பிரமாண்ட நடிகரான, சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, அமரன் படம், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்ததால், புறநானுாறு என்ற அவரது, 25வது படத்தை, 150 கோடி ரூபாயில் தயாரிக்கின்றனர்.
குறிப்பாக, 1965 காலகட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக, ஜெயம் ரவி நடிக்கிறார். இன்னும் சில தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள நடிகர்களையும் இந்த படத்தில் இணைத்து, சிவகார்த்திகேயனின் இந்த படத்தை, 'பான் இந்தியா' படமாக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார், இயக்குனர் சுதா கொங்கரா.
சினிமா பொன்னையா
ஒரே பாட்டில், மூன்று படங்களை தட்டி தூக்கிய ஸ்ரீ லீலா!
தெலுங்கில், ஸ்ரீலீலா நடித்த படங்கள், 'பிளாப்' ஆகி வந்த நிலையில், அல்லு அர்ஜுன் நடித்த, புஷ்பா-2 படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாட்டு, 'சூப்பர் ஹிட்' அடித்த நிலையில், தற்போது, மூன்று தெலுங்கு படங்களை கைப்பற்றி இருக்கிறார், ஸ்ரீலீலா.
மேலும், தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்த போதும், குத்து பாடலுக்கும் நடனமாடி இளவட்ட ரசிகர்களை திக்கு முக்காட வைப்பதற்கும் சம்மதம் தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன் படக்கூலியையும் கோடிகளில் சொல்லி அடிக்க துவங்கி இருக்கிறார், ஸ்ரீ லீலா.
— எலீசா
அதிர்ச்சி தோல்விக்கு பிறகு, சூரிய எடுத்த முடிவு!
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, 'ஹீரோ'வாக நடித்த, விடுதலை படம் வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு அவர் நடித்த, கருடன் மற்றும் கொட்டுக்காளி படங்கள் தோல்வியை கொடுத்தன.
இதனால், அதையடுத்து நடிக்க இருந்த சில, 'கமர்ஷியல்' படங்களை ஓரங்கட்டி விட்ட சூரி, 'என்னை மனதில் வைத்து புதிதாக மாறுபட்ட கோணத்தில் கதை உருவாக்குங்கள். அந்த கதைகள், ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதியக் கூடிய அளவுக்கு உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்...' என்று சில இயக்குனர்களிடம் தனக்காக கதை எழுதுமாறு கூறி வருகிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தாரா நடிகை தன்னுடைய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி தான் பேசும், 'டயலாக்' விஷயத்திலும் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறார். குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில், 'ரிகர்சல்' பார்க்கும் போது, 'இது மாதிரி, 'டயலாக்'கை நான் பேச மாட்டேன்...' என்று, அம்மணி அடம் பிடிப்பதால், 'டென்ஷன்' ஆகின்றனர், இயக்குனர்கள்.
இதையடுத்து, 'படப்பிடிப்பு தளங்களுக்கு வந்த பின், அப்படி பேச மாட்டேன், இப்படி பேச மாட்டேன் என்று தேவையில்லாமல், 'மக்கர்' பண்ணக் கூடாது...' என்று, தாரா நடிகையிடம் முன்கூட்டியே, 'கண்டிஷன்' போட துவங்கி இருக்கின்றனர், சில இயக்குனர்கள்.
சினி துளிகள்!
* அன்னபூரணி படத்தின் தோல்வி காரணமாக அடுத்தபடியாக, நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்ற படம், படப்பிடிப்பு முடிந்தும், வியாபாரம் ஆகாமல் கிடப்பில் உள்ளது.
* டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில், சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளார், சிம்ரன்.
அவ்ளோதான்!

