/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஞானானந்தம்: இறைவனை அதிகம் நினைப்பது யார்?
/
ஞானானந்தம்: இறைவனை அதிகம் நினைப்பது யார்?
PUBLISHED ON : ஏப் 13, 2025

பாண்டவர்களில் வில் வீரனான அர்ஜுனனின் மகன், அபிமன்யுவின் இல்லத்துக்கு வந்தார், ஒரு முனிவர். அப்போது, அபிமன்யு வீட்டில் இல்லை. இருப்பினும், அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தாள், அபிமன்யு மனைவி உத்தரை.
இதனால், மனம் மகிழ்ந்து, உத்தரைக்கு ஆசி வழங்கிய முனிவர், வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார்.
'இந்த மாயக் கண்ணாடியில், பார்ப்பவர் முகம் தெரியாது. பார்ப்பவருக்கு யார் பிரியமானவரோ, அவரது முகம் தான் தெரியும். ஒவ்வொருவரும் தங்கள் மனதில் யாருக்கு அதிக இடம் கொடுத்திருக்கின்றனர் என்பதை, அந்த கண்ணாடியை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்...' என்றார்.
மாய கண்ணாடியை உற்றுப் பார்த்தாள், உத்தரை. அவளது இதயத்தில் வீற்றிருக்கும் கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு, அந்த கண்ணாடியை பற்றி கேள்விப்பட்டு வியப்படைந்தான். அவன், கண்ணாடியை பார்த்த போது, அவன் மனைவி உத்தரையின் முகம் தெரிந்தது.
இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த நேரத்தில் அபிமன்யுவின் தாய் மாமனான, கண்ணன் அங்கு வந்தார்.
'இரண்டு பேரும் ஏதோ ஒரு கண்ணாடியைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களே... என்ன விஷயம்?' எனக் கேட்டார்.
ஒரு முனிவர் வந்து, அந்த கண்ணாடியை கொடுத்தது பற்றி விவரித்த அபிமன்யு, 'மாமா! நீங்களும் இந்த கண்ணாடியில் பாருங்கள். இதில் நீங்கள் தெரிய மாட்டீர்கள். உங்கள் மனதில் யார் நிறைந்திருக்கிறாரோ, அவர் தெரிவார்.
'உங்கள் மனதை கவர்ந்தது, என் அத்தை ருக்மணியா, பாமாவா என்று பார்க்கிறேன்...' என, வேடிக்கையாக சொன்னான், அபிமன்யூ.
புன்னகையுடன் கண்ணாடியின் எதிரில் நின்றார், கண்ணன். அப்போது, கண்ணாடியில் சகுனியின் உருவம் தெரிந்தது. அபிமன்யுவும், உத்தரையும் அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
'இதென்ன விந்தை? பாமா, ருக்மணியை விட, உங்கள் நினைப்பில் அதிகம் இருப்பது சகுனியா? நம்ப முடியவில்லையே...' என்றான், அபிமன்யு.
'அபிமன்யு! என்னை வணங்குபவர்கள் கூட, காரியம் ஆக வேண்டுமென்றால் தான் நினைப்பர். ஆனால், துாக்கத்தில் கூட என்னை வீழ்த்த வேண்டும் என்றே துடிக்கிறான், சகுனி. எப்போதும் அவனுக்கு என் நினைவு. அதனால் எனக்கும் அவன் நினைவு...' என்றார்.
தீவிர பக்தர்களுக்கு தான், கடவுள் நினைப்பு எப்போதும் இருக்கும். சில பேர் ஆதங்கத்துடன், 'அந்தக் கடவுளுக்கு கண் இல்லையா? இப்படி என்னை சோதிக்கிறாரே...' என்பர். அது, கடவுள் நிந்தனை இல்லை.
'நாம் பெரிதும் நம்பும் சக்தி, நமக்கு கை கொடுக்கவில்லையே...' என்ற ஆதங்கம் தான். உரிய நேரத்தில் கடவுள் உதவுவார் என்பது, அவர்கள் அறிந்ததே! ஆனாலும், விரக்தியில் அப்படி புலம்புவர்.
எந்த நேரமும் கடவுள் நினைப்பில் இருக்கும் பக்தர்களை, கடவுளும் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்!
அருண் ராமதாசன்