
எம்.வள்ளி, வீரபாண்டி: பாலியல் வன்கொடுமை பிரச்னை, தமிழகத்தில் மட்டும் தான் உள்ளதா...
உலகம் முழுவதும் உள்ளது; தமிழகத்தில் அதிகமாக உள்ளது!
எம்.சுப்பையா, கோவை: ஒரு காலத்தில் கோலோச்சி இருந்த உடுப்பி உணவகங்களில், தற்போது ஒன்றைக் கூட காணோமே...
'பாஸ்ட் புட்' கலாசாரம் பெருகி விட்டதால், இந்த நிலை!
கோ.குப்புசாமி, சங்கராபுரம்: காகத்திற்கு தினமும் காராபூந்தி போடுவீர்களா, அந்துமணி?
காராபூந்தி இல்லை; பிரெட் போடுவேன்!
பிரெட்டில் தண்ணீர் ஊற்றி பிசைந்து, தினமும் காலை, 6:20 மணிக்கு, வாசலுக்குப் போனால், கிட்டத்தட்ட, 100 காக்கைகள் அமர்ந்திருக்கும். அனைத்திற்கும் போட்டு விடுவேன்!
மகிழ்ச்சியான தருணம் அது!
ந.ஆனந்தகுமாரி, திண்டுக்கல்: 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, வெளிநாடுகளிலும் வாசகர் உள்ளனரா...
உலகம் முழுவதிலும் வாசகர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்தும் கேள்விகள், 'இ-மெயிலில்' வந்த வண்ணம் உள்ளன!
பி.மோகன் ராஜு, காஞ்சிபுரம்: 'வாட்ஸ் அப்'பில் வணக்கம் சொல்லும் நண்பர்களுக்கு, பதில் வணக்கம், 'வாட்ஸ் அப்'பில் சொல்வீர்களா...
அதிகாலை, 3:45 மணிக்கு ஒரு வாசகி, 'காலை வணக்கம்' போடுவார்; அவருக்கு, 4:00 மணிக்கு பதில் வணக்கம் போடுவேன்! 100 பேர் காலை, 5:00 மணிக்கு, வணக்கம் போடுவர்; அனைவருக்கும், அந்நேரத்திற்கே பதில் வணக்கம் போட்டு விடுவேன்; அனைத்தும், 'வாட்ஸ் அப்'பில்!
வி.சி.கிருஷ்ணரத்னம், சென்னை: மாணவர்கள், கூடுதலாக ஒரு மொழி படித்து தெரிந்து கொள்வதில், தமிழகத்தில் உள்ள சில தலைவர்களுக்கு என்ன தான் பிரச்னை?
மூன்றாவது மொழி அவசியமே; அதற்குண்டான வசதியை, ஆளும் அரசுகள் செய்து தருவதே நல்லது!
* ஆர்.சுப்பு, விருதுநகர்: 'தேர்தலில் அறிவிக்கப்படும் இலவசங்களால், மக்கள் வேலைக்குச் செல்ல விரும்பாமல், சோம்பேறிகளாகி விட்டனர்...' என, உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளதே...
தமிழகத்தில், இலவசங்களால் மக்கள் சுணங்கி விட்டதால், வட மாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதன் பாதிப்பை, நாம் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!
* ஆர்.ஹரிகோபி, புதுடில்லி: ஓ.பன்னீர்செல்வத்தை, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக செயல்பட வாய்ப்பளித்து பார்க்கலாமே... அ.தி.மு.க.,வை ஒருவேளை, அவர் கரை சேர்க்கலாம் அல்லவா...
அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டால் தான், அ.தி.மு.க., உருப்படும். பொதுச்செயலர் பதவி கிடைத்தால், கட்சியை வழிநடத்த, கைக்காசையும் சற்று செலவழிக்க வேண்டும். அது நடக்குமா?