
பா - கே
மின் அஞ்சலில் வந்த வாசகர்களின் கடிதங்களை படித்துக் கொண்டிருந்தேன். அதில், வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் வித்தியாசமாக இருந்தது. நான் படித்துக் கொண்டிருந்த போது, அருகில் வந்த, லென்ஸ் மாமா அதை வாங்கி படிக்க ஆரம்பித்தார்.
படித்து முடித்ததும், கடிதத்தை என்னிடம் கொடுத்து, உ.ஆசிரியைகள் பக்கம் கைக்காட்டி, 'இந்த கடிதத்தை, எதற்கெடுத்தாலும் வரிந்து கட்டி சண்டைக்கு வரும் இவர்களிடம் கொடு மணி... படிக்கட்டும். மனுஷன் அனுபவப்பட்ட ஞானியாக எழுதியிருக்கான்...' என, சத்தமாக கூறினார், மாமா.
உ.ஆசிரியைகள் திரும்பி பார்க்க, அங்கிருந்து மெதுவாக நழுவினார், மாமா.
'மணி... என்ன விஷயம்?' என்றனர்.
'ஒண்ணுமில்லை...' என, சமாளித்தேன், நான்.
அக்கடிதத்தில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?
வாசகர் அனுப்பிய கடிதம் இதோ:
திருமணமான புதிதில் பெண்கள்...
1.கணவர் கூப்பிடாத போதே... என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்
2.எங்கம்மாவை பார்க்கணும் போல இருக்கு. வாங்க, இரண்டு நாள் அம்மா வீட்டுக்கு போய்விட்டு வரலாம்
3.உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்
4.எனக்கு புடவையை நீங்க தான், 'செலக்ட்' செய்யணும்
5.அத்தை லெட்டர் போட்டிருக்காங்க
6.உங்க, 'ஹேர் ஸ்டைல்' ரொம்ப நல்லா இருக்கு
7.நீங்க சிரிக்கும் போது, பல் வரிசையாக அழகா இருக்கு
8.உங்க வீட்டுல எல்லாரும் கலகலப்பான டைப்... நல்லா பேசுறாங்க
9.ஓ.கே., நான் சினிமாவுக்கு ரெடி. போகலாம்பா.
சில ஆண்டுகளுக்கு பின்...
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2.நானும், குழந்தைகளும் என் அம்மா வீட்டுக்கு போறோம். 10 நாட்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?
3.எனக்கு கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4.இது ஒரு கலர்ன்னு, எப்படி தான் இந்த சேலையை எடுத்தீங்களோ!
5.ம்ம்ம்... உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்
6.எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு
7.எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே
8.உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9.கிரைண்டரில் மாவு அரைக்குற அன்றைக்கு தான் சினிமாவுக்கு கூப்பிடுவீங்க. நீங்க மட்டும் போங்க.
பல ஆண்டுகள் சென்ற பின்...
1.காதில் வாங்குவதே இல்லை
2.என் அம்மா வீட்டுக்கு போறவளுக்கு வர்ற வழி தெரியும்... யாரும் வர வேண்டாம்
3.இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க
4.ஒரு, 5,000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடவையெல்லாம் நானே பார்த்துக்கிறேன்
5.உங்களை பெத்த இம்சை மகராசி தான், லெட்டர் போட்டிருக்காங்க
6.போதும், போதும்... வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்
7.எப்ப பார்த்தாலும் என்ன ஈ... வாயை மூடுங்க. கொசு வாய்ல போய்ட போகுது
8.உங்க பரம்பரையே ஓட்டை வாய் தானோ!
9.சினிமாவும் வேண்டாம், டிராமாவும் வேண்டாம். என் பொழப்பே சினிமா எடுக்கிறாப்புல தான் இருக்கு.
- படித்து விட்டீர்களா? உங்கள் கருத்தை எனக்கு எழுதுங்களேன்.
ப
'எதிர்காலத்தை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்...' என, கூறுபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பயப்படாத மனிதர்கள் யாருமே கிடையாது.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பயம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, மனிதனுக்கு ஆறு விதமான பய உணர்வுகள் வரலாம் என்கின்றனர், மனோவியல் அறிஞர்கள்.
