sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 08, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணத்தில் அரசியல் வேண்டாமே!

அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரான நண்பர், தன் மகள் திருமணத்தை கட்சித் தலைவரின் தலைமையில் நடத்த முடிவு செய்து, ஆடம்பரமாக ஏற்பாடு செய்தார்.

திருமணத்தன்று, தலைவர் வந்து தான் தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என, காத்திருந்தார். ஆனால், தாலி கட்டும் நேரம் வந்தும், தலைவர் வரவில்லை.

பொறுமையிழந்து, 'நல்ல நேரம் முடியப் போகுது. தலைவர் வர்ற போது வரட்டும். தாலியை கட்டச் சொல்லுங்க...' என்றனர், மாப்பிள்ளை வீட்டார்.

மாப்பிள்ளை வீட்டாரின் எண்ணப்படி, நண்பர் செயல்பட முயல, தலைவரின் தொண்டர் படையோ, 'பின் ஏன் எங்கள் தலைவர் தான், தாலி எடுத்து தரணும்ன்னு சொன்னீங்க. தலைவர் வந்த பின் தான், அது ராகு காலமாகவே இருந்தாலும், தாலி கட்டணும். இல்லேன்னா, கடைசி வரை கல்யாணமே நடக்க விடாமல் செய்திடுவோம்...' எனக் கூக்குரலிட்டனர்.

இதை கேட்ட மாப்பிள்ளை வீட்டார், என் நண்பரோடு வாதம் செய்தனர். இரு வீட்டாருக்கும் இடையே பெரும் மனஸ்தாபம் ஏற்பட்டதில், திருமணத்தை நிறுத்தி விட்டனர், மாப்பிள்ளை வீட்டார். அதுமட்டுமில்லாமல், 'நாங்கள் வேறு இடத்தில் பெண் பார்த்து கொள்கிறோம். அரசியல் தொடர்புடைய இந்த சம்பந்தம் எங்களுக்கு வேண்டாம்...' எனச் சொல்லி சென்று விட்டனர்.

இப்போது வரை, வேறு வரனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார், நண்பர்.

அரசியல் தொடர்புடைய நண்பர்களே... திருமண நிகழ்ச்சியில் அரசியலை கலந்து, என் நண்பரைப் போல் தவித்து நிற்காதீர்கள்.

— கே.பிரபாகரன், கோவை.

நல்ல மனிதர்!

கடந்த வாரம் நண்பரது வீட்டுக்கு சென்றேன். அவரது ஊர், மெயின் ரோட்டில் இருந்து, சுமார் 2 கி.மீ., துாரத்தில் இருக்கிறது.

ஊரின் இணைப்பு சாலையில் இருந்து, வரிசையாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மற்றும் 'கட்-அவுட்' வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து, 'இறந்த நபர் பெரிய ஆள் போல...' என, நினைத்து கொண்டேன்.

பின்னர், நண்பரிடம் அது குறித்து கேட்டேன்.

'அவர், எங்கள் ஊருக்கு தண்ணீர் திறந்து விடுபவர். ஊரில் மொத்தம், 10 தெருக்கள் இருக்கின்றன. 10 தெருவுக்கும், ஊரின் பொது நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, அவர் தான் தெரு வாரியாக, நேரம் தவறாமல் சரியாக தண்ணீர் திறந்து விடுவார்.

'ஏதாவது தெருவில், திருமணம், காது குத்து மற்றும் புதுமனை புகுவிழா விசேஷம் என, அவரிடம் கூறினால், தண்ணீர் தேவைப்படும் நேரத்தை கேட்டு, அச்சமயம் தண்ணீர் திறந்து விடுவார்.

'எனக்கு தெரிந்து, 20 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வந்தார். இதுவரை யாரிடமும், ஒரு ரூபாய் கூட, அவர் லஞ்சம் பெற்றதில்லை.

'யாராவது காசு தந்தால், 'இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். லஞ்சம் தருவதும் குற்றம், பெறுவதும் குற்றம். லஞ்சம் தந்து சமுதாயத்தை கெடுக்காதீர்கள். நான் என் கடமையை தான் செய்கிறேன்...' என்பார்.

'தீபாவளி, பொங்கல் தினங்களில், ஸ்வீட் பாக்ஸ் தந்தால் கூட, வாங்காமல் சென்று விடுவார். அப்பேர்பட்ட மனிதர் மறைவுக்கு, தெருவாசிகள் அனைவரும், தங்கள் வருத்தத்தை தெரிவித்து, 'போஸ்டர், கட்-அவுட்' வைத்திருக்கிறோம்...' என்றார்.

அதைகேட்டு வியந்து போனேன்.

'லஞ்ச பேய்கள் இருக்கிற இந்த சமுதாயத்தில், லஞ்சம் பெறாத நேர்மையான நல்ல மனிதரின் மறைவு, உண்மையாக வேதனை தருகிறது...' என்றேன்.

நல்ல மனிதர்களின் இழப்பு, சமுதாயத்துக்கு பெரிய இழப்பு தானே வாசகர்களே!

— ப.சிதம்பரமணி, கோவை.

இளம் தம்பதியரை பிரிக்கலாமா?

தன் மகனுக்கு சில மாதங்களுக்கு முன், திருமணம் முடித்து வைத்தார், நண்பர். பிடிவாத குணம் கொண்ட அவருக்கும், அவரது சம்பந்திக்கும் ஏதோ பிரச்னை காரணமாக, பிணக்கு ஏற்பட்டு விட்டது.

அது, நண்பர் வீட்டிலும் அவ்வப்போது எதிரொலித்தது. சின்ன, சின்ன சண்டையில் ஆரம்பித்து, பின் பெரிதாகி விட, மகளை அழைத்து சென்று விட்டார், சம்பந்தி.

'அப்பெண் போனால் போகட்டும். வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்...' என, மகனிடம் கூறியுள்ளார், நண்பர்.

'ஏன், உன் மருமகள் அவங்க அம்மா வீட்ல இருக்கறா?' என, எவரேனும் கேட்டால், 'உங்கள் வேலையை பாருங்கள்...' என, அதட்டல் பதில் தரும் நண்பரை, அதற்கு மேல் எவரும் கேட்பதில்லை. நாட்கள் வாரமாகி, மூன்று மாதங்களாகியும், சம்பந்திகள் கோபம் தணியவில்லை.

இந்நிலையில், தனித்தனியே இருந்த நண்பரின் மகனும், மருமகளும் தங்களது பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்துப் பேசி, எவரிடமும் சொல்லாமல், தாங்களே ஒரு வீட்டைப் பார்த்து தனிக் குடித்தனம் சென்று விட்டனர்.

சேதியறிந்து அதிர்ச்சியுற்ற சம்பந்திகள் இருவரும் அங்கு சென்று, தம் மகன், மகளை அழைக்க, 'உங்கள் கவுரவப் பிரச்னைக்காக, எங்கள் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ள தயாரில்லை...' என, நெத்தியடியாய் கூறி அனுப்பி விட்டனர்.

பெரியவர்களே, இளம் தம்பதியரை பிரித்து, 'வாழ்கிற பிள்ளைகளை பெற்றோர் கெடுத்தாற்போல்' என்ற பழமொழியை உண்மையாக்கிட வேண்டாமே!

'ஈகோ' பிடித்த சம்பந்திகள் சிந்திப்பரா?

— எஸ்.தியாகராஜன், திருவண்ணாமலை.






      Dinamalar
      Follow us