
பா கே
அ லுவலகம்...
'டிவி'யில், செய்தி சானல் ஒன்றில், நம் பிரதமர் மலேஷியா நாட்டுக்கு சென்ற செய்தி படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
'மலேஷிய பிரதமர் அளித்த விருந்தின் போது, இசை குழு ஒன்று, எம்.ஜி.ஆர்., பாடலை பாடி, நடனமாடியதை இரு நாட்டு பிரதமர்கள் ரசித்ததை, 'டிவி'யில் பார்த்தீரா?' என்றவாறு வந்தமர்ந்தார், 'திண்ணை' நாராயணன்.
'மலேஷியா நாட்டின் பிரதமர், அன்வர் இப்ராஹிம், எம்.ஜி.ஆர்., பாடல்களுக்கு தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல், மலேஷியா, இன்னொரு தமிழ்நாடு என்றே சொல்லலாம். அங்கு, 22 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர்.
'மேலும், நம்மூர் திரைப்படங்கள் இங்கு, ரிலீசாகும் அதே நாளில் அங்கும் ரிலீசாகிறது. தமிழர்கள் மட்டுமல்லாமல், மலேஷிய மக்களும் தமிழ் சினிமாக்களை ரசித்து பார்க்கின்றனர். பல தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களும் அங்கு நடத்தப்படுகின்றன.
'திரைப்பட கலைஞர்களின், கலை நிகழ்ச்சிகளும் அவ்வப்போது, மலேஷியாவில் நடைபெறுகின்றன. மக்கள் பிரதிநிதியான, மலேஷியா நாட்டு பிரதமர், எம்.ஜி.ஆர்., ரசிகராக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை...' என்றார், லென்ஸ் மாமா.
'அக்காலத்தில், நம் அரசர்கள், கடல் தாண்டி, மலேஷியா, சிங்கப்பூர், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் தங்கள் ஆட்சியை விரிவுப்படுத்தியதால், அங்கெல்லாம் தமிழர்கள் குடியேறி விட்டனர் என்று சரித்திரத்தில் படித்துள்ளேன்...' என்றார், அருகிலிருந்த உ.ஆசிரியர் ஒருவர்.
'நீ சொல்வது முற்றிலும் உண்மை. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு அது...' என்று, 'திண்ணை' நாராயணன் சொல்ல ஆரம்பிக்க, 'வந்துட்டார்யா, தகவல் களஞ்சியம்...' என்று முணுமுணுத்தார், லென்ஸ் மாமா.
தொடர்ந்தார், நாராயணன்:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மலேஷியா நாட்டில் பூஜரங் பள்ளத்தாக்கு பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர், தமிழர்கள்.
இந்த, பூஜரங் பள்ளத்தாக்கு, இந்தியா - சீனா கடல்வழி பாதையின் இடையே, வர்த்தக மையமாக இருந்துள்ளது. நம் பண்டைய தமிழர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதை இது காட்டுகிறது.
இந்த தகவல்கள், பட்டினப்பாலை உட்பட மற்ற சங்க இலக்கிய பாடல்களிலும் காணப்படுகிறது. கி.மு., 6ம் நுாற்றாண்டிலிருந்து கி.பி., 3ம் நுாற்றாண்டு வரை, முந்தைய சோழர் ஆட்சி தமிழகத்தில் இருந்துள்ளது. அப்போது, பூஜரங் பள்ளத்தாக்கு ஒரு முக்கிய துறைமுக கேந்திரமாக செயல்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக கல்வெட்டுகளும் இங்கு கிடைத்துள்ளன; அதில், பல்லவ கிரந்த எழுத்துகள் காணப்படுகின்றன.
முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில், அதாவது, கி.பி., 600-630களில், அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டது தான், இந்த பல்லவ கிரந்த எழுத்து. ஆக, கி.பி., 5ம் நுாற்றாண்டிலேயே தமிழர்கள், மலேஷியாவில் வாழ்ந்துள்ளனர் என்பது நிரூபணமாகிறது.
தாக்குவா பா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, எட்டாம் நுாற்றாண்டை சார்ந்தது.
