PUBLISHED ON : மார் 02, 2025

ஆருணி, உபமன்யு இருவரும், ரிஷி தவும்யரின் சீடர்கள்.
ஒருமுறை ஆருணியிடம், வெள்ளம் புகாதபடி வயல், வாய்க்கால் மடையை அடைக்கச் சொன்னார், குரு.
வெள்ளத்தை அடைத்துப் பார்த்தார் முடியவில்லை. வேகமாக நீர் பாய்ந்து வந்ததால், மடையின் குறுக்கே படுத்து அடைத்தார், ஆருணி.
'எவ்வளவோ முயற்சித்தும் என்னால் முடியவில்லை...' என, குருவிடம் போய் நின்றிருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல், குரு வாக்கிற்குக் கீழ்ப்படிதலே முக்கியம் என, அறிந்திருந்தார்.
மாலை வேளை வந்தும், ஆசிரமத்திற்கு சீடர் வரவில்லை. சீடனின் பெயரைச் சொல்லி அழைத்தபடி, தேடி போனார், குரு. அவர் குரல் கேட்டு, நீருக்கடியில் இருந்த சீடர், குரல் கொடுத்தார்.
சீடனின் சிரத்தையைக் கண்டு, அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார், குரு. சீடனின் தலையில் கை வைத்து, 'உலகத்தில் உள்ள ஞானம் அனைத்தையும் நீ பெறுவாய்...' என, ஆசீர்வதித்தார்.
மற்றொரு சீடரான, உபமன்யுவை பரிசோதிக்கும் பொருட்டு, 'நான் உனக்கு உணவே கொடுப்பதில்லை. நீ எப்படி இவ்வளவு பெருத்திருக்கிறாய்...' என கேட்டார், குரு.
'நான் யாசகம் பெற்று சாப்பிடுகிறேன் குருவே...' என்றார், உபமன்யு.
'இனி யாசித்த உணவைச் சாப்பிடாதே...' என கூறிவிட்டார், குரு.
மாடு மேய்க்கும் பணி என்பதால், பாலைக் குடித்துப் பசியைத் தணித்துக் கொண்டார், உபமன்யு. அதுவும் கூடாது என கூறிவிட்டார், குரு.
பிறகு, அவர் கன்று உண்டு மீதமான நுரையை அருந்தினார். அதையும் மறுத்தார், குரு.
சீடருக்கு மிகுந்த பசி. என்ன செய்வதென்று தெரியவில்லை. வரும் வழியில் ஏதோ இலையைப் பறித்து சாப்பிட்டார். அதனால், கண் பார்வை போனது. வழி இடறி ஒரு கிணற்றில் விழுந்து விட்டார்.
உபமன்யுவை தேடி வந்தார், குரு. அவருக்கு அசுவினி தேவர்கள் மந்திரத்தை உபதேசித்து, அதை உச்சரிக்கச் சொன்னார். அப்படி செய்தவுடன், அவர் முன் தோன்றிய அந்தத் தேவர்கள், ஓர் அப்பம் தந்து, 'இதைச் சாப்பிடு, உடனே உனக்கு பார்வை வரும்...' என்றனர்.
'குருவின் அனுமதியின்றி எதுவும் உண்ண மாட்டேன்...' என்றார், உபமன்யு.
குரு அனுமதித்தவுடன் சாப்பிட்டார், உபமன்யு; பார்வை மீண்டது.
'எல்லா ஞானங்களும் உனக்குச் சித்திக்கும்...' என ஆசீர்வதித்தார், குரு.
பாரதம் போற்றும் இந்த சீடர்களிடம், சிறு விஷயத்திலும் கீழ் படிதல், நேர்மை, ஒளிவு மறைவு இல்லாத தன்மை போன்றவை இருந்தன.
நல்ல நுால்கள், நல்ல நண்பர்கள், சாதுக்கள் மற்றும் நல்லவர்கள் என, நல்லோர் சேர்க்கை வரும் போது, இந்தக் குணங்கள் எல்லாம் தானாக வருகின்றன.
அருண் ராமதாசன்