஆனால், விலங்குகள், பறவைகள் புயல், மழை மற்றும் பூமி அதிர்ச்சி பற்றி முன் கூட்டியே சரியாக அறிந்து, இடம் பெயர்ந்து விடுகின்றன. 2004ம் ஆண்டு, சுனாமி ஏற்பட்டபோதும், இதை பற்றி பேசப்பட்டது. இன்னும் பல சம்பவங்கள், உலகத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் உள்ளன. இதுபற்றி, ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்க போகிறேன்...' என்றார், பேராசிரியர்.
'ஒன்றிரண்டு சம்பவங்களை கூறுங்களேன் கேட்போம்...' என்றதும், கூற ஆரம்பித்தார்:
மத்திய ஆசிய நாடுகளுள் ஒன்றான, துருக்மேனிஸ்தானின், அஷ்காபாத் நகரத்தில் வசிக்கும், புவியியல் விஞ்ஞானி ஒருவர், நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
ஒருநாள், முன்னிரவு நேரம். மேஜை முன் உட்கார்ந்து, ஏதோ எழுதிக் கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.
அவருடைய பெண் குழந்தை, தொட்டிலில் துாங்கி கொண்டிருந்தது.
நாயும், ஒரு மூலையிலே படுத்து துாங்கிக்கிட்டு இருந்தது. திடீர்ன்னு அந்த நாய் துள்ளி எழுந்து, நேரா அந்த குழந்தைகிட்டே ஓடி, அந்த குழந்தையை அது போட்டிருந்த, டிரஸ்ஸோட சேர்த்து கவ்வி துாக்கிக் கொண்டு, வாசல் பக்கம் ஓடிச்சு.
விஞ்ஞானி அதைப் பார்த்து, அந்த நாய்க்கு வெறி பிடிச்சிட்டதா முடிவு பண்ணிட்டாரு. தன்னோட கைத்துப்பாக்கியை எடுத்துகிட்டு, நாயை பின் தொடர்ந்து ஓடினார். என்னவோ ஏதோவென்று, அவர் மனைவியும் வெளியே ஓடி வந்தார்.
அதே நேரத்தில் வீடு இடிஞ்சி விழுந்தது. காரணம், பூமி அதிர்ச்சி.
பூமி அதிர்ச்சி உண்டாக போகுதுங்கறது அந்த நாய்க்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு. அதுதான் குழந்தையை துாக்கிக்கிட்டு வெளியே ஓடி வந்திருக்கு; அந்த குடும்பத்தையும் காப்பாத்தியிருக்கு.
இந்த சம்பவம் நடக்கறதுக்கு, மூணு நாளைக்கு முன்னரே, சில விலங்குகளுக்கு இப்படி நடக்கப் போறது பற்றி தெரிஞ்சிருக்கு. அந்த நகரத்தில், மூணு நாளைக்கு முன், பாம்பு, பல்லி போன்ற ஊர்வனவைகள், தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே ஓடி போயுள்ளது.
அதே மாதிரி அங்கேயிருந்த, புறா எல்லாம் பறந்து போயிருக்கு.
இதை போலவே, யுகோஸ்லேவியாவில் நடந்தது. ஒரு நாள் ராத்திரி, ஒரு மிருக காட்சி சாலையில் திடீர்ன்னு கூச்சல், குழப்பம். அங்கேயிருந்த கழுதை புலி, யானை, பறவை எல்லாம் கன்னாபின்னான்னு கத்த ஆரம்பிச்சிருக்கு.
நீர் யானை அதுக்குன்னு போட்டிருந்த தடுப்பையே தாண்டி குதிச்சு வெளியே வந்துடுச்சு.
இதை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அடுத்த நாள் காலை, அங்கே பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
மனுஷனைப் போயி தீர்க்கத்தரசி, அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே...
பூமி அதிர்ச்சி வரப்போவதை, விலங்குகள் மற்றும் பறவைகள் முன்கூட்டியே புரிஞ்சிக்குது! அது தான் படைப்பின் ரகசியம்.