பல்லவ மன்னன், நந்திவர்மன் காலத்தில், பூம்புகாருக்கும், பூஜரங் பள்ளத்தாக்குக்கும் இடையே இருந்த வர்த்தக தொடர்பை இது காட்டுகிறது. தமிழர்களின் வர்த்தக தொடர்பு, தாய்லாந்து வரையில் இருந்ததற்கு சான்றாகவும் உள்ளது.
இன்றைய மலேஷிய இந்தியர்களில், 80 சதவீதம் பேர் தமிழர்கள். நாட்டின், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றனர், தமிழர்கள்.
இங்குள்ள, மொத்த தமிழர்களில், 22 லட்சம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தமிழ் பேச தெரிந்தாலும், 5 லட்சம் பேருக்கு மட்டுமே தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும். தமிழர் குழந்தைகள் படிக்க, முதல் தமிழ் பள்ளி, 1887ல் துவக்கப்பட்டது. இன்று மொத்தம், 523 பள்ளிகள் உள்ளன.
கடந்த, 1990ம் ஆண்டுக்கு பின், ரப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு, செம்பனை தோட்டங்களாக மாறின.
'மலேசிய நண்பன், தமிழ் மலர், நம் நாடு' போன்று, பல நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒரு தமிழ் நாளேடு, 70 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகிறது. காரணம், தமிழக செய்திகள் உடனுக்குடன் அதில் வெளியிடப்படுவது தான்.
மலேஷிய தமிழர்கள் இன்று அரசியல், தொழில், கல்வி மற்றும் ஊடகத்துறைகளில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர்.
அன்வர் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில், சரஸ்வதி கந்தசாமி என்ற தமிழர், துணை அமைச்சராக உள்ளார். ஆனந்த கிருஷ்ணன் என்பவர், நாடறிந்த பெரும் தொழில் அதிபர்.
- என்று கூறி முடித்தார், நாராயணன்.
'மணி... எம்.ஜி.ஆர்., நடித்த, இதயக்கனி படம் மீண்டும் டிஜிட்டலில், 'ரீ-ரிலீஸ்' செய்திருக்காங்க. இரண்டு டிக்கெட், 'ரிசர்வ்' செய்துவிட்டேன். சாயந்திரம் போவோம்...' என்றார், லென்ஸ் மாமா.
லென்ஸ் மாமாவோட படம் பார்க்க, மாமியே போகமாட்டாங்க. என்னை, கோர்த்து விடுகிறாரே... என்று தயங்கினேன்.
காரணம், திரையில் வரும் வசனங்களுக்கு எதிர் வசனம் பேசுவது, பாடல் காட்சி வந்தால், இவரும் சேர்ந்து உரக்க பாடுவது, சண்டை காட்சிகளில், பக்கத்தில் இருப்பவரை அடித்து துவைப்பது மற்றும் நகைச்சுவை காட்சிகளை கைதட்டி ரசிப்பதுமாக இருப்பார். மற்றவர்களுக்கு தொல்லையாக இருக்கும். எப்படி, 'அவாய்டு' செய்வது என்று யோசித்தேன், நான்.
ப
ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என, துல்லியமாக தெரியவேண்டுமெனில், அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள். கீழே உட்கார்ந்து, எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில், கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு, நுாறு.
தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து, துாக்கி விடும் நிலையில் இருந்தால், உடனே வக்கீலை வரவழைத்து, உயிலை எழுதி விடலாம்.
ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில், முதியவர்களை கீழே அமரவைத்து, எழ வைத்து ஆய்வு செய்தனர்.
கை, முட்டி என, எதுவும் தரையில் ஊன்றாமல் எழுந்தால், 0 பாயின்ட். ஒரு கை ஊன்றி எழுந்தால், ஒரு பாயின்ட். இரு கைகளை ஊன்றி எழுந்தால், 2 பாயின்ட்.
இப்படி ஒருவர் உட்கார்ந்து எழும், 'பிட்னஸை' கணக்கிட்டு, அதன்பின் அவர்களை ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்ததில் தெரிந்த விஷயம், பாயின்ட்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மரண, 'ரிஸ்க்' ஒவ்வொரு பாயின்டுக்கும், 21 சதவீதம் கூடுகிறது என்பது தான்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

