
பா - கே
குமரி மாவட்டத்திலுள்ள கல்லுாரி ஒன்றில் பணிபுரியும் பேராசிரியை அவர். என்னுடைய தீவிர வாசகியுமாவார். நீண்ட இடைவெளிக்கு பின், என்னை சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். பல விஷயங்களை பேசிய பின், கேள்வித்தாள் ஒன்றை என்னிடம் கொடுத்தார்.
அவரிடம் ஒரு வழக்கம். எப்போது என்னை சந்திக்க வந்தாலும், இதுபோல், கேள்வித்தாளை கொடுத்து, பதில் எழுதச் சொல்வார். நான் எழுதும் பதிலுக்கு மதிப்பெண் போடுவார். நான் எப்படிப்பட்டவன் என்பதை அறியவாம். என்னைப் பற்றி நானே சொல்கிறேன் என்றாலும், விட மாட்டார். இப்போதும் அப்படியே!
'கம்மிங் பேக் டு த பாயின்ட்!'
'என்ன வாத்தியாரம்மா... உம் மாணவர்களுக்கு கொடுப்பது போல், என்னிடமும் கேள்வித்தாளை கொடுக்கிறீர்களா?' என்றேன்.
'சும்மாத்தான் மணி. இங்கு, 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கவனமாக படித்து, உங்கள், நண்பன் யாரையாவது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு, சூழ்நிலையை புரிந்து பதிலை, 'டிக்' செய்யுங்கள்...' என்றார், வாசகி.
அவரது ஆசையை கெடுப்பானேன் என, கேள்விகளைப் படித்து, பதில்களை, 'டிக்' செய்ய ஆரம்பித்தேன்.
1. உங்கள் நண்பனுக்கு பெரிய பிரச்னை வருகிறது...
அ. அவரிடமிருந்து சற்று ஒதுங்கி இருப்பேன்
ஆ. அவரிடம் பேசி, என்னால் முடிந்தளவு உதவி செய்வேன்.
2. உங்கள் நண்பன் உங்களுக்கு பிடிக்காத ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்...
அ. அவரிடம் பேசுவதை நிறுத்தி விடுவேன்.
ஆ. அவர், என் நெருங்கிய நண்பன் என்பதால், அந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்வேன்.
3. உங்கள் நண்பரை பற்றி, சமீபகாலமாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை...
அ. போனால் போகட்டும் என, விட்டு விடுவேன்
ஆ. பிற நண்பர்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பேன்.
4. உங்கள் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி வருகிறது...
அ. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்ற செய்தியை அனுப்புவேன்
ஆ. அவரை நேரில் சந்தித்து தைரியம் சொல்வேன்.
5. உங்கள் நண்பன் உங்களிடம் கடன் கேட்கிறார். கடன் கொடுக்கும் தகுதியும் உங்களுக்குள்ளது. ஆனால்,
அ. கடன் கொடுக்க மாட்டேன்
ஆ. கடனாக இல்லாமல், முடிந்தளவு உதவி செய்வேன்.
6. இன்று உங்கள் நண்பனின் பிறந்த நாள் என, உங்களுக்கு தெரியும்....
அ. அவன் எனக்கு போன் செய்யவில்லை, என்பதால் நான் அமைதியாக இருப்பேன்
ஆ. நான் அவன் வீட்டிற்கு சென்று ஏதேனும் பரிசு கொடுத்து ஆச்சரியப்படுத்துவேன்.
7. உங்கள் நண்பன் ஒரு கதை எழுதி உங்களிடம் காட்டுகிறார். அது, உங்களுக்கு பிடிக்கவில்லை...
அ. இனிமேல் எந்த கதையும் எழுதாதே என, ஆலோசனை வழங்குவேன்
ஆ. 'நல்ல ஆரம்பம்' என, உற்சாகப்படுத்துவேன்.
8. விடுமுறையில் உங்கள் குடும்பத்தில் அனைவருடனும் நீங்கள் ஒரு மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று வருகிறீர்கள்...
அ. அனுபவங்களை என் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என, நினைப்பேன்
ஆ. போட்டோக்களை அனுப்பி, எங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வேன்.
9. உங்கள் நண்பன் தீய சக்திகளுடன் கைகோர்க்கிறான் என்பதை நீங்கள் கேள்விப்படுகிறீர்கள்...
அ. நான் அமைதியாக இருப்பேன்
ஆ. அவனை தனியாக சந்தித்து, ஆலோசனை வழங்குவேன்.
10. உங்கள் நண்பனின் வளர்ப்பு பிராணி திடீரென இறந்து விடுகிறது...
அ. அதை நான் பொருட்படுத்த மாட்டேன்
ஆ. அவனை சந்தித்து, அவனின் வருத்தத்தில் கலந்து கொள்வேன்.
