
பா - கே
'மணி... இன்று, சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தேன்...' என்றார், 'திண்ணை' நாராயணன்.
'ஓய், பிக்பாக்கெட்காரன் யாராவது, உன் ஜோல்னாபையிலிருந்து பணத்தை அடித்து விட்டானா?' என்றார், லென்ஸ் மாமா.
'அட... சும்மா இருப்பா. அதெல்லாம் ஒன்றுமில்லை. நான், சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள, சாய்பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன். தரிசனம் முடித்து, திரும்பி வரும்போது, கோவில் வாசலில் நின்றிருந்த பிச்சைக்காரன் ஒருவன், கோவிலுக்கு வந்த ஒரு பெண்மணியிடம் தர்மம் கேட்டுக் கொண்டிருந்தான்.
'வசதியான தோற்றத்தில் இருந்த அந்த பெண்மணியோ, ''ஐ டூ ஒன்லி டிஜிட்டல் டிரான்சாக்ஷன் என்னிடம் பணம் எதுவும் இல்லை...'' என்று ஆங்கிலமும், தமிழும் கலந்து பதிலளித்தார்.
'அதாவது, பணமாக எதுவும் கைவசம் இல்லை. 'டிஜிட்டல்' பணபரிவர்த்தனை செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருப்பதை கூறினார்.
'அதைக் கேட்டதும், அந்த பிச்சைக்காரன் சும்மா இருந்து விடுவான் என்று நினைத்தேன். ஆனால், சற்றும் எதிர்பாராவிதமாக, தன் சட்டைப் பையில் இருந்த, 'ஆண்ட்ராய்ட்' மொபைல் போனை எடுத்து, எதையோ, 'விறு விறு'வென, 'டைப்' செய்து, 'மேடம், இந்தாங்க. இந்த, 'க்யூ ஆர் கோடு-ஐ ஸ்கேன்' செய்து, 'ஜி.பே.,'யில் பணம் அனுப்பிடுங்க...' என்றான்.
'அப்பெண், நான் மற்றும் அங்கு நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியானோம். அடுத்து, என்ன நடக்குமோ என்று, அதீத எதிர்பார்ப்புடன் அவர்களையே பார்த்தோம்.
'சற்று திகைத்த, அப்பெண்மணி, வேறு வழி இல்லாமல், 'க்யூ ஆர் கோடு-ஐ ஸ்கேன்' செய்து, பணம் அனுப்பிவிட்டு, அவசர அவசரமாக அவரது காரில் ஏறினார்.
'தன் மொபைல் போனை பரிசோதித்த அந்த பிச்சைக்காரன், 'என்ன மேடம், 500 ரூபாய் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்த்தால், வெறும், 50 ரூபாய் அனுப்பியிருக்கிறீர்களே...' என்றான்.
'இதைக் கேட்டதும், நாங்கள், 'குபீர்' என்று சிரித்து விட்டோம். அப்பெண்மணிக்கு தர்மசங்கடமாகி விட்டது. உடனே, காரை கிளப்பி, சென்று விட்டார்.
'வாரமலர் இதழில் வெளியாகும், தமாஷ் பக்கத்தில் தான், இதுபோன்ற, 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை தமாஷ்களை படித்து, ரசித்துள்ளேன். நிஜத்திலும், இதுபோன்ற ஆசாமிகள் இருக்கின்றனர். எல்லாம் கலி காலம்ப்பா...' என்று முடித்தார், நாராயணன்.
'வாயால், 'டிஜிட்டல்' இந்தியா என்று, சொன்னால் போதுமா? எங்கும், எதிலும், 'டிஜிட்டல்' மயமாகி வருவதைத்தான் இது காட்டுகிறது...' என்றார், லென்ஸ் மாமா.
ப
பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான, சாவி என்ற சா.விஸ்வநாதன் எழுதிய, 'பழைய கணக்கு!' என்ற நுாலில் படித்தது இது: தில்லானா மோகனாம்பாள் - தொடர்கதை, இவர்கள் சந்தித்தால் - பிரபலங்கள் போட்டி மற்றும் சினிமா விமர்சனம் போன்ற பல புதிய பகுதிகள் வெளிவந்து கொண்டிருந்த, ஆனந்த விகடன் இதழின் பொற்காலம் அது.
