
மஞ்சுதேவன், பெங்களூரு: ஜப்பான் நாட்டில், 100 வயதிற்கு மேல் உயிர் வாழ்பவர்கள், ஒரு லட்சத்திற்கும் மேல் இருக்கின்றனராமே?
ஆமாம்! அதற்கு, அவர்களது வாழ்க்கை முறையும், உணவு முறையும், உடல் உழைப்பும் தான் காரணம்! ஜப்பானில், சைக்கிளில் செல்லும் முதியவர்கள் மிக அதிகம். அதை, நானும், லென்ஸ் மாமாவும் ஜப்பானிலேயே நேரில் கண்டிருக்கிறோம். அது, நல்ல உடற்பயிற்சி அல்லவா!
* அ.ராஜாரகுமான், கம்பம்: சீனாவின் முன்னாள் அமைச்சர், 337 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்காக, அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரே...
இந்த தண்டனையை, நம் அரசியல்வாதிகளிடம் நடைமுறைப்படுத்தக் கூட வேண்டாம்; இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றப் போகிறோம் என்று சொன்னலே போதும்... பலரும் பயத்திலேயே திருந்தி விடுவர்!
எஸ். ரவிகுமார், சென்னை: தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை, அரசியல் கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளுக்கு தடை விதித்தால், பல உயிரிழப்புகளை தடுக்க முடியுமல்லவா?
அப்போதும் இத்தகைய கூட்ட நெரிசல் ஏற்படத்தான் செய்யும். எம்.ஜி.ஆர்., மற்றும் கருணாநிதி காலங்களில் நடந்தது போல், ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான ஒரு பெரிய திடலில், இத்தகைய கூட்டங்களை நடத்தினால், அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்!
* பா.சுமதி, சென்னை: வெளிநாட்டு முதலீடு, தமிழகத்திற்கு எவ்வளவு வந்துள்ளது என்று, வெள்ளை அறிக்கை கேட்டதற்கு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வெள்ளை காகிதத்தை மட்டும் காட்டினாரே...
முதிர்ச்சியே இல்லாத அமைச்சர். தொழில்துறை முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை தயாரித்தால், சிக்கி விடுவோம் என்ற பயத்தால் இப்படிச் சொல்லி விட்டாரோ... இவரெல்லாம் ஒரு அமைச்சராம்!
கோ.சு.சுரேஷ், கோவை: கூட்டம் அதிகமாகக் கூடும் என்று தெரிந்தும், பெற்றோர் தம் குழந்தைகளை, கூட்டத்திற்கு அழைத்துச் செல்வது நியாயமா?
கொஞ்சம் கூட நியாயம் இல்லை. குழந்தைகளுக்கு, 'ஹீரோ' என்றால் யார் என்று தெரியுமா அல்லது அங்கு நடப்பது தான் என்னவென்று புரியுமா? மக்கள் தான், கூட்ட நெரிசல் அசம்பாவிதங்களை எப்போதும் கவனத்தில் வைத்து, அத்தகைய இடங்களில் தாமும் செல்லக் கூடாது; குழந்தைகளையும் அழைத்துச் செல்லக் கூடாது!
ரா.ஆறுமுகம், சென்னை: அரசு, பல திட்டங்களை இன்னும் முடிக்கவில்லை; மத்திய அரசு வழங்கிய பணத்திற்கெல்லாம், முறையாக கணக்கும் கொடுக்கவில்லை. இனி இருக்கும் குறைந்தபட்ச ஆட்சிக் காலத்திற்குள், மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. இதற்கு பெயர் தான், 'திராவிட மாடல் அரசு' என்று நினைத்துக் கொள்ளலாமா?
கெட்டிக்காரர் நீங்கள், ஆறுமுகம்! கேள்வியிலேயே, பதிலையும் சொல்லி விட்டீர்கள்... என் வாசகராயிற்றே!
ப.சோமசுந்தரம், சென்னை: 'எங்கள் தலைவர் ராகுல் தமிழகத்திற்கு வந்தால், விஜயை விட அதிக கூட்டம் வரும்...' என்கிறாரே, காங்., தமிழக தலைவர், செல்வப் பெருந்தகை...
செம ஜோக்! ராகுலுக்கு இங்கு, 10 பேர் கூடினால் ஆச்சரியம்! தான் சொல்வது நடக்கவே நடக்காது என்பது, செல்வப்பெருந்தகைக்கே தெரியும்! சும்மா, 'அடித்து' விடுகிறார்.
எம். சுப்பையா, கோவை: பள்ளி மாணவர்களுக்கு, கட்டாயமாக ஒரு கைத்தொழிலையும் கற்றுக் கொடுக்க, தமிழக கல்வித் துறை முயற்சி எடுக்கலாமே?
இதைத் தான், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது; தமிழக அரசு பின்பற்ற மறுக்கிறது! மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றினால், உலக அளவில் நம் நாடு அனைத்து துறைகளிலும், நெ.௧ ஆக திகழும்!