PUBLISHED ON : மே 17, 2026

வி.ராஜாமணி, திண்டுக்கல்: கடந்த, 1969லிருந்து தமிழகத்தில் முதல்வர் பதவி வகித்தவர் அனைவரும், அதிகாரிகளிடம், சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிந்ததா?
இங்கு பணியாற்ற வரும், வட மாநில அதிகாரிகள் தமிழில் பேசப் பழகி விடுகின்றனரே... முதல்வர்களுக்கு என்ன கவலை?
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி: முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவை பின்பற்றி, தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவையும், அம்மாநில மக்கள், 'அம்மா' என, அழைப்பது பற்றி...
'அம்மா என அழையுங்கள்...' என, கவிதாவே உத்தரவு போட்டதாகக் கேள்விப்பட்டேன். கொண்டை முதல் உடை வரை, ஜெயலலிதாவை பின்பற்றினாலும், ஜெயலலிதா போல ஆகிவிட முடியுமா என்ன!
மு.நாகூர், ராமநாதபுரம்: 'தரமில்லாத குடிநீர் கேன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்...' என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது குறித்து...
குடிநீர் கேன்களை நிரப்பி அனுப்பும் சிறிய நிறுவனங்களை நேரில் சென்று பார்த்தால், பெரும்பாலும் சுகாதாரமற்ற சூழலே உள்ளதை, கண்கூடாக பார்ப்பீர்கள், நாகூர். அப்போது, உங்களுக்கே இந்த அபராதம் சரி தான் என்று புரியும்!
எம்.ராஜேந்திரன், லால்குடி: 'தமிழ்நாட்டில், காமராஜர் ஆட்சி மீண்டும் வேண்டும்...' என, எல்லாரும் சொல்வது போல், 'கருணாநிதி ஆட்சி வர வேண்டும்...' என, யாரும் சொல்வதில்லையே...
காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும் தானே... சும்மா, 'ஜோக்' அடிக்காதீர்கள், ராஜேந்திரன்!
பா.அனுமந்த்ரா, சென்னை: 'ஜனநாயக கடமையை நிறைவேற்றத் தவறுபவர்கள், நாட்டின் சமூக பிரதிநிதியாக இருக்கும் தகுதியை இழக்க நேரிடும்...' என, கடுமையானதொரு நிபந்தனையை விதித்தால், எதிர்வரும் தேர்தல்களில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு ஏற்படுமே...
கடுமையான நிபந்தனை எல்லாம், நம் ஜனநாயக நாட்டில் எடுபடாது. சுதந்திரமாக, 'இவர் நேர்மையானவர்; இவர் ஆட்சி செய்தால், வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை...' எனச் சிந்தித்து, ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியுடன் ஓட்டுப் போடும் நிலை ஏற்பட்டால் மட்டுமே, நுாறு சதவீத ஓட்டுப்பதிவு சாத்தியம்!
* ஜே.செல்வா, கோத்தகிரி: பவானி சாகர் போன்ற அணைக்கட்டு பகுதிகளில், தண்ணீர் அளவு குறையும்போது, அதிலிருந்து வீணாக போகும் வண்டல் மண்ணை எடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்த விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆயிரம், 'கண்டிஷன்' போடுகின்றனரே... அது ஏன்?
எல்லாமே, அரசியல்வாதிகளின் காசு பார்க்கும் நோக்கம் தான் காரணம். அதிகாரிகள், விவசாயிகளிடம் பெற்று, அரசியல்வாதிகளிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டுமே!
ஜி.விஜயகுமார், கோவை: சினிமா பிரபல நடிகையர், ஏன் தொழில் அதிபர்கள் மற்றும் அமைச்சர்களின் மகன்களை திருமணம் செய்கின்றனர்? சாதாரண ரசிகனை திருமணம் செய்து கொள்ளக் கூடாதா?
சாதாரண ரசிகரின் சம்பாத்தியம், நடிகையரின், 'நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக்' செலவுக்கு கூட போதாதே!
* ஜெ.ரவிக்குமார், காங்கயம்: மீண்டும் லாட்டரி?
எக்காரணம் கொண்டும், தமிழ்நாட்டில் லாட்டரி வந்து விடவே கூடாது. லாட்டரியால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம் என்பதை, எல்லா கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: நடிகர், மன்சூர் அலிகான், லால்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, 101 ஓட்டுகள் பெற்று, 390 ஓட்டுகள் பெற்ற, 'நோட்டா'விடம் தோல்வி அடைந்து விட்டாரே...
எவ்வளவு வீரம் பாருங்கள் அவருக்கு! ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், தானும் ஒரு அரசியல்வாதி தான் என்று காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறார். இவரையும் நம்பி சிலர் ஓட்டு போட்டிருக்கின்றனரே... அது தான் பரிதாபம்! இவரைவிட, 'நோட்டா'வே 'பெட்டர்' என நினைத்த அந்த, 390 பேரை பாராட்டியே தீரணும்!
