PUBLISHED ON : ஜன 25, 2026

தயாரிப்பாளர் காஜா மொய்தீன் கொடுத்த, 'கேரவனை' பார்த்ததும் கோபம் அடைந்தார், விஜயகாந்த். 'பின்ன என்ன சார். நான் இங்கே உழைக்க வந்திருக்கேனா, ஓய்வெடுக்க வந்திருக்கேனா, கேரவனாம் கேரவன். யாருக்கு வேணும் உங்க, 'கேரவன்!' என் கண்ணுல படாம உடனடியா இந்த ஏரியாவை விட்டு, துாரமா எடுத்துட்டு போங்க மொதல்ல...' என்று கடிந்து கொண்டார், விஜயகாந்த்.
நெ றஞ்ச மனசோடு, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்கி கொடுத்தார், விஜயகாந்த்.
நடிகர் சங்கத்துக்கு இடம் வாங்கப் பணம் போட்டவர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன், ஏவி.எம்., ஸ்டுடியோ அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியார் மற்றும் தேவர் பிலிம்ஸ் அதிபர் சாண்டோ சின்னப்பா தேவர்.
கடந்த, 1971ல், நடிகர் சிவாஜி கணேசன் அதன் தலைவராக வர வேண்டும் என்று விரும்பினார், எம்.ஜி.ஆர்., தேர்தல் நடத்தி தன்னை தலைவராக்குவதில், சிவாஜிக்கு உடன்பாடு இல்லை. 'எல்லாரும் என்னை ஆதரித்தால் அந்தப் பதவியை ஒப்புக் கொள்கிறேன்...' என்றார். அப்படியே நடந்தது. நடிகர், வி.கே.ராமசாமி, பொருளாளராகவும் நடிகர், மேஜர் சுந்தர்ராஜன், செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.
'நடிகர் சங்கத்துக்கு தலைவரானால், கலைஞர்களுக்கு சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால், நடிகர் சங்கத்துக்காக ஒரு கட்டடமும், நாடக அரங்கமும் கட்ட வேண்டும் என்று நினைத்தேன். மேலும், வசதியில்லாமல் இருக்கும், நடிகர், நடிகையர் தங்குவதற்கு வீடுகள் கட்ட வேண்டும். அவர்கள் சாப்பிடுவதற்கு, 'கேன்டீன்' ஒன்று அமைக்க வேண்டும் என்றெல்லாம் விரும்பினேன்.
'அதற்காக வங்கியில், கொஞ்சம் கடன் வாங்க வேண்டி இருந்தது. நடிகர் சங்கம் மூலம் வரும் வருமானத்தை வைத்து கடனை அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தேன். தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, தெலுங்கு நடிகர், ஏ.நாகேஸ்வரராவ், கன்னட நடிகர், ராஜ்குமார் என்று நிறைய பேர் என்னுடன் இருந்தனர். அந்த தைரியத்தில் வங்கியில் கடன் வாங்கி, தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை கட்டினேன்.
'கட்டடம் கட்டி முடிந்தவுடன், என்னை எப்படி வெளியேற்றுவது என்று, சிலர் திட்டம் போட்டனர். நானும், ஒதுங்கி கொண்டேன். அன்றிலிருந்து நடிகர் சங்கம் பக்கமே செல்லவில்லை...' என்று வருத்தத்துடன் கூறியிருந்தார், சிவாஜி.
கடந்த, ஆக., 29, 1979ல், நடிகர் சங்கத்துக்கான கட்டடம் அன்றைய தமிழக முதல்வர், எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்டது. அதில், சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கமும், சாண்டோ சின்னப்பா தேவர் திரையரங்கமும் இடம் பெற்றன. அன்றைக்கு அதற்காக செலவான தொகை மொத்தம், 22 லட்சம் ரூபாய்.
அதற்கு பின், 'கடன் எப்படி, யாரால், ஏன் வந்தது...' என்பது பற்றி பொருளாளர், நடிகர், வி.கே.ராமசாமி எழுதியது...
'கட்டடம் கட்டும்போது ஒரு செங்கல், ஒரு துளி மணல் வீணானால் கூட, சிவாஜி கவனித்து கேட்பார். நடிகர் சங்கத்துக்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஆனால், தமிழக அரசோ, ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே கடனாக கொடுத்தது.
'மீதிப் பணத்தை கேட்டு முதல்வர், எம்.ஜி.ஆரிடம் நடையாய் நடந்தோம். 'நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். மீதியை அடுத்த நிர்வாகம் வந்து அடைத்துக் கொள்ளட்டுமே...' என்றார், எம்.ஜி.ஆர்., நாங்கள் புரியாமல் பார்த்தோம்.
