
ராகவா லாரன்ஸின் புதிய மிரட்டல்!
காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களை இயக்கி, 'ஹிட்' கொடுத்த, ராகவா லாரன்ஸ், தற்போது அப்படத்தின், நான்காவது பாகத்தையும் இயக்கி, நடித்து வருகிறார்.
மேலும், முந்தைய படங்களில் இடம்பெற்ற காட்சிகளின் எந்த சாயலும் இல்லாத வகையில், இந்த படத்தை புதுமையான, 'ஹாரர்' கதையில் இயக்கி வருவதாக கூறுகிறார்.
'என் முந்தைய படங்களில் மனித ஆவிகளை தான் பார்த்திருப்பர். ஆனால், இந்த படத்தில், டிஜிட்டல் ஆவியையும் பார்க்க போகின்றனர். அந்த அளவுக்கு இந்த படம், புதுமையான முறையில் ரசிகர்களை மிரட்ட போகிறது...' என்கிறார், லாரன்ஸ்.
சினிமா பொன்னையா
தன்னையே நொந்து கொள்ளும், அதர்வா!
மறைந்த நடிகர் முரளியின் மகனான, அதர்வா, இன்னும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கவில்லை. 'இதற்கு காரணம் வேறு யாரும் இல்லை நான் தான்...' என்கிறார்.
காரணம் கேட்டால், 'எனக்கு இன்னும் சரியான கதைகளை தேர்வு செய்ய தெரியவில்லை. நான் பிடிக்கவில்லை என, திருப்பி அனுப்பிய கதைகளில், வேறு நடிகர்களை நடிக்க வைத்து, அந்த படங்களெல்லாம், 'சூப்பர் ஹிட்' ஆகி உள்ளன. ஆனால், நான் நம்பி நடித்த கதைகள், தோல்வி அடைந்து விடுகின்றன. அதனால் தான் மார்க்கெட்டில் பின்தங்கியே இருக்கிறேன்...' என்கிறார், அதர்வா.
— சி.பொ.,
மகளையும் களமிறக்கிய, ஊர்வசி!
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர், நடிகை ஊர்வசி. மலையாள நடிகையான இவர், தென் மாநில சினிமா மட்டுமின்றி, ஹிந்தி சினிமா வரை நடித்து, புகழ்பெற்றவர்.
சமீபகாலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வரும், ஊர்வசி, தன்னுடைய மகள், தேஜ லட்சுமியையும் தற்போது மலையாளத்தில், சுந்தரி அவள் ஸ்டெல்லா என்ற படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். அதோடு, தன்னைப் போலவே மகளையும், குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தியுள்ளார், ஊர்வசி.
— எலீசா
மீண்டும் தமிழுக்கு வந்த, ஸ்ரீநிதி ஷெட்டி!
கேஜிஎப் படத்தில் நடித்த கன்னட நடிகையான, ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமுக்கு ஜோடியாக, கோப்ரா என்ற படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் தோல்வி அடைந்து விட்டது.
தற்போது, அஜித் நடிக்கும், 64வது படத்தின் மூலம், மீண்டும், 'ரீ-என்ட்ரி' கொடுத்துள்ளார், ஸ்ரீநிதி ஷெட்டி.
'இந்த முறை, கர்நாடகாவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன். தமிழ் சினிமாவில், 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தே தீருவேன்...' என, 'சொடக்' போடுகிறார். அந்த வகையில், ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா மோகன் மற்றும் ருக்மிணி வசந்த் வரிசையில், நான்காவது கன்னட நடிகையாக தமிழ் சினிமாவில் மையம் கொண்டுள்ளார், ஸ்ரீநிதி ஷெட்டி.
— எலீசா
ரசிகர்களுக்கு, 'அட்வைஸ்' கொடுக்கும், அஜித்குமார்!
முன்பெல்லாம் தான் நடித்த படங்கள், ரசிகர்களை முழுமையாக, 'என்ஜாய்' பண்ண வைக்க வேண்டும் என, மட்டுமே நினைத்த, அஜித்குமார், தற்போது சில காட்சிகள் இளைஞர்களுக்கு, 'அட்வைஸ்' கொடுப்பது போலவும் இருக்க வேண்டும் என, இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.
அதே சமயம், 'அது, 'அட்வைஸ்' ஆக தெரியக் கூடாது. நேரடியாக கருத்து சொன்னால், அவர்களுக்கு கசந்து விடும். அதனால், மருந்து கொடுத்தாலும் தேனில் கலந்து கொடுப்பது போல் இருக்க வேண்டும்...' என்றும் கேட்டுக் கொள்கிறார், அஜித் குமார்.
— சினிமா பொன்னையா
கருப்பு பூனை...
* உலக நடிகர் நடித்த, இரண்டு படங்கள் படுதோல்வி அடைந்து விட்டதை அடுத்து, அடுத்தபடியாக சமீபத்தில், வெற்றி படங்களை கொடுத்த, இரண்டு இளவட்ட இயக்குனர்களிடம் தனக்கு கதை தயார் செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், அந்த இயக்குனர்களோ, நடிகரின் தோல்வி தங்களையும் தொற்றிக் கொள்ளும் என, 'நீங்கள் நடிப்பது போன்ற, 'மெச்சூரிட்டி'யான கதைகள் எங்களிடம் இல்லை. காதல் கதைகள் தான் வைத்திருக்கிறோம்...' எனச் சொல்லி, 'எஸ்கேப்' ஆகி, நடிகருக்கு செம, 'ஷாக்' கொடுத்து விட்டனர்.
* விஜயமான அந்த தெலுங்கு நடிகரை, புஷ்பா நடிகை காதலித்து வரும் நிலையில், மற்ற நடிகர்களுடன் கேரவனுக்குள் அமர்ந்து, ஓவராக அம்மணி அரட்டை அடித்தால், அம்மணியுடன் அவர் சகஜமாக பேசாமல், முகத்தை திருப்பிக் கொள்கிறாராம்.
அதோடு, 'இதுபோன்ற கேரவன் அரட்டையை விட்டு விடு...' என்றும் அம்மணிக்கு தடை உத்தரவு போடத் துவங்கி இருக்கிறார். இப்படி காதலிக்கும் போதே, நடிகர் கெடுபிடி பண்ணத் துவங்கி இருப்பதால், அவர் மீது சமீபகாலமாக அதிருப்தியில் இருந்து வருகிறார், நடிகை.
சினி துளிகள்!
* குபேரா படத்தில், 'ஆக்ஷன்' காட்சிகள் தவிர, மற்ற காட்சிகளில் நடித்த போது, ரொம்ப ஜாலியாக, தனுஷ் ஜோக் அடித்துக் கொண்டே இருந்ததாக கூறுகிறார், ராஷ்மிகா மந்தனா.
* தக்லைப் படத்தை அடுத்து, இரட்டை இயக்குனர்கள், அன்பு - அறிவு இயக்கும், 'ஆக்ஷன்' படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார், கமலஹாசன்.
* தற்போது, மும்பையில் தன் பழைய வீட்டை இடித்து, அதில் புதிய வீடு கட்டி வருகிறார், ஷாருக்கான். அதன் காரணமாக மாதம், 24 லட்ச ரூபாய் வாடகை கொடுத்து, ஒரு வீட்டில் குடியேறி இருக்கிறார்.
அவ்ளோதான்!