
வங்கிக்கடனை முழுமையாக அடைத்த பின்...
சமீபத்தில், ஒரு தனியார் வங்கியில் இருந்து, எனக்கு போன் செய்து, 'உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சம்மதமென்றால், 10 நிமிடத்தில் உங்கள் வங்கி கணக்கில் பணம் ஏறிவிடும்...' என்றனர்.
நான், உடனே, 'எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல், எனக்கு எப்படி பணம் கொடுப்பீர்கள்?' எனக் கேட்டேன்.
'நீங்கள் எதுவும் தர வேண்டாம், எல்லாமே எங்களிடம் உள்ளது. உங்கள் ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது. அதனால், நீங்கள் சரி என்று சொன்னால், உடனடியாக கடன் தருகிறோம்...' என்றனர்.
'என்னுடைய, 'டாக்குமென்ட்' உங்களிடம் எப்படி வந்தது?' என்றேன்.
'நீங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன், எங்கள் வங்கியில், 'டூ-வீலர் லோன்' வாங்கினீர்கள். அதற்காக கொடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் எங்களிடம் தான் உள்ளது. முந்தைய கடனை முழுவதுமாக கட்டிவிட்டீர்கள். அதனால், உங்களுக்கு கடன் தருகிறோம்...' என்றனர்.
ஒருவர் வாங்கிய கடனை அடைத்த பின், அந்த வங்கி, கடன் வாங்கியவர்களின் ஆவணங்களை வைத்துக் கொண்டு, அடுத்தடுத்து கடன் தர முயற்சிப்பது சரியா? 'கடன் நிலுவையில் இல்லை' என, சான்றிதழ் வழங்கிய உடனே, கடன் கட்டியவரின் சான்றுகளை அழித்து இருக்க வேண்டாமா?
டிஜிட்டல் முறையில் ஏகப்பட்ட தவறுகள் நடக்கிறது. இதில், தனியார் வங்கியில் வாங்கிய கடனை முறையாக அடைத்தாலும், நம், 'டாக்குமென்ட்'களை அப்படியே வைத்திருக்கின்றனர்.
இதை ரிசர்வ் வங்கி அனுமதிக்க கூடாது. ஒவ்வொரு முறை கடன் வாங்கும் போதும், புதிதாக, 'டாக்குமென்ட்'கள் தருவது போல, நடைமுறையை ரிசர்வ் வங்கி அமல்படுத்த வேண்டும். அதுவே, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
மாற்ற யோசித்த புகைப்பட கலைஞர்!
என் உறவினரின் மகன், புகைப்படக் கலைஞராக இருக்கிறார். சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ வைத்து, தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் அவரை சந்திக்க, அந்த போட்டோ ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தேன்.
அந்த ஸ்டுடியோவின் ஒரு பகுதியில், ஏராளமான பொம்மைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதுபற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'ஸ்டுடியோ வாயிலாக கிடைக்கிற வருமானம், குடும்ப பொருளாதாரத்துக்கு போதுமானதாக உள்ளது. இருந்தாலும், கூடுதலா சம்பாதிச்சா, நிறைய சேமிச்சு, எதிர்காலத்துல நிறைவா வாழ முடியும்ன்னு தோணுச்சு.
'அதுக்காக என் தொழில் சார்ந்து, என்ன செய்யலாம்ன்னு யோசிச்சேன். நான், போட்டோ - வீடியோ எடுக்கப் போற எல்லா விழாக்களிலும் பரிசு பொருட்கள் தருவது நினைவுக்கு வந்துச்சு.
'அதையே கூடுதல் தொழிலா செய்யலாமே என, என், ஸ்டுடியோவிலேயே பரிசுப் பொருட்கள் விற்பனையையும் செஞ்சிக்கிட்டு வர்றேன். என்னோட வாடிக்கையாளர்கள் மற்றும் மற்றவர்களும் வந்து, பரிசுப் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இப்போது, 'பிசினஸ்' நல்லாவே நடக்குது...' என்றார்.
மாற்றி யோசித்து, மன நிறைவு தரும்படியான வருமானத்தை ஈட்டி வரும் உறவினர் மகனை, மனதார வாழ்த்தி வந்தேன்.
வெ.பாலமுருகன், திருச்சி.
இளைஞரின் வித்தியாசமான முயற்சி!
தெருவில் இளைஞர் ஒருவர், 'செடி பராமரிப்பு... செடி பராமரிப்பு...' என, கூவி வந்தார்.
அவரது வாகனத்தில் கடப்பாரை, மண் வெட்டி, பூச்சி மருந்து, உரம் மற்றும் பூச்செடிகள் இருந்தன.
அது வித்தியாசமான வேலையாக தெரிந்ததால், அது குறித்து அவரிடம் கேட்டேன்.
'சிறு வயதில் தந்தை மறைந்து விட்டார். எங்கள் குடும்பத்தை கைதுாக்கி விட, ஆட்கள் இல்லை. வீட்டருகே இருந்த நர்சரியில் பணிக்கு சேர்ந்தேன். அவர்கள் குறைவான சம்பளம் தந்தனர். அந்த சம்பளம், சாப்பாடு செலவுக்கும் மற்றும் வீடு வாடகைக்கும் சரியாகவே இருந்தது.
'அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நிறைய வாடிக்கையாளர்கள், ஆசை ஆசையாக செடி வாங்கி செல்கின்றனர். அந்த செடிகள் ஒழுங்காக வளர்வதில்லை என, திரும்ப வந்து கூறுகின்றனர். அவர்களிடம் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், கால இடைவெளி விட்டு உரம், மருந்து போட வேண்டும் என்றும் கூறுவோம்.
'அப்படி வருபவர்கள் திரும்ப வந்து, 'நீங்கள் கூறியபடி செய்தோம். செடி நன்றாக வளர்கிறது. ஆனால், குழந்தையை போல் பராமரிக்கத்தான் நேரம் இருப்பதில்லை...' என்றனர்.
'அதை கருத்தில் கொண்டு, இதையே ஒரு தொழிலாக செய்யலாமே என நினைத்தேன். செடிகள் வைத்திருக்கும் வீடுகளில் அவற்றை பார்வையிட்டு, செடிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல், ஒரு தொகை பேசினேன். மாதத்திற்கு ஒரு முறை, களை எடுத்தல், உரம் வைத்தல், மருந்து தெளித்தல் என செய்து வருகிறேன். இதனால் மாதம்தோறும், 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்...' என்றார்.
அதை கேட்டு வியந்து, அவரை மனதார பாராட்டினேன், நான்.
வாழ்க்கையில் வருமானம் போதவில்லை, கஷ்ட ஜீவன்தான் நடத்த முடிகிறது என இருப்பவர்கள், சற்று வித்தியாசமாக யோசித்து அதை செயல்படுத்தினால், வாழ்வில் விரைவில் முன்னேறலாம் என்பதற்கு, இதுவே நல்ல ஒரு உதாரணம்.
ம.காவியா, கோவை.