'புரியலையா? நீங்க கடனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பேசாம நடிகர் சங்கத்துக்கு தேர்தல் வைங்க. அடுத்த நிர்வாகம் வரும். அப்பப் பார்த்துக்கலாம்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்தார், சிவாஜி.
மதுவிலக்கை ரத்து செய்து, இலவச சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
'அப்பனுக்கு சாராயம், பிள்ளைக்கு சத்துணவா...' என்று மேடையில் பேசினார், சிவாஜி. அதை, எம்.ஜி.ஆர்., தன்னை தாக்குவதாக எடுத்துக் கொண்டார்.
'சிவாஜி இப்படி பேசலாமா? அவரே இப்படி என்னைக் குறை சொன்னால் என்ன அர்த்தம்?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.,
நடிகர், எஸ்.எஸ்.ராஜேந்திரனை அடுத்து, நடிகர், ராதாரவி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இடையில் ஒரு மாமாங்கம் கடந்து விட்டது. நடிகர் சங்க கடன் பூதாகரமாக பெருகியிருந்தது.
தனக்கு அடுத்து, விஜயகாந்த் தலைவராக வேண்டும் என்பதில், விடாப்பிடியாக இருந்தார், ராதாரவி.
'ரவி, நீயும் எங்கூடவே இருக்குறதா இருந்தா, நான் தேர்தல்ல நிக்கிறேன்...' என்றார், விஜயகாந்த்.
பால்ய வயதிலிருந்தே, விஜயகாந்துக்கு தலைமைப் பண்பு ரத்தத்தில் ஊறியிருந்தது.
தலைவரானதும், தான் குடியிருக்கும் கோவிலாக நடிகர் சங்கத்தை மாற்றினார். சென்னையில் இருந்தால், 'ஷூட்டிங்' முடிந்ததும், அடுத்த நிமிடம், சென்னை தி.நகரில் இருக்கும் ஹபிபுல்லா சாலைக்கு கார் பறக்கும்.
அங்கு யாரும் மது அருந்தக் கூடாது என்று தடை செய்தார். இரவு நேரமானாலும் சக கலைஞர்களின் குறைகளை தீர்க்காமல் அவர் புறப்பட்டு சென்றது கிடையாது. அவருக்கு, எல்லாரும் சமம். உள்ளூர், வெளியூர் நாடக நடிகர்களின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்து கொண்டு, அவை தீர நடவடிக்கை எடுத்தார்.
அப்போது, தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார் நடிகர், சரத்குமார். நடிகர் சங்கத்தில் அரசியலுக்கு இடமில்லாமல் பார்த்து கொண்டார், விஜயகாந்த். தன்னை விட அதிகம் கற்றவரான, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வல்லவரான, சரத் மீது, விஜயகாந்துக்கு தனிப்பாசம் உண்டு. எம்.பி., ஆன அவரைக் கொண்டு நடிகர் சங்க கடனை எப்படியாவது அடைத்தாக வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார்.
வங்கியின் தலைமை அலுவலகம் புதுடில்லியில் இருந்தது. வங்கியில் சென்று பேசினார், சரத்குமார். வங்கி முடிந்தவரையில் வட்டியைக் குறைத்தது. அப்படியும் முழுக் கடனையும் அடைக்க முடியாமல் விழி பிதுங்கியது, விஜயகாந்துக்கு.
பொறுத்து பொறுத்து பார்த்த வங்கி, ஜப்திக்கு ஆணையிட்டது. நடிகர் சங்க கட்டடம் பறிபோகும் பதற்றமான நிலை. நிலை கொள்ளாமல் நிர்கதியாக நின்றார், விஜயகாந்த்.
குஷால்தாஸ் கார்டனில், வாஞ்சிநாதன் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, பட அதிபர், காஜா மொய்தீன் அங்கு சென்றபோது, விஜயகாந்த், ஜப்தி குறித்த கவலையை பத்திரிகை தொடர்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். காஜா மொய்தீனும் அதில் கலந்து கொண்டார்.
'நாளைக்கு தான் கடைசி நாள். அதுக்குள்ளாற பணத்தைக் கட்டியாகணும். இல்லேன்னா மறுநாள் விடிஞ்சதும், ஜப்தி பண்ணிருவாங்க...' என்றார், விஜயகாந்த்.
பிறகு என்ன நடந்தது?
- தொடரும் பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073

