sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 22, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

அலுவலகம்...

தன் கேபினில் அமர்ந்து, அன்றைய நாளிதழுக்குள் தலையை கவிழ்த்தபடி, எதையோ சுவாரஸ்யமாக படித்துக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.

இவ்வளவு ஆழ்ந்து படிக்க மாட்டாரே... என்ன செய்தியை இப்படி படித்துக் கொண்டிருக்கிறார் என்ற ஆச்சரியம் ஏற்பட்டாலும், எதுவும் கேட்காமல், என் வேலையில் ஈடுபட்டேன்.

திடீரென, வெடி சிரிப்பு சிரித்தார், லென்ஸ் மாமா. உ.ஆசிரியைகள் உட்பட அனைவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தோம்.

எங்களது பார்வையை புரிந்து கொண்டவராக, 'சர்க்கஸ் கூடாரத்திலிருந்து ஒட்டகத்தை திருடிட்டு போயிருக்கான், ஒருத்தன். போலீஸ் ஒருபுறம், உரிமையாளர் ஒருபுறம், வலைவீசி தேடி வந்த நிலையில், திருடியவனே, ஒட்டகத்தை பராமரிக்க முடியாமல் திரும்ப கொண்டு வந்து விட்டுவிட்டு போயிருக்கான்.

'பணத்தை திருடுறாங்க, நகைகள் திருடுறாங்க. ஆடுகளையும் கூட, சமீபகாலமாக திருடி வருவதை கேள்விப்பட்டுள்ளோம். ஒட்டகத்தை திருடிட்டு போயிருக்கானே... அவனை என்னவென்று சொல்வது? வித்தியாசமான திருடர்கள் எல்லாம், நம்மூரில் தான் இருக்காங்க...' எனக் கூறி சிரித்தார், மாமா.

'இதற்கா இப்படியொரு கர்ண கொடூரமான சிரிப்பு?' என, அலுத்துக் கொண்டார், உ.ஆசிரியை ஒருவர்.

'உமக்கு ரசிக்க தெரியல. கூடாரத்திற்குள் நுழைந்து, யாருக்கும் தெரியாமல், அவ்வளவு பெரிய உருவத்தை கடத்திட்டு போனதை கொஞ்சம் கற்பனையில் ஓட்டி பாருங்கள். உங்களுக்கும் சிரிப்பு வரும்...' என்றார், மாமா.

'ஹுக்கும்...' என்றவர், தன் முகவாய் கட்டையை தோளில் இடித்து, 'அழகு' காட்டினார், உ.ஆ.,

'சபாஷ். அடுத்தாத்து அம்புஜம் மாமியை நினைவுப்படுத்தறீங்க...' என, மாமா நக்கல் அடித்ததும், கடுப்பானார், உ.ஆ.,

இவர்கள் சண்டையிலிருந்து விலகி, 'ஒட்டகத்தை வளர்ப்பது அவ்வளவு கடினமானதா?' என, அருகில் இருந்த, மூத்த செய்தியாளரிடம் கேட்டேன்.

'ஒட்டகம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை சில நாட்களுக்கு முன் படித்தேன். அதில், உள்ளதை அப்படியே சொல்கிறேன்...' எனக் கூற ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்:

விலங்குகளில் ஒட்டகம், ஒரு வித்தியாசமான படைப்பு. தனித்தன்மைகள் பல நிறைந்தது. அதைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ச்சி செய்துள்ளார், விஞ்ஞானி டால் ஸ்டீவன்சன் என்ற அமெரிக்கர். அமெரிக்காவிலிருக்கும், 'சயின்ஸ் டைஜிஸ்ட்' என்ற விஞ்ஞான பத்திரிகையில், ஆராய்ச்சி கட்டுரையை எழுதினார், அவர்.

'இறைவனால் ஒட்டகம் எவ்வாறு படைக்கப் பட்டிருக்கிறது என்பதை பார்த்து அறிந்து கொள்ள வேண்டாமா?' என, திருக்குரானில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளதை கேள்விப்பட்ட பின்னரே, ஒட்டகத்தை பற்றி ஆராய்ச்சி செய்ய, காரணம் என்கிறார்.

அந்த ஆராய்ச்சியில், ஒட்டகம் பற்றி பல நுட்பமான விஷயங்களை, அவர் கூறியுள்ளார்.

ஒட்டகத்தின் பாதங்கள். தட்டையாகவும், பெரியதாகவும் இருப்பதால், மணற்பரப்பில் எளிதாக நடக்க உதவுகிறது.

அடுத்து, அதனுடைய கழுத்து. நீண்டு வளைந்திருக்கும் கழுத்து இருப்பதால், தரையில் சில இடங்களில் முளைத்துள்ள புற்பூண்டுகள் மற்றும் குட்டிச் செடிகளை மேய்வதற்கு அது ஏதுவாக இருக்குமாம்.