விலங்குகளுக்கு மட்டும் எப்படி அந்த அறிவு உள்ளதுன்னு கண்டுபிடிக்க தான், ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.
- என்று கூறி முடித்தார், பேராசிரியர்.
இதைக்கேட்டதும் மழை வருவதற்கு முன், எறும்புகள், உணவு தானியங்களையும், தங்கள் முட்டைகளையும் துாக்கிக் கொண்டு, படை படையாக மேடான இடத்திற்கு செல்வதை சிறு வயதில் பார்த்தது நினைவுக்கு வந்தது, எனக்கு.
ப
ஒரு காட்டில், தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் வசித்தன. அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது, குட்டிக்குரங்கு.
அதைப் பார்த்து, 'அதோ ஒரு பெரிய ஜாடி தெரிகிறது பார். அதை முதலில் கற்களால் நிரப்பு. அப்புறம் என்னிடம் வா...' என்றது, தாய் குரங்கு.
உடனே, அருகில் இருந்த பெரிய கற்களை ஒவ்வொன்றாக எடுத்து, அந்த ஜாடிக்குள் போட்டது, குட்டிக்குரங்கு. ஒரு கட்டத்தில் அந்த ஜாடி பெரிய கற்களால் நிரம்பி விட்டது.
'நான், ஜாடியை நிரப்பி விட்டேன்...' என, கத்தியது, குட்டிக்குரங்கு.
அதைப்பார்த்து, 'முட்டாள்தனமாக பேசாதே. சின்ன சின்ன கற்களை என்னால் இப்போது கூட போட முடியும்...' என்றது, தாய் குரங்கு.
அங்கிருந்த சின்ன சின்ன கற்களை ஜாடியில் போட, அவை எல்லாம் உள்ளே சென்றன. ஒரு கட்டத்தில் ஜாடியின் விளிம்பு வரை கற்கள் நிரம்பியது.
'அம்மா, இப்போதாவது ஒப்புக்கொள்வீர்களா. ஜாடி நிரம்பி விட்டது என்று?' என, கத்தியது, குட்டிக்குரங்கு.
பின்னர், 'அந்த ஜாடியில் தண்ணீரை ஊற்றலாமே...' என, சிரித்துக்கொண்டே கூறியது, தாய் குரங்கு.
தாய் குரங்கு கூறியதை போல, குட்டிக்குரங்கு செய்ய, இரண்டு சொம்பு நீரை அந்த ஜாடிக்குள் நிரப்ப முடிந்தது.
'இப்ப என்ன சொல்ல போறீங்க?' என்றது.
கொஞ்சம் உப்புத் துாளை அந்த ஜாடியில் போட்டது, தாய் குரங்கு. அந்த உப்பு கரைந்ததே தவிர, தண்ணீர் வெளியே வழியவில்லை.
'நான் ரொம்ப, 'பிஸி' எனக்கு நேரமே கிடைப்பதில்லை...' என்று கூறுபவர்கள், இப்படி தான். பெரிய கற்களை நிரப்பி முடித்ததும், ஜாடியில் இனிமேல் இடம் இல்லை என்று கூறிய, குட்டிக் குரங்கை போன்றவர்களே. அவர்களால் நேரத்தை சரியாக கணிக்க முடியவில்லை என்றே அர்த்தம்.
இந்தக் கதையில், இரண்டு விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சரியாக திட்டமிட்டால், எந்த வேலைக்குமே நம்மால் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். இரண்டாவது, அந்த குட்டிக்குரங்கு முதலிலேயே ஜாடியை தண்ணீரால் நிரப்பியிருந்தால், அதற்கு பிறகு, அதில் ஒரு சின்ன கல் கூட போட முடியாமல் தண்ணீர் வழியும். அதுபோல் நாமும் முதலில் எதைச் செய்ய வேண்டும், அடுத்து எதைச் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.