sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 15, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 15, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரவு பயணத்தில் உ.பா., வேண்டாமே!

சமீபத்தில், எங்கள் நண்பனின் திருமணத்திற்காக சேலத்திலிருந்து, திருநெல்வேலிக்கு தனியார் பஸ்ஸில் புறப்பட்டோம். உ.பா., ஏற்றிக் கொண்டு ஜாலியாக பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.

எல்லாருமே, 'புல் டைட்'டில் இருந்ததால், பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே துாங்கி விட்டோம். காலையில் விழிப்பு வந்தபோது பார்த்தால், எங்கள் வண்டி நெடுஞ்சாலையில் ஒரு ஓரமாக நின்றிருந்தது.

பஸ்ஸில் நாங்கள் மட்டுமே இருந்தோம். அவசர, அவசரமாக நண்பர்களை எழுப்பினேன். பஸ்ஸின் முன்புறம் எஞ்சின் பாகத்தைப் பிரித்துப் போட்டு, பழுது நீக்குவதில் ஈடுபட்டிருந்தனர். பதட்டமாக விசாரித்தோம்.

பஸ், 'பிரேக் டவுண்' ஆகி விட்டதாகவும், அதனால், பயணியரை, அடுத்து வந்த அவர்களது டிராவல்ஸ் நிறுவன பஸ்களில் மாற்று ஏற்பாடு செய்து ஏற்றி அனுப்பி உள்ளனர். உ.பா., மயக்கத்தில் இருந்த எங்களை எழுப்பியும், எழும்பாததால் மாற்று வண்டியில் அனுப்பி வைக்க முடியாமல் போய் விட்டதாகவும் கூறினர். நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ளும் எங்கள் திட்டம், 'அம்பேல்' ஆனது.

இரவுப் பயணம் மேற்கொள்ளும் உற்சாகபான ஆர்வலர்களே... உங்கள் பயணத்தை ஜாலியாக அனுபவிக்க நினைத்து, உ.பா., உட்கொள்ளாதீர்கள்.

எம்.மதியழகன், சேலம்.

காலம் கடந்தால் என்ன?

நாற்பது வயதை கடந்து விட்ட எனக்கு, 12 வயதில் ஒரு பெண்ணும், தற்போது இரண்டு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். 30 வயதில் திருமணம் நடந்தது.

என் வயதையும், சின்ன குழந்தை இருப்பதையும் அறியும் சிலர், 'உங்களுக்கு இத்தனை வயசாகிறதா? இப்பத் தான் குழந்தை பிறந்திருக்கா... அவுங்க பெரிசாகிறதுக்குள்ளே உங்களுக்கு ரொம்பவும் வயசாகிடுமே...' என்கின்றனர். அவர்களது மனதை பொசுக்கும் கேலியான பேச்சுக்களையும், ஏளனப் பார்வைகளையும் பார்த்து மனம் கலங்குகிறது.

சமீபத்தில், என் கல்லுாரி நண்பனைப் பார்த்தேன். நலம் விசாரித்தார். குழந்தைகள் பற்றி அவர் விசாரிப்பதற்குள், அந்த தாழ்வு மனப்பான்மை என்னை வறுத்தெடுக்க, என் மனப் புழுக்கத்தை அவரிடம் சொன்னேன்.

'எனக்கு, 36 வயதில் திருமணம் ஆயிற்று. இரண்டு ஆண்டுகள் சென்றதும் தான், முதல் குழந்தை. அப்புறம் தற்போது தான், என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். 20 - 25 வயசில் திருமணமாகி, உடனுக்குடன் குழந்தைகளை பெற்று விடுபவர்கள் ஏனோ, தானோ என, சீக்கிரத்தில் வாழ்வில் சலித்து விடுகின்றனர்.

'இந்த வயதில் குழந்தை பெற்றிருப்பதில், நாம் பேரானந்தம் அடைய வேண்டும். குழந்தைகள் மீது அபரிமிதமான பாசமும், குடும்ப நேசமும் மேலும் மேலும் தழைக்கும். நீங்கள் இனிமேல் தலை நிமிர்ந்து நடங்கள்...' எனச் சொல்லி, என்னை உற்சாகப்படுத்தினார்.