ஒவ்வொரு வாரமும் தலையங்கம் முதற்கொண்டு, மற்ற எல்லா சிறப்பு அம்சங்களை பற்றியும் உதவி ஆசிரியர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வதற்காக, 'விகடன்' அலுவலகத்துக்கு நாள்தோறும் வந்து போவார் அதன் அதிபர், எஸ்.எஸ்.வாசன்.
அப்புறம், உதவி ஆசிரியர்கள் எழுதிக் கொடுப்பவற்றை படித்து பார்த்து, மாற்றி அமைக்க வேண்டியவைகளை மாற்றி அமைத்து, திருத்தி, மெருகேற்றி அனுப்பி வைப்பார்.
ஒவ்வொரு வாரமும் அந்த வார தலையங்கம் என்ன என்பதை முடிவு செய்வதற்காக, அந்த வாரம் கூடிய கூட்டத்திற்கு, பத்து, பதினைந்து பேர் கலந்து கொண்டனர்.
பத்திரிகைகாரர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் இவ்வளவு கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசின், 'வேஜ் போர்ட்' அப்போது நிர்ணயம் செய்திருந்தது. அதை அவ்வளவாக வரவேற்கவில்லை, வாசன்.
'எழுத்தாளர்கள், 'கிரியேடிவ் பீப்பிள்' அவர்களின் திறமை கண்டு அதற்கேற்ப எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது பத்திரிகையின் உரிமையாளராகத்தான் இருக்க வேண்டுமே தவிர, எங்கேயோ டில்லியில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள், 'உன் உதவி ஆசிரியருக்கு இவ்வளவு சம்பளம் கொடு...' என்று சொல்வது என்ன நியாயம்?' என்பது அவர் வாதம்.
எனவே, 'வேஜ் போர்டின்' சிபாரிசுகளை ஆட்சேபித்து, அந்த வாரம் தலையங்கம் எழுத வேண்டும் என்று கூறினார், வாசன். அதற்கான காரணங்களையும் எடுத்து விளக்கி, பின்னர் ஒவ்வொருவரின் அபிப்பிராயத்தையும் தனித்தனியே கேட்டார். என்னைத் தவிர மற்ற அத்தனை பேரும் அநேகமாக, வாசனின் யோசனையை ஒட்டியே தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
என் முறை வந்தபோது, 'நீ என்ன சொல்கிறாய்?' என்பது மாதிரி பார்த்தார்.
'இதற்காக ஒரு தலையங்கம் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்...' என்றேன். வாசனுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை நான் சொன்ன போது, மற்றவர்கள் ஒருவரையொருவர், ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டனர்.
'ஏன் கூடாது என்கிறாய்?' என்றார்.
'வேஜ் போர்டின் சிபாரிசுகள் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், அது உங்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே உள்ள சண்டை. விகடன் வாசகர்களுக்கு இதில் அக்கறை இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள், உங்கள் உதவி ஆசிரியருக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று அவர்களுக்கு தெரிந்து ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. பொதுஜன அபிப்பிராயத்தை திரட்ட வேண்டிய அவசியமும் இந்த பிரச்னையில் இல்லை...' என்றேன்.
'யூ ஆர் ரைட்...' என்று கூறியவர், சோபாவின் கைப்பிடியில் வைத்திருந்த தன் டவலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சட்டென்று எழுந்து நின்றார்.
அப்போது, சென்னையில், ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்குமான கிரிக்கெட் 'டெஸ்ட் மேட்ச்' நடந்து கொண்டிருந்தது.
அருகில் இருந்த உதவி ஆசிரியரிடம், 'இந்த வாரம் தலையங்கம் கிரிக்கெட் பற்றித்தான். ஆஸ்திரேலிய கங்காரும், இந்திய யானையும் என்று ஏதாவது எழுதுவியே... அப்படி ஒரு தலையங்கம் எழுதி, அச்சுக்கு அனுப்பி விடு. நான் அப்புறம் வந்து பார்த்துக் கொள்கிறேன்...' என்று சிரித்துக் கொண்டே கூறி, புறப்பட்டு விட்டார், வாசன்.