அப்புறம், அதனுடைய கண்கள். காற்றில் அடித்து வரும் மணலும், சுடும் வெயிலும் தாக்காத அளவுக்கு ஒட்டகத்தின் கண்கள், மிக விசேஷமான முறையில் அமைந்துள்ளது.

அதேபோல ஒட்டகத்தின் மூக்கு, தனித்தன்மை வாய்ந்தது. அதன் மூக்கு துவாரங்கள் ஒடுங்கி, தசைநார்களால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. திடீரென கடும் காற்று வீசி, மண்ணை வாரி இரைத்தால், தசைநார்கள் மூக்கை சுருக்கி, அந்த மண் உள்ளே போகாமல் தடுத்துவிடும். அதே நேரத்துல, ஒட்டகம் மூச்சு விடுறதுக்கும் கொஞ்சம் இடத்தை அது விட்டு வைக்கிறதாம்.

ஒட்டகங்களின் உதடுகள் பிளவுபட்டு மிக மிருதுவானதாகவும், உணர்ச்சியுடையதாகவும் இருக்கிறது. இதனால், மண்ணில் கிடைக்கக் கூடிய தானிய வகைகளை தேடி எடுத்து, அது உண்பதற்கு வசதியாக இருக்கிறது.

பொதுவாக, ரத்தத்தின் தன்மைக்கு, சில குணங்கள் உண்டு. ஆனால், ஒட்டகத்துக்கு மட்டும், இறைவன் தனித்தன்மை வாய்ந்த ரத்தத்தை கொடுத்துள்ளான். மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள ரத்த அணுக்கள், வட்ட வடிவமாக இருக்கும்.

ஆனால், ஒட்டகத்தின் ரத்த அணுக்கள், முட்டை வடிவமாக இருக்கும்; மற்றதை விட, இது கடினமாகவும் இருக்குமாம். அதில் இருக்கிற, சோடியம், பொட்டாசியம் மட்டுமல்லாமல், இன்னும் இருக்கிற ரசாயனப் பொருட்களும் வித்தியாசமான அமைப்பில் இருக்கும்.

இதனால், ஒட்டகம் பல நாட்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் அதனுடைய, ரத்த ஓட்டப்பாதை பாதிக்கபடுவதில்லை. அதனால தான், ரொம்ப நாள் வரைக்கும் நீர் தேவையில்லாமல் ஒட்டகத்தால் பயணம் செய்ய முடிகிறது.

ஒட்டகத்தின் முதுகில், ஒண்ணு அல்லது ரெண்டு திமில்கள் இருக்கும். இதில், ஏராளமான கொழுப்பு சத்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த கொழுப்பில் உள்ள இனிப்பு பொருளை தண்ணீராக, ஒட்டகத்தால் நினைத்த நேரத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.

ஒட்டகத்துக்கு இருக்கும் இந்த சிறப்பு ஏற்பாட்டின் காரணமாகத்தான், தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் கூட, அது நீண்ட துாரம் பயணம் செய்ய முடிகிறது.

அப்புறம் இன்னொரு அற்புதமான தகவலும் உண்டு. ஒட்டகத்தை வேகமா நடக்க வைக்கணும்ன்னா, அதை அடித்து விரட்ட, தார்க்குச்சி தேவையில்லை.

ரம்மியமான பாடல்களைப் பாட ஆரம்பித்தாலே, 'நாம வேகமா போகணும்ன்னு, எஜமானர் விரும்புகிறார்'ன்னு உணர்ந்து, அந்த பாட்டை கேட்டு ரசிச்சுக்கிட்டே வேகமாக நடக்க ஆரம்பிக்குமாம், ஒட்டகம்.

- இப்படி செய்தியாளர் கூறி முடித்ததும், 'அடடா... ஒட்டகம் பற்றி இவ்வளவு விஷயம் இருக்கிறதா?' என, ஆச்சரியமானேன், நான்.

அனைத்தையும் காதில் வாங்கிய லென்ஸ் மாமா, 'எனக்கென்னவோ, அந்த ஒட்டக திருடன், வளர்ப்பதற்கு திருடி சென்றிருக்க மாட்டான். பக்ரீத் பண்டிகைக்காக திருடி இருப்பான். என்ன காரணத்தினாலோ பயந்து போய் திரும்பி கொண்டு வந்து விட்டுவிட்டான்...' என்றார்.

'ஒட்டக உரிமையாளரே, அதுபற்றி கவலைப்பட்டிருக்க மாட்டார். நீங்கள் தான் அதுபற்றியே யோசித்துக்கிட்டு இருக்கீங்க. வேலையப் பார்ப்போம்...' என, அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார், செய்தியாளர்.






      Dinamalar
      Follow us