
பயனுள்ள சேவை!
சமீபத்தில், கிராமத்திலுள்ள உறவினரை சந்திக்க சென்றிருந்தேன்.
ஊருக்குள் நுழையும் போதே, ஒவ்வொரு வீதியின் துவக்கம் மற்றும் முடிவில், தனித்தனி கம்பம் நட்டு, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அதுபற்றி உறவினரிடம் கேட்டேன்.
'அரசு, தனியார் நிறுவனம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும், எங்கள் கிராமத்து இளைஞர்கள், ஆண்டுக்கு ஒருமுறை சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவர்.
'குறிப்பிட்ட தொகையை பகிர்ந்து, பள்ளி வகுப்பறைகளைச் சீரமைத்தல், ஏரி, குளங்களைத் துார் வாருதல், மரக்கன்றுகள் நட்டுப் பராமரித்தல் மற்றும் கோவில் கைங்கர்யங்களைச் செய்தல் என, கிராமத்திற்குத் தேவையான சேவைகளை செய்து வருகின்றனர்.
'அதன்படி, இந்த ஆண்டு அவர்கள் ஒன்று கூடி, கிராமத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தந்து, எல்லா வீதிகளிலும், 'சிசிடிவி' கேமராக்களை வாங்கிப் பொருத்தினர். அதற்கு மின் வசதி தரும் வீட்டாருக்கு, மின் கட்டணத் தொகையையும் தந்து விடுகின்றனர்...' என்றார்.
எல்லாவற்றையும் அரசு செய்யும் என்று காத்திருக்காமல், தன் கையே தனக்கு உதவி என்று, ஒன்றுபட்டு சேவை செய்யும், அக்கிராமத்து இளைஞர்கள் பாராட்டுக் குரியவர்கள்.
— வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
புதுமையான பிறந்தநாள் விழா!
ஊரிலுள்ள உறவினர் மகனின், முதல் பிறந்தநாள் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.
வேளாண் படிப்பு முடித்து, உள்ளூரிலுள்ள சொந்த நிலத்தில் விவசாயம் செய்து, வசதியாக வாழ்ந்து வருகிறார், நண்பர். விழாவுக்கு விமரிசையான ஏற்பாடு செய்திருந்தார்.
பரிசுப் பொருட்கள், மொய் அன்பளிப்புகளைத் தவிர்க்குமாறு கூறியிருந்தவர், விழாவில் கலந்துகொள்ள, அந்த கிராமத்தைச் சேர்ந்த, விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
வந்திருந்த விவசாய தொழிலாளர்களுக்கு, மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்து,கதிர் அரிவாள் என, விவசாயப் பணிக்கு உதவும் கருவிகளை, அன்பளிப்பாக வழங்கினார்.
அவருடைய செயல், புதுமையாக இருக்கவே, அதுபற்றி வினவினேன்.
'விழா நாளன்று மட்டும் விசேஷ வீட்டாரை நினைவூட்டும், வழக்கமான தாம்பூலப் பைகளைத் தராமல், அன்றாடம் அவர்களுக்கு பயன்படக் கூடிய பொருளைத் தரவேண்டும் என முடிவு செய்தேன். அதான் இந்த பொருட்களை தந்துள்ளேன்...' என்றார்.
பயனுள்ள முறையில் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய உறவினரை, மனதாரப் பாராட்டினேன்!
— ஆ.வீரப்பன், திருச்சி.
திருமணநாள் பரிசு!
சமீபத்தில், நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். குடும்பமாக அமர்ந்து, அரிசி மற்றும் மளிகை சாமான்களை, தனித்தனி பைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அதுபற்றி, நண்பரிடம் விசாரித்தேன்.
'எங்களின் திருமண நாள், என் பிள்ளைகளின் பிறந்த நாள் அன்று, எங்கள் பகுதியிலுள்ள ஏழைக் குடும்பத்தினருக்கு, மளிகைப் பொருட்களை தானம் செய்வதை, வழக்கமாக வைத்திருக்கிறோம்.
'அன்னதானமாக செய்யும் போது, சிலருக்கு அது பிடிக்காமல் போகலாம். கூட்டத்தில் வாங்குவதற்கு, சிலர் தயங்கலாம் என்பதால், இப்படி செய்து வருகிறோம்.
'இன்று, எங்கள் திருமண நாள். வீடு வீடாகச் சென்று, ஒரு வாரத்திற்கான மளிகைப் பொருட்களை வழங்கி வருவோம். அதற்காகத்தான் தயார் செய்து கொண்டிருக்கிறோம்...' என்றார்.
தானம் பெறுபவரின் கோணத்தில் சிந்தித்ததோடு, அவர்களின் சுயமரியாதையையும் காக்க எண்ணிய, நண்பரின் மனிதாபிமானத்திற்கு, மனதார பாராட்டுக்களைத் தெரிவித்து, திருமண நாள் வாழ்த்தும், கூறி வந்தேன்.
— -வெ.பாலமுருகன், திருச்சி.

