
பா - கே
ஆங்கில நாளிதழ் ஒன்றில், புகைப்படக்காரராக பணிபுரியும், லென்ஸ் மாமாவின் நண்பர் ஒருவர், அன்று, மாமாவை சந்திக்க அலுவலகம் வந்திருந்தார்.
நண்பர் உள்ளே நுழையும் போதே, 'வாய்யா பட்டர் சிக்கன்...' என, வரவேற்றார், மாமா.
'நண்பர், வெள்ளையாக, கொழுக் மொழுக் என இருப்பதால், அப்படி கூப்பிடுகிறீங்களா, மாமா?' என்றேன்.
'அது இல்ல, மணி... இவனுக்கு பட்டர் சிக்கன் என்றால் உயிர். ஒரு பிளேட் பட்டர் சிக்கனுக்காக, விலை உயர்ந்த கேமராவையே அடகு வைத்துள்ளான்...' என்றார், மாமா.
'பட்டர் சிக்கனுக்கு ஒரு வரலாறே இருக்கு தெரியுமா?' என்றார், நண்பர்.
'பட்டர் சிக்கனுக்கு வரலாறா?' என, ஆச்சரியமாக பார்க்க, 'ஒரு காலத்தில்...' என, ஆரம்பித்தார், நண்பர்:
கடந்த, 1920ல், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஓர் உணவகத்தை நடத்தி வந்தார், குந்தன் லால் குஜ்ரால் என்பவர். இவரது உணவகத்தில், தந்துாரி சிக்கன் தான் ஸ்பெஷல். ஒட்டுமொத்த பெஷாவர் நகரமே, விரைவில் அதற்கு அடிமை ஆனது. பெரிய திருமணங்கள், விருந்துகளுக்கு இவரைத்தான், 'கான்ட்ராக்டர்' ஆக போட்டனர்.
கடந்த, 1947ல், நாடு பிரிவினை அடைந்தது. அத்தனை சொத்துக்களையும் விட்டு விட்டு, டில்லிக்கு நாடோடியாக வந்தார், குந்தன் லால். டில்லியில், பிரிவினையின் போது நடந்த கலவரத்தில், காலியாக கிடந்த ஓர் உணவகம் கண்ணில் பட்டது. 'மோத்தி மகால்' என, பெயர் சூட்டி, உணவகத்தை துவங்கினார். இங்கேயும், வியாபாரம் சூடு பிடித்தது.
ஒருநாள், சிக்கன் துண்டுகளை, தக்காளியும், பட்டரும் கலந்த சாஸில் போட்டு, ஊற வைத்து, புதுவகை சிக்கன் கிரேவி செய்தார். சுவை அள்ளியது. அதற்கு, பட்டர் சிக்கன் என, பெயர் வைக்க, அது, சூப்பர் ஸ்டார் உணவாக மாறியது. பட்டர் சிக்கன், மோத்தி மகாலின் தலையெழுத்தையே மாற்றியது.
அதன்பின், புதுப்புது உணவு வகைகளை அறிமுகப்படுத்தினார். பனீர் மக்கானி, தால் மக்கானி இரண்டையும், இவர் தான் கண்டுபிடித்தார்.
பட்டர் சிக்கனின் புகழ் எங்கும் பரவி, இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா, அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன், ஈரான் முன்னாள் மன்னர் ஷா என, பலரும், இந்த கடைக்கு வந்து சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.
இவரது மூன்றாவது தலைமுறை பேரன், அமெரிக்காவில் படித்து விட்டு, இந்தியா திரும்பி, பழைய பாணி பிசினசில், புதுமையை புகுத்தினார்.