இப்போதெல்லாம், ஆணோ, பெண்ணோ, 30 வயதுக்கு பின் தான் திருமணமே செய்து கொள்கின்றனர்.

எனவே, வாய் பேச்சு வீரர்களை அலட்சியப்படுத்தி, வாழ்வை சந்தோஷமாக நடத்துவோம்!

ஆர்.ராமச்சந்திரன், சென்னை.

கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டுமா?

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்த நண்பரை காண சென்றேன்.

அவரிடம், 'நீங்கள், மூன்று ஆண்டுக்கு முன், 7 சென்ட் இடம் வாங்கி இருந்தீர்களே, அங்கே போய் பார்வையிட்டீர்களா...' என்றேன்.

'அந்த இடத்தில் தகர, 'ஷீட்' போட்டு, 'லேபர் ஷெட்' ஆக்கி, அப்போதே வாடகைக்கு விட்டு விட்டேன். ஆழ்துளை கிணறு மற்றும் மின்சார வசதியும் செய்து இருக்கிறேன்...' என்றார்.

'என்னது, 'லேபர் ஷெட்'டா... யாருக்கு?' என, கேட்டேன்.

'பக்கத்து இடத்தில், 5 சென்ட் இடம் வாங்கிய நபர், 'வீடு கட்ட போகிறேன். சிமென்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்கள் வைப்பதற்கும், பணியாளர்கள் தங்குவதற்கும், இடம் வசதி இல்லை. ஆகவே, தங்களது இடத்தில், ஓலை குடிசை போட்டுக் கொள்கிறேன். மாதம் தோறும் இடம் வாடகையாக, 500 ரூபாய் தருகிறேன்...' என்றார்.

'நானும் சம்மதித்தேன். அவரது வீடு வேலை முடிந்ததும், அந்த ஓலை குடிசை அப்படியே இருந்தது. இன்னொரு நபர், சைட்டில் வீடு கட்டப் போவதாக கூறி, அந்த குடிசையை வாடகைக்கு கேட்க ஒப்புக் கொண்டேன்.

'அவர், மாதம் தோறும், 1,000 ரூபாய் வாடகை தந்தார். அப்போது, நமக்கு ஏற்கனவே சொந்த வீடு இருக்கிறது. இந்த இடத்தில் இப்போது வீடு கட்ட போவதில்லை. 'லேபர் ஷெட்' போட்டு வைத்தால், இந்த ஏரியாவில் வீடு கட்டுபவர்கள் வாடகைக்கு வருவர். இடமும் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என யோசித்தேன்.

'எனவே, நிரந்தரமாக, தகர, 'ஷீட்' போட்டு, மின்சாரம், ஆழ்துளை கிணறு என, ஏற்பாடு செய்து விட்டேன். அந்த இடத்தில், 30 பேர் தங்கலாம். சிமென்ட், கம்பி என, பிற கட்டுமான சாமான்கள் வைப்பதற்கும் இடம் இருக்கிறது.

'அப்பகுதியில் வீடு கட்டுபவர்கள், 'ஷெட்'டை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். நியாயமான வாடகை வாங்குகிறேன். மின் கட்டணத்தை அவர்களே கட்டிக்கொள்ள வேண்டும். அடுத்தடுத்து, வீடு கட்டும் வேலை நடந்து வருகிறது. அனைத்து வீடுகளும் கட்டி முடித்ததும், 'ஷெட்'டை எடுத்து விட்டு, வீடு கட்டி, வாடகைக்கு விடலாம் என இருக்கிறேன்...' என்றார்.

வியந்து போன நான், சூப்பரான ஐடியாவாக இருப்பதாக கூறி, நண்பரை பாராட்டினேன்.

— பி.என்.பத்மநாபன், கோவை.






      Dinamalar
      Follow us