
மு.ஆதினி, சேலம்: 'ஆளும் கட்சியினருக்கும் குறைகள் இருக்கின்றன...' என்று, தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் காசி முத்துமாணிக்கம் ஒப்புக் கொண்டிருக்கிறாரே...
காசி முத்துமாணிக்கம், சற்றே நேர்மையானவர். எம்.எல்.ஏ., சீட்டை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அவர், இந்த நேரத்தில் இப்படி பேசியிருப்பது, அவருக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை!
ஆர்.பிரசன்னா, திருச்சி: அறுபது ஆண்டுகால திராவிட ஆட்சியில், தமிழர்கள் எதில் முன்னேறி இருக்கின்றனர்?
'டாஸ்மாக்'கின் தீபாவளி விற்பனையை கவனித்தீர்களா, பிரசன்னா... அதன் பிறகுமா இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள்?
* ஜி.கலைவாணி, மறைமலை நகர், செங்கல்பட்டு மாவட்டம்: தங்கள் ஆட்சியில், பாலாறும், தேனாறும் ஓடுவது போலவும், மக்கள் அனைவரும் எந்த குறையுமின்றி மகிழ்ச்சியாக இருப்பது போலவும், ஆட்சியாளர்கள் செய்யும் விளம்பரத்தின் மூலம், மீண்டும், தி.மு.க., ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா?
அத்துடன், தி.மு.க., கொடுக்கும், 'பரிசுகளை'ப் பெற்றுக் கொண்டு, வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களித்தால், அவர்களே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நேரிடலாம்!
அதிரை பிறைசாகுல், சென்னை: 'உலகை, 150 முறை அழிக்கத் தேவையான குண்டுகள் எங்களிடம் உள்ளன...' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளாரே...
அமெரிக்க அதிபர் டிரம்ப், தினமும் ஏதோ ஒரு, 'உளறல் குண்டு' போட்டபடி தான் இருக்கிறார்; அவற்றை எந்த நாடும் பொருட்படுத்தப் போவதில்லை!
எ.எம்.முகம்மது ரிஸ்வான், சென்னை: 'எங்களுடையது வாரிசு அரசியல் அல்ல; நாட்டுக்கான எங்கள் தர்மம்' என்று, காங்., எம்.பி., பிரியங்கா சொல்லி இருக்கிறாரே...
ஆமாமாம்... இவர்களது, 'தர்மத்தில்' தான், வங்கதேசம் பிரிந்து சென்றது; காஷ்மீர் கொந்தளிக்கிறது; எல்லையில் சீனா வாலாட்டுகிறது; வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றம் காண முடியாமல் தவிக்கின்றன! இந்தியா வல்லரசாக நிமிர்ந்து நிற்கிறதா, சொல்லுங்கள், ரிஸ்வான்!
ஜி.ரவிச்சந்திரன், கடலுார்: 'அ.தி.மு.க.,வில், 53 ஆண்டுகளாக இருப்பவன் நான்; என்னை எப்படி ஒரு விளக்கம் கூட கேட்காமல் நீக்க முடியும்?' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுவது சரியா?
விதிமுறைகளை மீறி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி செயல்படுவது வருத்தத்துக்குரியதே! அதே சமயம், அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, செங்கோட்டையன் எடுக்கும் நடவடிக்கைகளும் சரிதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
* ஆர்.ஜெயபாரதி, சாத்துார்: 'கூட்டணி வைத்து, மூன்று-நான்கு சீட்கள் பெறுவதை, நாங்கள் விரும்பவில்லை. தமிழகத்தை ஆள்வதே எங்கள் இலக்கு...' என்று, நாம் தமிழர் கட்சி சீமான் கூறுகிறாரே... அவரால் முடியுமா?
தன் தொண்டர்களை, 'தம்பி' என்று அழைக்கும் சீமான், 'வந்தால் ராஜாவாக தான் வருவேன்...' என்று கூறுகிறார். அவரது, 'தம்பிகள்' சிதறிப் போகாமல் அதுவரை பொறுத்து இருந்தால் சரி!
அலிபாத்து ஷபின், கல்லிடைக்குறிச்சி: அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறாத நிலையில், கோவையில் கல்லுாரி மாணவியை கத்தி முனையில் கடத்தி, போதை ஆசாமிகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது, தமிழகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதே... இதற்கு என்ன தான் தீர்வு?
பெண் குழந்தைகளுக்கு, சி று வயது முதலே தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும்; மன தைரியத்தையும் வளர்த்து விட வேண்டும். மேலும், இரவு 11:00 மணிக்கு மேல், ஆள் அரவமற்ற பகுதியில் ஆண் நண்பருடன் ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. குடும்பத்தை விட்டு விடுதிகளில் தங்கிப் படிக்கும் பெண்கள், மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது!

