PUBLISHED ON : பிப் 23, 2025

ஒருமுறை காட்டுப் பன்றி, முயல் என, பல விலங்குகள் அம்பால் தாக்கப்பட்டு துடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டார், நாரதர்.
அங்கே, ஒரு வேடன் கையில் அம்புகளுடன் ஒரு மரத்தின் பின்னால் நின்றிருந்தான். கொடூரமாகத் தோன்றிய அந்த வேடனிடம் நாரதர் செல்ல, அவன் குறி பார்த்துக் கொண்டிருந்த மிருகங்கள் தப்பியோடின. கோபமுற்றான், வேடன்.
'யாரது?' என்றான், வேடன்.
'நீ யார்? விலங்குகளை ஏன் துடிக்கச் செய்து கொடுமைப் படுத்துகிறாய்?' என்றார், நாரதர்.
'என் பெயர் மிருகாரி. துடிக்கும் விலங்குகளைக் காண்பதில் எனக்கு மகிழ்ச்சி...' என்றான், வேடன்.
'கொல்லுதல் பாவம்! துடிக்கச் செய்தல் மகாபாவம்! இந்த விலங்குகள் அடுத்த பிறவியில், உன்னைக் கொல்லும்...' என்றார், நாரதர்.
'இது பாவமா! எனக்குத் தெரியாதே. இதிலிருந்து எப்படி விடுபடுவேன்?' என்று, மண்டியிட்டு வேண்டினான், வேடன்.
'முதலில் இந்த வில்லை உடைத்து விட்டு வா. என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறேன்...' என்றார், நாரதர்.
'வில்லை உடைத்து விட்டால், என் குடும்பத்தை எவ்வாறு பராமரிப்பேன்?' என்றான்.
'கவலைப்படாதே! உனக்குத் தேவையான தினசரி உணவை, நானே ஏற்பாடு செய்கிறேன்...' என்றார், நாரதர்.
இவ்வாறு உறுதியளித்தவுடன், வில்லை உடைத்து விட்டு, நாரதரின் பாத கமலங்களில் சரணடைந்தான், மிருகாரி.
'சொத்துகளை தானமளித்து, மனைவியுடன் நதிக்கரையில் ஒரு குடிசை அமைத்து வசிப்பாயாக. துளசிக்கு நீரூற்றி, கிருஷ்ண மந்திரத்தை ஜபியுங்கள்...' என ஆசிர்வதித்தார், நாரதர்.
நாரதரின் கடைக்கண் பார்வையால், குற்றுயிராக இருந்த விலங்குகள் உயிர்த்தெழுந்தன; ஆச்சரியமுற்றான், மிருகாரி.
பின்னர், மிருகாரியும் சொத்துகளை தானமளித்து விட்டு, மனைவியுடன் நதிக்கரையில் தங்கி, கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தான்.
இச்செய்தியை அறிந்த ஊர் மக்கள், அவர்களுக்கு தேவையான உணவை வழங்கினர்.
சிறிது காலத்திற்குப் பின், தன் நண்பர் பர்வத முனிவருடன், மிருகாரியைக் காணச் சென்றார், நாரதர்.
குருவைக் கண்ட மிருகாரி, அவரை நோக்கி ஓடினான். அவர்களுக்கு இடையில் கீழே நிறைய எறும்புகள் ஓடி கொண்டிருந்தன. ஒரு சிறிய துணியால், எறும்புகளை அகற்றிய பின், இரண்டு முனிவர்களையும் சாஷ்டாங்கமாக வணங்கினான், மிருகாரி.
முனிவர்களின் பாதங்களை நீரால் கழுவி, அந்நீரை அவனும், அவனது மனைவியும் பக்தியுடன் பருகினர். கண்ணீர் ததும்ப, உடல் நடுங்க பகவானின் மந்திரத்தைப் பாடி ஆடினான், மிருகாரி.
வேடனாக இருந்தபோது, விலங்குகள் துடிதுடித்து மரணிப்பதை ரசித்தவன், பக்தனாக மாறிய பின்னர், எறும்பிற்குக் கூட, துன்பம் இழைக்க மனமில்லாத இரக்க குணத்தைப் பெற்றான், மிருகாரி.
நாரதரைப் போன்ற துாய பக்தரின் கருணையும், பகவானின் திருநாமமுமே அவனது மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்.
ஒருவன் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், பக்தர்களின் சங்கத்தையும், பகவானின் மந்திரத்தையும் தீவிரமாக ஏற்றுக் கொண்டால், விரைவில் புனிதமடைந்து உயர்ந்த மனிதராக மாற முடியும்.
பக்தி தொண்டை ஏற்பதற்கு குலமோ, கல்வியோ, செல்வமோ மற்ற இதர தகுதிகளோ அவசியமில்லை. யாராக இருந்தாலும், பகவானின் நாமத்தால் துாய்மையடைய முடியும் என்பதற்கு, மிருகாரியின் கதை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- அருண் ராமதாசன்