
'சென்டிமென்ட் சீன்'கள் கேட்கும், விஜய் சேதுபதி!
சமீப காலமாக, 'ஆக்ஷன்' கதைகள் பக்கம் திரும்பினாலும், அம்மா, தங்கை, 'சென்டிமென்ட்' காட்சிகள், தன் படங்களில் இடம்பெற வேண்டும் என, இயக்குனர்களிடம் கோரிக்கை வைக்கிறார், விஜய் சேதுபதி.
குறிப்பாக, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்க கூடியது, 'சென்டிமென்ட்!' எனவே, 'ஆக்ஷன்' மற்றும் காதல் கதைகளில் நடித்தாலும் கூட, அந்த கதையோடு கலந்த, மனதை நெகிழ வைக்கக் கூடிய அளவுக்கு உருக்கமான, 'சென்டிமென்ட்' காட்சிகளை கொண்டு வந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறார், விஜய் சேதுபதி.
சினிமா பொன்னையா
த்ரிஷா - சிம்பு 'ரொமான்ஸ் மேஜிக்!'
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின், தக்லைப் படத்திலும், 'ரொமாண்டிக்' வேடத்தில், சிம்புவுடன் நடித்துள்ளார், த்ரிஷா.
'இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் இடையே, 'ரொமான்ஸ் மேஜிக்'கே நடந்துள்ளது. இன்றைய இளவட்டங்கள், தாங்கள் செய்யப் போகும், 'ரொமான்ஸ்'க்கு இதை முன்மாதிரியாக எடுத்துக் கொள்வர்.
'இந்த படத்தில் நான் நடித்துள்ள, 'ரொமான்டிக்' காட்சிகளை பார்த்துவிட்டு, அடுத்து காதல் கதைகளில் நடிப்பதற்கு, என்னை தேடி அதிக வாய்ப்புகளும் வரும்...' என்கிறார், த்ரிஷா.
— எலீசா
'செக் போஸ்ட்'டை அகற்றிய, பிரியங்கா மோகன்!
கன்னட சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்து, டாக்டர், டான் மற்றும் கேப்டன் மில்லர் என, பல படங்களில் நடித்த, பிரியங்கா மோகன், 'கிளாமர்' விஷயத்தில் தொடர்ந்து கட்டுப்பாடு விதித்து வந்தார்.
பாடல் காட்சிகளில் அப்படி நடிக்கவும், 'செக் போஸ்ட்' வைத்ததால், இயக்குனர்கள் மத்தியில் அவர் மீது அதிருப்தி நிலவியது. அதையடுத்து, பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன.
இதையடுத்து, தற்போது அந்த, 'செக் போஸ்ட்'டை உடைத்து, தொடை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, 'கமர்ஷியல்' பட இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார், பிரியங்கா மோகன்.
எலீசா
'ஹீரோயிசத்'துக்காக தாடியை, 'மெயின்டைன்' பண்ணும், சூரி!
விடுதலை படத்திற்கு பின், தாடி வைத்து, தோற்றத்தை மாற்றி காண்பித்து வரும் சூரி, அதை தன், 'ஹீரோ' அடையாளமாக ஆக்கிவிட்டார்.
'இந்த தாடி தான், என் முகத்தில், 'மெச்சூரிட்டி'யை காட்டுகிறது...' எனக் கூறும் சூரி, தன்னிடத்தில் புதிதாக கதை சொல்லும் இயக்குனர்களிடம், 'எக்காரணம் கொண்டும் தாடியை மட்டும் எடுக்க சொல்லாதீர்கள். அதை எடுத்தால் என்னுடைய, 'ஹீரோயிசம்' போய்விடும்...' எனவும் கேட்டுக் கொள்கிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தற்போது, நான்காவதாக ஒரு படத்தை இயக்கி நடித்து வரும் சுள்ளான் நடிகர், தல நடிகரை வைத்து படம் இயக்குவதற்காக அவரை சந்தித்து, ஒரே வரியில் கதையை சொல்லி இருக்கிறார்.
'இந்த ஒன் லைனில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால், மொத்த, 'ஸ்கிரிப்டை'யும் தயார் செய்து, காட்சி வாரியாக சொல்ல வேண்டும். அப்போதுதான் இந்த கதையில் நடிப்பது பற்றி யோசிப்பேன்...' என, சுள்ளான் நடிகருக்கு, 'ஷாக்' கொடுத்திருக்கிறார், தல நடிகர்.
சக நடிகர் என்பதால், தல நடிகரிடம் எளிதில், 'கால்ஷீட்' வாங்கி விடலாம் என சென்ற, சுள்ளான் நடிகர் அதிர்ச்சியுடன் திரும்பி இருக்கிறார்.
சினி துளிகள்!
தெலுங்கில், ரங்டே என்ற படத்தில், நடிகர் நிதினுடன் இணைந்து நடித்த, கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தெலுங்கு இயக்குனர், சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள, குபேரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளில் வெளியாகிறது.
சித்தா மற்றும் மிஷன் சேப்டர் 1 படங்களில் நடித்த மலையாள நடிகை, நிமிஷா சஜயன், தன் சொந்த ஊரான கொச்சியில் வீடு ஒன்று பிரமாண்டமாக கட்டி வருகிறார்.
திருமணத்திற்கு பின், கதாநாயகி வாய்ப்புகள் இல்லாமல், ‛கேரக்டர் ரோல்'களில் நடித்து வருகிறார், நடிகை காஜல் அகர்வால். தற்போது தெலுங்கில், ராம்சரணுடன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார்.
அவ்ளோதான்!

