PUBLISHED ON : ஜன 04, 2026

சின்னக் கவுண்டர் திரைப்படம், 1992ம் ஆண்டு, தைத்திருநாளில் வெளியானது. அப்போது, அது நிறைய தொழில் எதிரிகளை வெல்ல வேண்டியிருந்தது. போட்டிகளை சமாளிக்கும் அளவு, சின்னக் கவுண்டர் மிகப்பெரிய முதலாளிகள் தயாரித்த சினிமா அல்ல. அது, 'ஆனந்தி பிலிம்ஸ்' தயாரித்த படைப்பு.
ஆங்காங்கே குறைகள் இருந்தும், சின்னக் கவுண்டர் சரிந்து விழாமல் காப்பாற்றியதில், இசையமைப்பாளர், இளையராஜாவின் இசைக்கு பெரிய பங்கு உண்டு. இயக்குனர், ஆர்.வி.உதயகுமாரின் பாடல்வரிகளில், 'வானத்தைப் போல மனம் படைச்சு...' பாடல் கேட்போரை உருக்கியது.
சின்னக்கவுண்டர் படத்தை பிரமாதமாக விளம்பரப்படுத்தி, வினியோகம் செய்தது, ஜி.வி. பிலிம்ஸ். அப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. கேப்டனின் சினிமாக்களிலேயே அதிகபட்சமாக, 300 நாட்களை நோக்கி ஓடியது.
நேரிலும், பேசும் படம் இதழ் வாயிலாகவும், விஜயகாந்தை மனமார பாராட்டினார் இயக்குனர், எஸ்.ஏ.சந்திரசேகர். கிராமத்து சூழலில், இயக்குனர், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய இரண்டாவது படம், செந்தூரபாண்டி. அதற்கு காரணம் இருந்தது. 90களில், கிழக்கு வாசல், சின்னதம்பி, தேவர் மகன், சின்னக்கவுண்டர், எஜமான் மற்றும் பொன்னுமணி என, தொடர்ந்து நாட்டுப்புறக் கதைகளுக்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தன; அவையாவும் வெள்ளி விழாவும் கண்டன.
முன்னணி, 'ஹீரோ'கள் தங்களின் முகாமை கோலிவுட்டிலிருந்து, கோபிசெட்டிப் பாளையத்துக்கு மாற்றிக் கொண்டனர். அப்படியொரு வெற்றியை தன் மகன். விஜய்க்கும் தேடித் தர வேண்டும் என்று, விடாமுயற்சியோடு செயல்பட்டார் இயக்குனர். எஸ்.எ.சந்திரசேகரன்.
பாரதிராஜா மற்றும் பி.வாசு போன்ற அன்றைய இயக்குனர்களை, அவரே தேடிச் சென்று, மகன் விஜய்க்காக வாய்ப்பு கேட்டார், எஸ்.ஏ.சி.,
நாளைய தீர்ப்பு படத்தில், மகனை நாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர். எஸ்.ஏ.சி., சென்னையில், அப்படம், 50 நாட்களை தொட்டாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டார். எஸ்.ஏ.சி.
தோல்வியின் சுவடுகளில் தொலைந்து போகுமோ, மகன், விஜயின் எதிர்காலம். ஒருவன் அவனாகவே தனக்கு பிடித்தமான துறையில், கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவது வாழ்வின் முதல் பாகம் என்றால், அவன் பிள்ளைகளையும் அதேமாதிரி நிலைநிறுத்துவது இரண்டாம் பாகம்.
அந்த, 'அவையத்து முந்தியிருப்பச் செயலுக்காகவே' ரொம்பவும் மெனக்கெட்டார், எஸ்.ஏ.சி..
திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக, விஜயகாந்துக்கு போன் செய்தார்.
'விஜி எங்க இருக்கிங்க?'
'இப்ப வீட்ல தான், சார் இருக்கேன்...'
'விஜி இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உங்களப் பார்க்க வர்றேன்...'
'என்ன சார் இது. நீங்க வந்து என்னை பார்க்குறதா? இதோ நானே வந்துட்டேன், சார்...' என்றார். விஜயகாந்த்.
அதுவரையிலான தன் கஷ்டங்களை தலைமுழுகி விட்டு, எஸ்.ஏ.சி., வெளியே வரவும், அவரது அறையில், விஜயகாந்த் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
'என்ன சார் விஷயம்?'
'புதுப்படம் ஒண்ணு ஆரம்பிக்கப் போறேன். அதுல, என் மகன், விஜயை நடிக்க வைக்கலாம்ன்னு இருக்கேன். அவன் முதல் படம் சரியாப் போகல. அதனால, 'நெர்வஸா' இருக்கான்...'
