
இந்த வாரம் குட்டிக்குட்டி தகவல்கள் மட்டுமே...
ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படும் ரத்தம், பல மாதங்கள் ஆனாலும், கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, உதவியாய் இருப்பது, 'க்ரையோஜெனிக்ஸ்' என்ற தொழில்நுட்பம். க்ரையோஜெனிக்ஸ் என்றால், அதிகப்படியான குளிர்ச்சியை உருவாக்குதல் என்று அர்த்தம்.
மனித ரத்தம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக, அதை, க்ரையோஜெனிக்ஸ் மூலம் குளிரூட்டப்பட்டு வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர்.
இன்னொரு, ஆச்சரியமான செய்தியும் கேட்டுக் கொள்ளுங்கள். உயிருள்ள மீனை, க்ரையோஜெனிக்ஸ் செய்து, பல மணி நேரம் கடந்து, அம்மீனை வெது வெதுப்பான நீரில் போட்டால், அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்த மீன் உயிர் பெறும்.
******
கடலுக்கு நடுவே, நாம் பார்க்கும் குட்டி குட்டித் தீவுகள் எல்லாமே, மலைகளின் உச்சிகள் தான். மலைகளின், 95 சதவீத பாகம், கடலுக்கு அடியில் இருக்க, உச்சிகள் மட்டும் கடல் மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டு இருக்கின்றன. பார்ப்பதற்கு சாதாரண நிலப்பரப்பு போல் தெரியும் தீவுகள், உண்மையிலேயே பெரிய பெரிய ராட்சஸ மலைகளின் உச்சந் தலைகள் தான்.
*******
ஒரேயொரு சாக்லேட் சாப்பிட்டால், 150 அடி துாரம் நடப்பதற்கான ஆற்றல், நமக்கு கிடைக்கும். அதிக ஆற்றலை உடனே தரும் என்பதால், எப்போது போருக்கு சென்றாலும், அதிக அளவு சாக்லேட்டுகளை கொண்டு செல்வாராம், மாவீரன் நெப்போலியன்.
சுமார், 500 விதமான சுவைகளில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில், சமீபத்தில் செய்யப்பட்ட, சாக்லேட் சம்பந்தமான ஆராய்ச்சி முடிவில், சிறுவர்களுக்கு இனிப்பான தகவல் வெளியாகி உள்ளது. கார்போ ஹைட்ரேட் உள்ள உணவைச் சாப்பிட்ட பின், பல்லைச் சுத்தப்படுத்தாமல் இருந்தால் தான், பற்சிதைவு ஏற்படும். சாக்லேட்டில் இருக்கும் சில பொருட்கள், பற்சிதைவை தள்ளிப் போடக் கூடியவை என கூறப்பட்டுள்ளது.
******
தேசிய கீதம் - நாட்டுப் பண் பெரும்பாலும், அந்தந்த நாட்டையும், மக்களையும் வாழ்த்துவதாக இருக்கும். ஆனால், ஐரீஷ் நாட்டு தேசிய கீதத்தின் சில வரிகள் முற்றிலும் வித்தியாசமானவை.
அவை:
மனம் விட்டுச் சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது ஆத்மாவின் அற்புத இசை!
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
அது மகிழ்ச்சிக்குச் செல்லும் பாதை!
என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
*****
உலகின் மிகப்பழமை வாய்ந்த தையல் ஊசி, யூகோஸ்லாவியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊசியின் வயது, 3,000 ஆண்டுகள்.
******
கட்டாயம் என்பதன் பொருள்: கட்டி என்றால் நிலம். ஆயம் என்றால் வரி. மன்னர்கள் ஆட்சி காலத்தில் நிலத்திற்கான வரியை, மக்கள் தவறாமல் செலுத்தி வந்தனர். இதனாலேயே கட்டி, ஆயம் சேர்த்து, கட்டாயம் ஆனது.
*******
தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், ஹெல்மெட் ஆகியவை, ஆஸ்பெஸ்டாஸ் இழைகளால் ஆனவை. ஆஸ்பெஸ்டாஸ் நெருப்பில் எரியாது. மின்சாரத்தை கடத்தாது. 2,000 முதல் 3,000 சென்டிகிரேடு வரை, வெப்பத்தை தாங்க கூடியது.
*******
ஜப்பான் நாட்டில் ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த ஊர்வலத்தை, இரவிலேயே நடத்துகின்றனர். வேலைக்கு குந்தகம் ஏற்படாமலும், போக்குவரத்து தடைகளால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமலும் இருக்க, இப்படி ஊர்வலத்தை இரவில் வைத்துக் கொள்கின்றனர்.
