தாதாக்களாக நடிக்கும், ரஜினி - கமல்!
லோ கேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில், 45 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கப் போகின்றனர். தாதா பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அவர்கள் இரண்டு பேருமே எதிரும் புதிருமான தாதாக்களாக நடிக்கின்றனர். முக்கியமாக நண்பர்களாக இருந்த இவர்கள் தனித்தனியே பிரிந்து, இரண்டு தாதாக்களாக உருவெடுப்பது மற்றும் அவர்கள் இருவரும் அதிரடியாக மோதிக்கொள்ளும் ஒரு மிரட்டலான சண்டை காட்சியும் இப்படத்தில் இருப்பதாக சொல்கிறார், லோகேஷ் கனகராஜ்.
சினிமா பொன்னையா
வடசென்னை பெண்ணாக நடிக்கும், சாய் பல்லவி!
வெ ற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், சாய் பல்லவி. இந்த படத்திற்காக பக்கா வட சென்னை பெண்ணாக மாறப் போகும், சாய் பல்லவி, சென்னை தமிழ் பேசுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார். அதோடு, இதுவரை தான் நடித்திராத அளவுக்கு, வடசென்னை லோக்கல் பெண்ணாக படத்தில், முழுமையாக தன்னை வெளிப்படுத்தவும் தயாராகி வருகிறார், சாய் பல்லவி.
— எலீசா
புதுவரவு இயக்குனர்கள் பக்கம் திரும்பிய, த்ரிஷா!
மு ன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த, த்ரிஷா, அப்படி நடித்த படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டதால், சமீப காலமாக, புதுவரவு இயக்குனர்கள் பக்கம், 'யு-டர்ன்' போட்டுள்ளார். அதோடு, இன்னும் நிறைவேறாத ஆசைகளாக இருக்கும் சில முக்கிய கதாபாத்திரங்களையும் அவர்களிடம் பட்டியலிட்டு, அதுபோன்ற வேடங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு தருமாறும் கோரிக்கை வைத்து வருகிறார்.
— எலீசா
மீண்டும் பிச்சைக்காரனாகும், விஜய் ஆன்டனி!
வி ஜய் ஆன்டனியின் கேரியரில், பிச்சைக்காரன் படம் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது மீண்டும் அதே, சசி இயக்கத்தில், பிச்சைக்காரன் பாணியில், நுாறு சாமி என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். இதில், பிச்சைக்காரன் படத்தில் சொல்லப்படாத இன்னொரு கதையை கையில் எடுத்திருக்கிறார். சமீபகாலமாக தான் நடிக்கும் படங்கள் எல்லாமே தோல்வி அடைந்து வரும் நிலையில், இந்த பிச்சைக்காரனை மலைபோல் நம்பியுள்ளார், விஜய் ஆன்டனி.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
பாலிவுட் பாணியில் கோலிவுட்டில், 'மிட்நைட் பார்ட்டி' கலாசாரத்தை நடத்தி வரும், பீஸ்ட் நடிகை, ஆரம்பத்தில் இளவட்ட, 'ஹீரோ'களை மட்டுமே உபசரித்து வந்தார். ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தற்போது இளவட்ட இயக்குனர்கள் பக்கம் திரும்பி இருக்கிறார், நடிகை. குறிப்பாக தன்னிடம் அவர்கள் கதை சொல்ல வரும்போதே, 'பார்ட்டி' கொடுத்து அனுப்பும் நடிகை, 'இது ஆரம்பம் தான். படத்துக்கு, 'புக்' பண்ணி பாருங்கள், என்னுடைய கவனிப்பே வேற மாதிரி இருக்கும்...' என்றும் சொல்லி இளவட்டங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார், பீஸ்ட் நடிகை.
சினி துளிகள்!
* விஜயின், ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள மும்பை நடிகை, பூஜாஹெக்டே, அடுத்தபடியாக, ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும், காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார்.
* தனக்கான, 'ஹீரோ' வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தற்போது, ராகவா லாரன்ஸ் நடித்து வரும், பென்ஸ் என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார், மாதவன்.
அவ்ளோதான்!