என்றார், எஸ்.ஏ.சி.,
'முதல் படம்ங்குறதே தெரியாதபடிக்கு, பைட், டேன்ஸ்ன்னு, விஜய் நல்லா செஞ்சிருக்கிறதாகத்தானே நான் கேள்விப்பட்டேன்...'
'விஜய் சிறப்பா செஞ்சும், படத்தோட வசூல் நிலவரம் சரியில்லை, விஜி...'
'சார், அப்ப ஒண்ணு பண்ணுங்க. நீங்க என்னைய ஒரு பெரிய, 'ஹீரோ'வா வளர்த்து விட்டீங்க. உங்களுக்கு உதவறதுக்கு நான் எப்பவும் தயாரா இருக்கேன். விஜயை, 'ஹீரோ'வா வெச்சுப் படத்தை ஆரம்பிங்க. நான், 'கெஸ்ட் ரோல்'ல, அஞ்சு நாள் உங்களுக்கு நடிச்சுக் கொடுக்கறேன். நான் இருக்கேன்றதால, படத்துக்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும்.
'நீங்க எனக்கு பண்ணிக் கொடுத்த மாதிரி, நான், உங்களுக்கு செஞ்சி தர்றேன். உங்க மகன், விஜயை எப்படியாவது பெரிய நடிகனா ஆக்கிடலாம். நான் இருக்கேன், சார் அதுக்கு...' என்று கூறினார், விஜயகாந்த்.
கேப்டனின் பதிலில், நிரம்பி வழிந்தது நன்றி உணர்வு. உணர்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடி விட்டார், எஸ்.ஏ.சி., இனி, விஜய் பற்றிய கவலை தீர்ந்தது. ஆனால், விஜயகாந்த் - விஜய் இருவருக்குமான கதை குறித்து அதுவரையில் அவர் யோசிக்கவில்லை.
செந்துாரபாண்டி படத்துக்கு முன்னரே, நாட்டுப்புற பின்னணியில், விஜயகாந்த் மற்றும் நடிகை, விஜயசாந்தி நடிக்க, நெஞ்சினிலே துணிவிருந்தால் படம், எஸ்.ஏ.சி.,யின் இயக்கத்தில் வெளிவந்திருந்தது. மகனுக்காக, பொள்ளாச்சியில் சுற்றி வந்தார். எஸ்.ஏ.சி., 'அவுட்டோர் லொகேஷன்' முடிவானது. அதன் பிறகே, கதை, திரைக்கதை தீர்மானத்துக்கு வந்தது.
ஆச்சி மனோரமாவின் தேதிகளை முன்கூட்டியே வாங்கி விட்டனர். ஆனாலும், மனதுக்குள் ஓர் நமைச்சல். திரைக்கதையில், விஜயகாந்தின் இருப்பு குறைவாகவே இருந்தது.
மீண்டும்,
விஜயகாந்தை வற்புறுத்தி, கூடுதல் தேதிகள் வாங்கியாக வேண்டிய கட்டாயம்.
'நீங்க விஜய்க்காக ஒரு கதை பண்ணச் சொன்னீங்க. நான் அதுல உங்களுக்கு, ஐந்து நாள் மட்டுமே ஒதுக்கி, நீங்க அதை நடிச்சி கொடுத்தா உங்க ரசிகர்கள் ஏமாந்து போவாங்க. அது, இன்னமும் அசிங்கமான தோல்வியில போய் முடியும். அதனால, மேற்கொண்டு நீங்க, 25 நாட்கள் ஒதுக்கி கொடுத்தா போதும். அது, இப்ப உங்களால முடியுமா? யோசனை பண்ணி சொல்லுங்க. இல்லன்னா நீங்க இல்லாம இப்போதைக்கு தனியா, விஜயை மட்டும் வெச்சி படம் எடுக்கட்டுமா?' என்று கேட்டார், எஸ்.ஏ.சி.,
'சார், நீங்க தப்பா நினைக்கலன்னா ஒண்ணு சொல்றேன். நீங்க எனக்காக ஆறு மாசம் காத்திருக்க முடியுமா? எப்படியாவது நீங்க கேட்கிற மாதிரி மொத்தமா ஒரு மாசத்தை உங்களுக்காக ஒதுக்கித் தரேன். நீங்க இல்லாம நான் இல்ல. நான் ஒவ்வொரு முறை விழும்போதும், என்னை மேல கை துாக்கி விட்டவர் நீங்க. அந்த நன்றியை எப்பவும் நான் மறக்க மாட்டேன். நீங்க சொல்லி, நான் தட்டிட்டதா நினைக்காதீங்க. நாம கண்டிப்பா மறுபடியும், விஜய்க்காக சேர்ந்து, 'வொர்க்' பண்றோம்...' என்றார், விஜயகாந்த்.
பிறகு, என்ன நடந்தது?
தொடரும்
- பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தொலைபேசி எண்: 7200050073