********
இந்நாள் வரை ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தொப்பி, நெப்போலியன் அணிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, 1970ம் ஆண்டு, 17 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
********
பல ஆண்டுகள் மழையில் நனைந்தாலும், மண்ணில் கிடந்தாலும், கரையான் அழிக்காத ஒரே மரம், தேக்கு மட்டுமே. இம்மரத்தில், ஆணியடித்தால் அடிக்கப்பட்ட ஆணி, எப்போதும் துரு பிடிப்பதில்லை. காரணம், அதிலுள்ள குங்குலியம் போன்ற எண்ணெய் பசை தான்.
********
இரண்டு நாடுகள் இணைந்த நாடு - சானியா; இரண்டு தேசிய கீதங்கள் பாடும் நாடு - ஆஸ்திரேலியா; இரண்டு கண்டத்தில் உள்ள நாடு - துருக்கி; இரண்டு முறை சுதந்திரம் பெற்ற நாடு - சைப்ரஸ்; இரண்டு பிரதமர்கள் உள்ள நாடு - சான் மரினோ; இரண்டு மொழிகளில் தேசிய கீதம் உள்ள நாடு - செக்கஸ்லோவாகியா.
*******
இந்தியாவில் முதன் முதலில் தடை செய்யப்பட்ட புத்தகம், பன்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய, 'ஆனந்த மடம்' என்ற வங்காள நாவல். அதில், வந்தே மாதரம் பாடல் இடம் பெற்று இருந்ததால், அதற்கு தடை விதித்தது, ஆங்கிலேய அரசு.
**********
லேசான துாறலுக்கு பின், கும்மென்று கிளம்பும் மண் வாசனைக்கு என்ன காரணம் தெரியுமா? 'ஸ்ட்ரெப்டோமைசெடிஸ்' என்ற பாக்டீரியாக்கள், மண்ணில் நிறைய உள்ளன. இவை, திடீரென்று மழைத் துாறலில் நனைய நேரும் போது, சில ரசாயனப் பொருட்களை வெளியேற்றுகின்றன. இந்த ரசாயனங்களின் வாசனையை தான், நாம் மண் வாசனை என்கிறோம்.
*********
தங்கத்தை விட, 10 மடங்கு மதிப்பு மிகுந்த உலோகம், பிளாட்டினம். ஆனால், அது தங்கம் போல மினுங்காததால், மக்களிடையே அதிக மவுசு இல்லை. 10 டன் உலோகத் தாதுவிலிருந்து, ஒரு அவுன்ஸ் அளவு என்ற விகிதத்தில், பிளாட்டினம் கிடைப்பதால், இது மிகவும் அரிதான உலோகமாயிற்று. நகைக்கு மட்டுமல்ல, பேனா முதல் விமானம் வரை, பலவிதமான பொருட்கள் தயாரிப்பில், பிளாட்டினம் பயன்படுகிறது.
**********
அரளிச் செடி, வாகனங்களிலிருந்து வரும் ஒளியை உட்கிரகித்து, அதன் பிரதிபலிப்பை குறைய செய்வதாக, ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது, விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. அதனால் தான், அரளிச் செடிகள், பைபாஸ் சாலை மற்றும் நான்கு வழிச் சாலைகளில் வளர்க்கப்படுகின்றன.
**********
ஒரு ஆண்டில் பனைமரம் அளிக்கும் பயன்கள்: 180 லிட்டர் - பதநீர், 25 கிலோ - கருப்பட்டி, 20 கிலோ - பனை நார், 10 கிலோ - விறகு, 6 - பாய், 2 - கூடை. குறைந்த விலை வைத்தாலும், ஒரு பனை கொடுக்கும் ஆண்டு வருமானம், 17 ஆயிரத்து 820 ரூபாய்.
***********
ஒரு அமெரிக்கரும், இந்தியரும் ஓர் இடத்தில் சந்தித்து, அவரவர் நாட்டை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயம், 100 அடி ஆழம் தோண்டிய அமெரிக்கர், 'பாருங்க ஒரு கேபிள் தெரியுது. நாங்கள், 100 ஆண்டுகளுக்கு முன் டெலிபோன் கண்டுபிடித்ததன் அடையாளம்...' என்று பெருமையாக கூறினார்
உடனே, 'இன்னும், 500 அடி ஆழம் தோண்டுங்க, எங்க பெருமை தெரியும்...' என்று கூறினார், இந்தியர். 500 அடி தோண்டிப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. அப்போது, '600 ஆண்டுகளுக்கு முன்பே, நாங்கள் ஒயர்லெஸ் போன் கண்டுபிடித்ததன் அடையாளங்கள்...' என்றார், இந்தியர்.
*************