'ஹோட்டலுக்கு வந்து உட்கார்ந்து, மெதுவாக, 'ஆர்டர்' பண்ணி விட்டு சாப்பிடுவது, வேலைக்கு ஆகாது...' எனச் சொல்லி, அனைத்திலும் மாற்றம் செய்தார். அனைத்து உணவுகளும் ஒரே தரத்தில், சுவையில் தயாரிக்கப்பட்டது. துரித உணவுகள், பார்சல் உணவுகள் எல்லாம் அறிமுகமாகின. டில்லியில் மட்டும் நுாறு கிளைகள் திறக்கப்பட்டன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மத்திய கிழக்கு நாடுகள், கனடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என, பல்வேறு இடங்களில் பல கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
டில்லிக்கு சென்று, இந்த ஹோட்டல் பற்றி கேட்டால், ஆக்ராவுக்கு தாஜ்மகால், டில்லிக்கு, மோத்தி மகால் என்பர்.
- எனக் கூறி முடித்தார், நண்பர்.
'பட்டர் சிக்கன், அரபு நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியான உணவு வகை என நினைத்திருந்தேனே... நம்மூர் ஐட்டம் தானா...' என, வியந்தேன்.
பட்டர் சிக்கன் வாங்கி தருவதாக கூறி, நண்பரை வெளியே அழைத்துச் சென்றார், லென்ஸ் மாமா.
மாமா, திரும்பவும் அலுவலகம் வரமாட்டார் என, அவர் பேசிய தொனியிலேயே தெரிந்து விட, என் வேலையை தொடர்ந்தேன், நான்.
ப
ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில், அதை ஆண்டு வந்த, சுல்தான் ஒருவனை தோற்கடித்து, அவனது கோட்டையையும் கைப்பற்றின, வீர சிவாஜியின் படைகள்.
அப்போதெல்லாம், யுத்தத்தில் வெற்றி பெற்றால், தோல்வியடைந்த நாட்டின் பட்டத்து இளவரசிகளையும், ராணிகளையும் கவர்ந்து சென்று விடுவர். வெற்றி பெறும் மன்னனோ, சுல்தானோ விரும்பினால், அவளை, அவனுக்கு விருந்தாக்கி விடுவர்.
சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி, பேரழகி. அவளது அழகு, அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே, சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள், தம் மன்னனின் மனமும், உடலும் குளிரட்டும் என எண்ணி, அவளை சிறைபிடித்தனர்.
கடுங்காவலுக்கு இடையே பல்லக்கில் ஏற்றி, அவளை கொண்டு வந்து, அவள் தப்பிக்க முடியாதபடி, சிவாஜியின் அந்தப்புரத்திற்கு வெளியே விட்டு விட்டனர்.
அன்றிரவு துாங்கச் சென்ற சத்ரபதி சிவாஜி, தன் அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, 'பல்லக்கில் இருப்பது யார்?' என, தளபதியிடம் கேட்டார்.
'மன்னா, இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழகை கண்டு மயங்காதவர்களே, இந்த பிரதேசத்தில் இல்லை. எனவே, இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்...' என்றான்.
அந்த பல்லக்கு அருகே சென்றார், சிவாஜி.
பல்லக்கின் திரைச் சீலையை விலக்கிப் பார்த்தார். ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி, மருண்ட விழிகளோடு, சிவாஜியை பார்த்தாள்.
'அம்மா, நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால், நானும் அழகாக பிறந்திருப்பேன்...' என்றார், சிவாஜி.
இதைக்கேட்டு, சிவாஜியின் தளபதி முதல், படை வீரர்கள் வரை அனைவரும், வெட்கித் தலை குனிந்தனர். அந்த வீர மகனைக் கையெடுத்து கும்பிட்டாள், சுல்தானின் மனைவி.
தளபதியை சினந்து, 'பெண்கள், நம் நாட்டில் தெய்வமல்லவா. இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மண்ணாசையை விட கொடியது, பெண்ணாசை. மாபெரும் சாம்ராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கி இருக்கிறது.
'இனி, இப்படி ஒரு இழிச் செயலை கனவிலும் செய்ய துணியாதீர். முதல் வேலையாக இவரை அழைத்து போய், அவர் விரும்பும் இடத்தில் விட்டு விட்டு வாருங்கள்...' என கட்டளையிட்டார், சிவாஜி.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.