
கமலஹாசனுக்கு புது பொறுப்பு!
தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும், உலக அளவிலான நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார், கமலஹாசன். அடுத்த ஆண்டு நடைபெறும், 98வது ஆஸ்கர் விருது விழாவில் பரிசு பெறக் கூடிய படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக கமலஹாசனுக்கு, ஆஸ்கார் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து, இந்திய திரைக்கலைஞர்கள் பலரும் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வரும் இந்நேரத்தில், 'இந்த பெருமை மற்றும் அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல. என்னை வடிவமைத்த ஏராளமான படைப்பாளிகளுக்கு சொந்தமானது...' என்கிறார், கமலஹாசன்.
— சினிமா பொன்னையா
'டாப் ஹீரோ'களுக்கு கல்லெறியும், மீனாட்சி சவுத்ரி!
விஜய் ஆன்டனியுடன், கொலை, விஜயுடன், கோட் படங்களில் நடித்த, மீனாட்சி சவுத்ரிக்கு அதன் பின், தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. பின்னர் தெலுங்கில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அவர் நடித்த, லக்கி பாஸ்கர் படம், 'சூப்பர் ஹிட்' அடித்தது. தற்போது, தெலுங்கில் அவர், 'பிசி' ஆகி விட்டார்.
மேலும், தமிழில் மீண்டும், முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து கல்லெறிந்து வருகிறார், மீனாட்சி சவுத்ரி. தற்போது தான், 'டூ பீஸ்' நடிகையாக உருவெடுத்து இருப்பதாகவும், 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார், மீனாட்சி சவுத்ரி.
— எலீசா
மனைவியுடன் சேர்ந்து, 'சைடு பிசினஸ்' ஆரம்பித்த, மாதவன்!
தமிழ், ஹிந்தி என, பல மொழிகளிலும் நடிகர் மாதவன் நடித்து வரும் நிலையில், அவரது மனைவி, சரிதா, 'பேஷன் டிசைனர்'ஆக இருக்கிறார். மாதவன் நடித்த பல படங்களில் அவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், மாதவனும், அவரது மனைவி சரிதாவும் சேர்ந்து, தற்போது சொந்தமாக ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம், உலக அளவில் பல நிறுவனங்களுக்கு நவீன ஆடைகளுக்கான, 'டிசைன்'களை உருவாக்கிக் கொடுத்து, தங்களது, 'பிசினசை' விரிவுபடுத்த உள்ளனர்.
— சி.பொ.,
சமந்தாவை, 'டென்ஷன்' ஆக்கும், ஸ்ரீ லீலா!
தெலுங்கில், அல்லு அர்ஜுன் நடித்த, புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு அதிரடி குத்தாட்டம் போட்டிருந்தார், சமந்தா. அதையடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் தனக்கு குத்தாட்டமாட வாய்ப்பு வரும் என, எதிர்பார்த்திருந்த நிலையில், ஸ்ரீலீலா இடையில் புகுந்து தட்டிப் பறித்தார்.
அதோடு, நிறுத்திக் கொள்ளாமல், சமந்தாவுக்கு வர இருந்த, புதிய தெலுங்கு பட வாய்ப்பையும், தன் பக்கம் திருப்பி விட்டார், ஸ்ரீ லீலா. இதனால், கடும் கொந்தளிப்பில் இருந்து வரும், சமந்தா, அவரது நடிப்பு, நடனத்தின் மைனஸ்களை வெளிப்படையாக பேசி, ஸ்ரீ லீலாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
— எலீசா
ஜப்பான் வீடியோ கேமில், இயக்குனர் ராஜமவுலி!
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், கிடியோ கொஜிமா. 'கேம் டெவலப்ர்' ஆன இவர் உருவாக்கிய, 'டெத் ஸ்ட்ராண்டிங்' என்ற உலகப் புகழ்பெற்ற வீடியோ கேமின் முதல் பாகத்தில், அமெரிக்க நடிகர் நார்மண் ரீடஸ், பிரெஞ்ச் நடிகை, லீ சீடெக்ஸ் ஆகியோரை கதாபாத்திரங்களாக வடிவமைத்திருந்தார்.
அதையடுத்து, இந்த கேமின் இரண்டாம் பாகத்தில், பாகுபலி இயக்குனர், ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா ஆகிய இருவரையும் முக்கிய கதாபாத்திரங்களாக வடிவமைத்து, உலக அளவில், ராஜமவுலியையும் அவரது மகனையும் மேலும் பிரபலப்படுத்தி விட்டுள்ளார், கிடியோ கொஜிமா.
— சினிமா பொன்னையா
கருப்புப்பூனை!
தன், 50-வது படத்தை முதலில் தயாரிப்பதாக சொன்ன உலக நடிகர், பின்னர் பின்வாங்கி விட்டதால், தானே அந்த படத்தை தயாரித்து நடித்துக் காட்டுவதாக கூறி வந்தார், வம்பு நடிகர். ஆனால், ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவரான அவரது தாடிக்கார தந்தைகுலம், 'இப்போது முதலீடு செய்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால், அவசரப்பட்டு படம் தயாரித்து, நஷ்டத்தை சந்திக்காதே...' என, வம்பு நடிகரை எச்சரித்தார்.
இதையடுத்து, 'என் படத்தை நானே தயாரித்து நடித்துக் காட்டுகிறேன்...' என, உலக நடிகரிடம் சவாலாக பேசி வந்த, வம்பு நடிகர், இப்போது சத்தம் இல்லாமல் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
சினி துளிகள்!
தக்லைப் படத்தை அடுத்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தன், 51வது படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார், சிம்பு.
மாமன் என்ற படத்தை அடுத்து, கதாநாயகனாக மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார், சூரி. அதையடுத்து இயக்குனர், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார்.
அவ்ளோதான்!