அ-க்கு 5 மதிப்பெண்கள், ஆ-க்கு 10 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்களை கூட்டுங்கள்.
உங்களின் மதிப்பெண் 50லிருந்து, 60 வரை இருந்தால் நீங்கள், உண்மையில் நண்பரே இல்லை. 65லிருந்து 70 என்றால் - நீங்கள் மேலோட்டமான நண்பர்; 75லிருந்து 80 என்றால் - நீங்கள் நல்ல நண்பர்கள்; 85லிருந்து 100 என்றால் - நீங்கள் உயிர் நண்பர்கள்.
நான் எவ்வளவு மதிப்பெண் பெற்றேன் என, ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றீர்கள்!
ப
ஹோ ட்டலுக்கு சென்றால், சாப்பிட்டு முடித்ததும், சர்வருக்கு, 'டிப்ஸ்' கொடுப்போம் அல்லவா? அந்த வழக்கம் எப்படி வந்தது தெரியுமா?
முதன்முதலாக, 16ம் நுாற்றாண்டில், 'டிப்ஸ்' கொடுக்கும் வழக்கம், இங்கிலாந்தில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது.
அப்போது, விடுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு, விருந்தினர்கள் தங்கள் திருப்திக்கு ஏற்ப, சிறு தொகையை வழங்கினர்.
விரைவான சேவைக்கு உறுதியளித்தல் என்பதன் சுருக்கம் தான், 'டிப்!'
ஐரோப்பாவில், பணக்காரர்கள் தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தவும், தாராள மனப்பான்மையைக் காட்டவும், சேவையாளர்களுக்கு கூடுதல் பணம் அளித்தனர்.
இந்த பழக்கம் படிப்படியாக, உலகின் பல பகுதிகளுக்கு பரவியது. உலகெங்கும், 'டிப்ஸ்' கொடுக்கும் வழக்கம், அவரவர் கலாசாரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
அமெரிக்காவில், உணவகங்களில், 15 முதல் 20 சதவீதம் வரை, 'டிப்ஸ்' கொடுப்பது, கட்டாயமாக உள்ளது. ஏனெனில், பணியாளர்களின் ஊதியம், பெரும்பாலும் டிப்ஸை நம்பியே இருக்கிறது.
ஆனால், ஜப்பானிலும், சீனாவிலும், 'டிப்ஸ்' கொடுப்பது அவமரியாதையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், சேவை அவர்களின் பணியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சீனாவில் சுற்றுலாப் பயணிகளின் செல்வாக்கால், நகர்ப்புறங்களில், 'டிப்ஸ்' ஏற்கப்படுவது அதிகரித்து வருகிறது.
ஐரோப்பாவில், பல நாடுகளில், உணவக, 'பில்'களில், சேவைக் கட்டணம் சேர்க்கப்பட்டிருந்தாலும், சிறு தொகையைக் கூடுதலாக வழங்குவது வழக்கமாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில், 'டிப்ஸ்' எதிர்பார்க்கப்படுவதில்லை. ஆனால், சிறப்பான சேவைக்கு சிலர் விருப்பப்பட்டு வழங்குவர்.
இந்திய நகரங்களில் உணவகங்கள், ஓட்டுனர்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களில், 5 முதல் 10 சதவீதம் வரையிலான, 'டிப்ஸ்' கொடுப்பது பரவலாகி வருகிறது. ஆனால், இப்பழக்கம் கிராமப்புறங்களில் அரிதாகவே உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில், 'டிப்ஸ்' வழங்குவது, மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது, ஆனால், கட்டாயமல்ல.
சுவாரஸ்யமாக, சிங்கப்பூரில், 'டிப்ஸ்' கொடுப்பது, சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக பிரேசிலில், உணவகங்களில் 10 சதவீதம் சேவைக் கட்டணம், 'பில்'லுடன் சேர்க்கப்படுகிறது. ஆனால், கூடுதல், 'டிப்ஸ்' அரிது.
எகிப்தில், 'டிப்ஸ்' பக்ஷீஷ் என, அழைக்கப்படுகிறது. இது, சிறு சேவைகளுக்கும் வழங்கப்படுகிறது.
ஆப்ரிக்காவின் சில பகுதிகளில், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, 'டிப்ஸ்' எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக, நியூசிலாந்தில், டிப்ஸ் கொடுப்பது புருவத்தை உயர்த்தும். ஏனெனில், அது அவர்களின் கலாசாரத்தில் இல்லாத வழக்கம்.
'டிப்ஸ்' பழக்கம், உலகளவில் பொருளாதார நிலை, சமூக மரபுகள் மற்றும் சேவையின் தரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்பதே உண்மை.

