
கொ.மூர்த்தி, தொட்டிவலசு, நாமக்கல் மாவட்டம்: 'காலை உணவுத் திட்டம் ஒரு சிறந்த சமூக முதலீடு...' என்கிறாரே, முதல்வர் மு.க.ஸ்டாலின்?
மிகச் சிறந்த திட்டம்! பசி இல்லாமல் இருந்தால், குழந்தைகளின் திறன் மற்றும் படிப்பு மேம்படும். சரியான முறையில் செயல்படுத்தினால், தி.மு.க., அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பது உறுதி!
* எஸ்.கே.ராமசாமி, ஈரோடு: இந்திய அளவில், பணக்கார முதல்வர்கள் பட்டியலில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதலிடத்தில் உள்ளாராமே...
சந்திரபாபு நாயுடு, தன் உண்மையான சொத்து விபரத்தை அளித்திருக்கிறார். மற்ற முதல்வர்கள், தங்கள் உண்மையான சொத்து விபரங்களை வெளியிட மாட்டார்கள் என்பது தான், சந்தேகமில்லாமல் தெரியுமே!
டி.ஜூலியட், கோயம்புத்துார்: 'தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில், காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக, மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன...' என்கிறாரே, அக்கட்சியின் மாநில செயலர்...
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் என்ற பெயரை மாற்றி, 'காதலர்கள் பாதுகாப்பு மையம்' என, பெயர் வைக்கும் நிலை உருவாகி விடும்.
* ப.சோமசுந்தரம், சென்னை: வட மாநில தொழிலாளர்களுக்கு இங்கே ஓட்டுரிமை வழங்கிவிட்டால், அவர்களின் ஓட்டுக்களை கவர, முதல்வரும், தி.மு.க.,வின் மற்ற தலைவர்களும் ஹிந்தி பேச கற்றுக் கொள்வர் தானே!
இங்கு சலுான்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களில், 95 சதவீதம் பேருக்கு, தமிழ் மிக நன்றாகவே புரிகிறது; பேசவும் செய்கின்றனர். தமிழில் பிரசாரம் செய்தால் நன்றாக புரிந்து கொள்வர்!
அ.அப்துல் அஜீஸ், மதுரை: உங்களுடைய உற்ற நண்பர், உ.பா., பிரியர் லென்ஸ் மாமாவை, அந்த பழக்கத்திலிருந்து திருத்த முயற்சிக்கவே மாட்டீர்களா?
பலமுறை சொல்லி விட்டேன்; இப்போது தான் திருந்தி வருகிறார். காலை இரண்டு முறை, மாலை இரண்டு முறை மட்டும், 'அங்கிள் ஜானி'யை கவனித்துக் கொள்கிறார்!
ஜெ.கண்ணன், சென்னை: பத்து ரூபாய்க்கு வாங்கும் பிஸ்கட் பாக்கெட்டில், தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதி, பிஸ்கட் தயாரிக்க உபயோகப்படுத்தப் பட்ட பொருட்கள், தயாரித்த நிறுவனத்தின் பெயர் போன்ற விபரங்கள் இடம் பெறுகின்றன. கோடிக்கணக்கில் செலவு செய்து போடப்படும் சாலைகளில், ஒப்பந்ததாரரின் பெயர், செலவு செய்யப்படும் தொகை, காலாவதியாகும் தேதி போன்ற விபரங்கள் அடங்கிய பலகையை வைக்கலாமே...
மிக நல்ல யோசனை! அந்தப் பலகையில் அவரது மொபைல் எண்ணையும் வெளியிட்டால், பொதுமக்கள் ஒப்பந்ததாரரை, 'பாராட்ட' வசதியாக இருக்கும்!
வெ.நாராயணன், சென்னை: ராகுல் நடைபயணத்தில், ஸ்டாலின் பங்கேற்பு ஏன்?
ராகுலுடன், பீஹார் சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டால், தமிழகத்தில் உள்ள பீஹாரிகள் தனக்கே ஓட்டு போடுவர் என, நினைத்து விட்டார் போலும்; அங்கும், தமிழிலேயே பேசியுள்ளார். மற்ற மொழிகளைத் தான், வேண்டாம் என்கிறாரே இவர்!
எம்.செல்லையா, சாத்துார்: 'தமிழக சகோதரிகளின் பிள்ளைகளுக்கு நான் தாய் மாமன்...' என, விஜய் பேசியுள்ளாரே...
வெரிகுட்! அப்படி எனில், தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும், குழந்தைகளும் இனி, விஜயை, 'அங்கிள், அங்கிள்' என அழைக்கப் போகின்றனர்!