எல்லாவிதமான பயமும் இந்த, ஆறு வகைக்குள் அடக்கம். அந்த, ஆறு வகை பயமும், ஆறு எதிரிகள் மாதிரி. ஆறு எதிரிகளையும் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் வெற்றியடைவது சுலபம்.
சரி, அந்த ஆறு வகை பயம் என்னென்ன தெரியுமா?
முதலாவது, வறுமை பற்றிய பயம். இரண்டாவது, பழிச்சொல் பற்றிய பயம். மூன்றாவது, உடல்நலம் பாதிப்பு பற்றிய பயம். நான்காவது, காதல் தோல்வி, ஐந்தாவது, முதுமை. ஆறாவது, மரணம்.
பயப்படுவது என்பது, ஒரு மனநிலை தான். இந்த மனநிலையை கட்டுப்படுத்த முடியும். திசை திருப்ப முடியும்.
* முதலில் கூறிய, வறுமை பற்றிய பயத்தின் அறிகுறிகள் என்ன தெரியுமா?
எதிலேயும் அக்கறை இல்லாமல், ஒரு குறிக்கோள் இல்லாமல் இருப்பது. வறுமையை சகித்து கொள்வது.
வாழ்க்கையில் கிடைப்பது எதுவாக இருந்தாலும், ஆட்சேபனை இல்லாமல் ஏற்றுக் கொள்வது.
மனதாலும், உடலாலும் சோர்ந்து போய் இருப்பது. ஆர்வம், முனைப்பு மற்றும் கற்பனைத்திறன் எதுவுமே இல்லாமல் இருப்பது.
* பழிச்சொல் பற்றிய பயம். அதாவது, அடுத்தவர்கள் நம்மை குறை சொல்வரோ என்ற பயம்.
இதன் அறிகுறி என்ன தெரியுமா?
புதியவர்களை சந்திக்க பயப்படுவது. முடிவு எடுக்க முடியாமல் குழம்புவது. பிரச்னைகளை தவிர்க்க விரும்புவது.
தாழ்வு மனப்பான்மை. வரவுக்கு மீறி செலவு செய்து, 'இமேஜை' உயர்த்திக் கொள்வது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, இதெல்லாம் அதற்கான அறிகுறிகள்.
* மூன்றாவது, உடல்நலம் பாதிப்பு பற்றிய பயம். அதாவது, நோய் பற்றிய பயம்.
ஒரு உண்மை என்ன தெரியுமா?
டாக்டரை சந்திப்பவர்களில், 75 சதவீதம் பேர், தங்களுக்கு நோய் வந்து விட்டதாக, கற்பனையில் இருப்பவர்கள் தான். இந்த, பயத்தின் அறிகுறிகள் என்ன என்றால், வியாதிக்கான அறிகுறிகள் தன்னிடம் தெரிவதாக நினைத்து கொள்வது. வியாதியைப் பற்றி பேசிப் பேசியே மனதை அதிலேயே வைத்துக் கொள்வது.
நோய் சம்பந்தமான செய்திகளை படித்து, நமக்கு இப்படி ஆயிடுமோன்னு வேதனைப்படுவது. இதெல்லாம் தான்.
* நான்காவது, காதல் தோல்வி பற்றிய பயம். இது ரொம்பவும் வேதனையானது. உடம்பையும், மனதையும் சீரழித்து விடும். ஆண்களை விட, பெண்கள் இந்த பய உணர்வில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
* ஐந்தாவது, முதுமை பயம். வயதான காலத்தில் எப்படி சமாளிக்கிறது. சுதந்திரமாக, சுயமாக செயல்பட முடியாதே... என்ற நினைப்பு.
* அடுத்து, மரண பயம். இது, எல்லாருக்கும் பொதுவானது தான். தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
இளம் வயதில் உழைத்து பணம் சேர்க்க வேண்டும், எப்போதும் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, மனதை கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால் போதும். எல்லா பயமும் நம்மை விட்டு போய் விடும்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.