sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 22, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விட்டுக் கொடுத்தால்...

எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து, 10 நாட்களுக்கு பின், அலுவலகத்திற்கு வந்தவரிடம் மிகப்பெரிய மாற்றம் தெரிந்தது.

எப்போதும் கையில் சிகரெட்டுடன் காட்சியளிப்பவர், சிகரெட் இல்லாமல் இருந்தார். அதற்கான காரணத்தை கேட்டேன்.

'திருமணம் முடிந்து ஓரிரு நாட்களுக்குப் பின், 'உங்களுக்கு என்னிடம் பிடிக்காத பழக்கம் ஒன்றை கூறுங்கள்; நான் விட்டு விடுகிறேன். உங்களிடம் எனக்கு பிடிக்காத பழக்கம் ஒன்றை, நான் கூறுகிறேன்; அதை, நீங்கள் விட்டுவிட வேண்டும்...' என, அன்பா கேட்டாங்க, என் மனைவி.

'நானும் சம்மதித்தேன்... 'நீ, 'டிவி'யில் மெகா சீரியல் அதிகம் பார்க்கக் கூடாது'ன்னு சொன்னேன். அதற்கு ஒத்துக்கிட்டாங்க. அதற்கு பதில், என் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட சொன்னாங்க. நானும் விட்டு விட்டேன்.

'சிகரெட் பிடிக்காததால், உடல் சற்று தெம்புடன் இருப்பதாக உணர்ந்தேன். எனவே, மற்ற நண்பர்களையும் புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து மாற்ற முயற்சித்து வருகிறேன்...' என்றார்.

விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை என்பதை, கணவன் - மனைவி இருவரும் உணர்ந்து செயல்பட்டால், வாழ்க்கையில் உயரலாம் என்பதற்கு, இந்த புதுமண தம்பதிகளே சிறந்த எடுத்துக்காட்டு!

— பி.ராஜன், சிவகங்கை.

மாமியாரை வசப்படுத்த...

சமீபத்தில், தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். தோழியும், அவரது மாமியாரும் மிகவும் அன்யோன்யமாக பழகுவதை பார்த்து, ஒரு கணம் திகைத்தேன்.

இதுபற்றி அவளிடம் கேட்டதற்கு, 'பெரியவங்க, தங்கள் வயசான காலத்தில் மருமகளிடமிருந்து எதிர்ப்பார்ப்பது பணத்தையோ, பொருளையோ கிடையாது; தங்களுடன் அவள் பகிர்ந்து கொள்ளும் அன்பான வார்த்தைகள் தான்.

'இந்த அன்பான வார்த்தைகள் சில சமயம், நாம் அவர்களுக்கு கொடுக்கும் ஒரு சில இடையூறுகளை கூட நிறைவாக்கி, நம் மீது பாசம் ஏற்பட துணை புரியும்.

'இந்த, 'சிம்பிள் லாஜிக்'குக்குள் அடங்கியுள்ள மகத்துவத்தை உணர்ந்து, அதை நடைமுறைப்படுத்தினேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன்...' என்ற தோழியை, மனதாரப் பாராட்டினேன்.

நீங்களும், அன்பான பேச்சின் மூலம், பெரியவர்களின் நன்மதிப்பை பெற்று, சண்டை, சச்சரவில்லாத நிறைவான மகிழ்ச்சியை, உங்கள் குடும்பத்திற்கு தேடிக் கொடுங்களேன்!

சியாமளா இளங்கோ, பெங்களூரு.

இளைஞர்களின் வித்தியாசமான முயற்சி!

சில நாட்களுக்கு முன், என் நெருங்கிய நண்பன் அழைத்ததையடுத்து, அவனுடைய அப்பார்ட்மென்ட்டுக்கு சென்றிருந்தோம். தரைத்தளத்தில், 'ஷாமியானா' போடப்பட்டு, விழாக்கோலம் பூண்டிருந்தது, அப்பார்ட்மென்ட்.

சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பங்கேற்ற நொண்டி ஓட்டம், வினாடி வினா, வார்த்தைகள் அமைப்பது, ஒரே தீக்குச்சியில் அதிக மெழுகுவர்த்திகள் ஏற்றுவது, அன்றாட மளிகைப் பொருட்களின் விலை கண்டுபிடித்தல், உள்ளங்கையில் தண்ணீர் எடுத்து சென்று பக்கெட்டை நிரப்புவது என, சுவாரசியமான விளையாட்டுக்கள் நடைபெற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு, அப்பார்ட்மென்ட் அசோஸியேஷன் சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பான மதிய உணவுக்கு பின், கடைசியாக தம்போலா அதிர்ஷ்ட விளையாட்டும் நடைபெற்றது. இரண்டு பெண்கள் உட்பட, ஆறு இளைஞர்கள் தான் இப்போட்டிகள் அனைத்தையும் நடத்தினர்.

அவர்களிடம் பேசியபோது, வாரத்தில், ஐந்து நாட்கள் கடுமையான வேலைக்கு பின், சினிமா, 'பிக்னிக்' செல்வது மற்றும் ஊர் சுற்றுவதற்கு பதிலாக, இந்த மாதிரி செய்வது மனநிறைவு தருவதாக கூறினர்.

அடுத்த, இரண்டு மாத ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வெவ்வேறு அப்பார்ட்மெண்ட்டுகளில், 'புக்' ஆகி, இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞர்களே... மன அழுத்தத்தை குறைக்க, நீங்களும் இவ்வாறு முயற்சி செய்யலாமே!

— பூவை சுபவாணன், கோவை.






      Dinamalar
      Follow us