/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஞானானந்தம்: கண்ணன் என்னும் குழந்தை!
/
ஞானானந்தம்: கண்ணன் என்னும் குழந்தை!
PUBLISHED ON : ஏப் 27, 2025

பிறவியிலே கண்பார்வை இழந்தவர், சூர்தாசர். இளம் வயதில் கிருஷ்ண பஜனை பாடல்களை கேட்ட அவர், 'கண்ணன் எப்படி இருப்பார்?' என, பாடியவர்களிடம் விசாரித்தார்.
'கண்ணன் சிறு குழந்தை, கருநீல நிறத்தில் இருப்பான்; அவன் புன்னகை முகத்தைப் பார்த்தாலே நம் கவலைகள் மறைந்துவிடும்; தன் கையில் புல்லாங்குழல் வைத்துக் கொண்டு, அந்த இசையால் இந்த உலகத்தை இயங்கச் செய்பவன்...' என வர்ணித்தார், பாடகர்.
அன்று முதல், கண்ணனை தன் மனக்கண்ணில் பார்க்க ஆரம்பித்தார், சூர்தாசர். கண்ணனைப் போற்றிப் பாடல்கள் பாடினார். அந்த கீர்த்தனைகள், நாடு முழுவதும் புகழ்பெற ஆரம்பித்தன.
ராமபக்தரான துளசிதாசர், ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். சூர்தாசரின் கீர்த்தனைகளை கேட்டு தன்னையே மறந்தார், துளசிதாசர்.
சூர்தாசரைப் பாராட்டியவர், 'இனி, இருவரும் இணைந்து கீர்த்தனைகளை பாடுவோம்...' என, அவரை தன்னுடன் அழைத்து சென்றார், துளசிதாசர்.
அன்றிலிருந்து இருவரும் தினமும், கண்ணன் கோவிலுக்கு சென்று, அவனது கீர்த்தனைகளைப் பாடி வந்தனர். ஒருநாள் அவர்கள் இப்படிச் செல்லும்போது, ஊர் மக்கள் பயத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தனர்.
'என்ன ஆனது?' என விசாரித்தார், துளசிதாசர்.
'மதம் பிடித்த யானை, ஆக்ரோஷமாக வந்து, பலரை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் தான் எல்லாரும் ஓடுகிறோம். நீங்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்...' என்றனர், ஊர் மக்கள்.
மதம் பிடித்த யானை எப்படி இருக்கும் என, விசாரித்து அறிந்து, கலங்கினார், சூர்தாசர். அவரைத் தேற்றி, 'நமக்குள் கண்ணன் இருக்கும்போது என்ன கவலை?' எனக் கூறி, கண்ணனை நினைத்து தியானித்தார், துளசிதாசர்.
மதம் கொண்ட யானை, அவர் அருகே வந்து நின்றது. தியானத்தில் இருந்த துளசிதாசரை பணிந்து வணங்கி, வந்த வழியே அமைதியாக திரும்பி சென்றது.
சற்று நேரத்தில் தியானம் கலைந்து, கண் திறந்து பார்த்தார், துளசிதாசர். மக்கள் அனைவரும் அவரை வணங்கி நடந்ததை கூறினர்.
அதை கேட்டு, 'எல்லாம் கண்ணன் செயல், அவனை வணங்குங்கள்...' என்றார், துளசிதாசர்.
சூர்தாசரை காணாமல் அவரை தேடிய போது, ஒரு கடையின் மறைவில், இரண்டு கைகளையும் தன் நெஞ்சில் வைத்து, நடுக்கத்துடன் நின்றிருப்பதை கண்டார், துளசிதாசர்.
'நம்மைப் போலவே, சூர்தாசரும் கிருஷ்ண பக்தர் தானே! பிறகு ஏன் அவர் யானைக்கு பயப்பட வேண்டும்...' என்ற சந்தேகம் துளசிதாசருக்கு எழுந்தது. சூர்தாசரை கைப்பிடித்து அழைத்து வந்து, நடந்ததை கூறி, தன் சந்தேகத்தையும் கேட்டார்.
'துளசிதாசரே... நீங்கள் மிகப்பெரிய கிருஷ்ண பக்தர் தான். நான் ஒப்புக் கொள்கிறேன். உங்கள் மனதில் இருக்கும் கண்ணன், இளமையானவன், வலிமையானவன்; மதயானையை அவன் விரட்டி விடுவான்.
'ஆனால், பார்வையற்ற என் மனக்கண்ணில் உள்ள கண்ணன், சிறு குழந்தை. இந்த குழந்தை கண்ணன், அந்த மதயானையைப் பார்த்துப் பயந்து விட்டால் என்ன ஆவது? அதனால் தான், என் இரு கைகளையும் நெஞ்சில் வைத்து, யானையை அவன் பார்ப்பதை மறைத்துக் கொண்டேன்...' என, பணிவுடன் சொன்னார், சூர்தாசர்.
இதை கேட்டு, 'இதுதான் உண்மையான பக்தி...' என, ஆனந்தக் கண்ணீர் வடித்தார், துளசிதாசர்.
- அருண் ராமதாசன்